கணவன் மனைவியை அடிப்பது நியாயமா...? இந்தியர்கள் என்ன சொல்கிறார்கள்...? ஆய்வில் தகவல்


கணவன் மனைவியை அடிப்பது நியாயமா...? இந்தியர்கள் என்ன சொல்கிறார்கள்...? ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 27 Nov 2021 12:45 PM GMT (Updated: 27 Nov 2021 12:45 PM GMT)

18 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்ட ஆய்வில் கணவன் அடிப்பது நியாயமானதா? என்ற கேள்வி கேட்கபட்டது.

புதுடெல்லி,

பெண்களின் கருவுறுதல் விகிதங்கள் குறைந்து வருவதன்  மூலமும், அவர்களின் வங்கிக் கணக்குகள் வளர்ச்சியடைவதன் மூலமும் அவர்கள் அதிக அதிகாரம் பெற்றவர்களாக ஆகலாம். ஆனாலும்  தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை தக்குதல்கள் இருந்து வருகின்றன் என சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்து உள்ளது.

18 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்ட ஆய்வில் கணவன், மனைவியை அடிப்பது  நியாயமானதா?  என்ற கேள்வி கேட்கபட்டது.

புதன்கிழமை, இந்த ஆய்வுகளின் முடிவு வெளியிடப்பட்டது. அசாம், ஆந்திர மாநிலம், பீகார், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மராட்டியம் , மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இதில் பங்கேற்றன.

மனைவி கணவனிடம் கூறாமல் வெளியே சென்றால், வீட்டையோ குழந்தைகளையோ புறக்கணித்தால், மனைவி கணவனுடன் வாதிட்டால்,  கணவனுடன்  உடலுறவுக்கு மறுத்தால், மனைவி உணவை சரியாக சமைக்கவில்லை என்றால், மனைவி  துரோகி என்று சந்தேகப்பட்டால்,  மாமியார்களை மதிக்கவில்லை என்றால் என மனைவியை அடிப்பதற்கான காரணங்கள் ஆய்வில் பட்டியலிடப்பட்டது.

இதில்  83.8 சதவீத பெண்கள், ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிப்பதை ஏற்கலாம் என கூறி தெலுங்கானா முன்னணியில் உள்ளது.  அதே நேரத்தில் இமாச்சல பிரதேசத்தில் 14.8 சதவீதம் என குறைவாக உள்ளது.  

ஆண்களில் கர்நாடகா முன்னணியில் உள்ளது, 81.9% பேர் இத்தகைய நடத்தை நியாயமானது என்று கூறியுள்ளனர், இமாச்சலப் பிரதேசத்தில் 14.2% பேர் உள்ளனர்.  

ஆந்திரமாநிலம்  (83.6%), கர்நாடகா (76.7%), மணிப்பூர் (65.7%), கேரளா (65.9%) ஆகியவை குடும்ப வன்முறையை நியாயப்படுத்தும் பெண்களின் அதிக சதவீதத்தைக் கொண்ட மாநிலங்களாகும்.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ஆண்கள்  குடும்ப வன்முறையை முறையே 14.2% மற்றும் 21.3%  மிகக் குறைவாக ஏற்றுக்கொள்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 2018- ல் இந்தியா முழுவது நடத்தப்பட்ட ஆய்வில்  பெண்களில் 52% கணவன் தனது மனைவியை அடிப்பது நியாயமானது என்று கருதினாலும், 42% ஆண்கள் மட்டுமே அதனை ஒப்புக்கொண்டனர்.

 சமீபத்திய ஆய்வில் மணிப்பூர், குஜராத், நாகாலாந்து, கோவா, பீகார், அசாம், மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா, நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 18 மாநிலங்களில் 13 மாநிலங்களில் உள்ள பெண்கள் 'மாமியார்களுக்கு அவமரியாதை செய்தால், கணவன் மனைவியை அடிக்கலாம் ' என்பதை தேர்ந்தெடுத்துள்ளனர். 

இதுகுறித்து பெண்கள் உரிமைகளுக்காகப் போராடும்  பாப்புலேஷன் பர்ஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சாரதா  கூறும் போது, “குடும்பத்துக்கும் கணவருக்கும் சேவை செய்வதே தங்களின் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் மனதில் இந்த வகையான ஆணாதிக்க மனநிலை ஆழமாகப் பதிந்துள்ளது” என்று கூறினார்.

Next Story