சாலை விபத்தை தடுக்கும் சிறப்பு கருவி -மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு


சாலை விபத்தை தடுக்கும் சிறப்பு கருவி -மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 12:33 PM GMT (Updated: 27 Nov 2021 12:33 PM GMT)

கடந்த 2017-ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பேருந்தும், பள்ளி பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் பலர் உயிரிழந்தனர். ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து விசாகப்பட்டினம் காயத்ரி வித்யா பரிஷத் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்களை கவலை அடைய செய்தது.

பிரதீப் வர்மா, ரதன் ரோஹித், கியான் சாய் ஆகிய மூவரும் இந்த சம்பவத்திற்குப் பிறகு அத்தகைய விபத்துகளைத் தடுக்க முடிவு செய்தனர். அச்சமயத்தில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்றுவந்த மூவரும் விபத்துகளைத் தடுக்கும் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினர்.

கடின முயற்சிக்குப் பிறகு இப்போது அதிநவீன கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) மூலம் இயங்கும் இந்த சாதனம் வாகனம் இயங்கும்போது ஓட்டுநரை எச்சரித்து விபத்தில் இருந்து காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்தக் கருவிக்கு ‘கே-ஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டியின் செயல்பாடுகள் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிக்கப்படுகிறது. அவர் தூக்க கலக்கத்தில் இருக்கும் பட்சத்தில் கருவி அலாரம் அடித்து எச்சரிக்கை விடுக்கிறது. அதுமட்டுமின்றி வாகனத்தின் இருப்பிடம், வேகம், என்ஜின் செயல்பாடுகளையும் கண்காணிக்கிறது. பிரத்யேக கேமராக்கள் ஓட்டுநர் மற்றும் சாலையை ஒரே நேரத்தில் கண்காணித்து எச்சரிக்கை விடுக்கிறது.

இந்தக் கருவியைக் காரில் பொருத்திவிட்டால் என்ஜின் தகவல்களை வீட்டில் இருந்தபடியே செயலி மூலம் கண்காணிக்க முடியும். பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருக்கும் இந்தப் புதுமையான கருவியைக் கண்டுபிடித்த மூன்று மாணவர்களை முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பாராட்டி இருக்கிறார். இந்தியாவில் ஆண்டுக்கு 4.5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 53 சாலை விபத்துகளும், நான்கு நிமிடங்களுக்கு ஓர் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

70 சதவிகிதத்திற்கும் அதிகமான விபத்துகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பயணத்தின்போது தொலைபேசியைப் பயன்படுத்துதல், கண் அயர்ச்சி மற்றும் கவனமின்மை போன்றவற்றால் ஏற்படுகின்றன. இதைக் குறைக்கவே கே ஷீல்டு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த கருவியை சந்தைப்படுத்த உள்ளனர்.

Next Story