உலகை உலுக்கிய தொற்று நோய்கள்


உலகை உலுக்கிய தொற்று நோய்கள்
x
தினத்தந்தி 29 Nov 2021 6:22 PM GMT (Updated: 29 Nov 2021 6:22 PM GMT)

கொரோனா வைரஸ் உலகையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் உலகையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. மருத்துவ உலகம் இந்த நோய்க்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசி மட்டும் தற்போதைக்கு தீர்வாக கருதப்படுகிறது.

மனித வரலாற்றை திரும்ப பார்க்கையில் அண்மைக்காலத்தில் அச்சுறுத்திய சார்ஸ், எபோலா வைரஸ் மட்டும் அல்லாது, கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை வரலாற்றின் பக்கங்களில் பார்க்க முடிகிறது. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கொள்ளை நோய்கள் உலகை வாட்டி வதைத்துள்ளன.

1665-ம் ஆண்டு புபோனிக் பிளேக் லண்டன் மக்கள் தொகையில் 20 சதவீதத்தினரை பலி வாங்கியது. இந்த நோய்க்கு நாய்களும், பூனைகளும் காரணம் என கருதி இந்த விலங்குகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டன. தேம்ஸ் நதிக்கரை முழுவதும் நோய் பரவியது.

1817-ம் ஆண்டு முதல் காலரா நோய் தாக்கியது. அடுத்த 150 ஆண்டுகளில் தொடர்ந்து ஆறு காலரா நோய் அலை உண்டாகி 10 லட்சம் பேரை பலி கொண்டது. ரஷ்யாவில் இருந்து தொடங்கியதாக கருதப்படுகிறது. கலப்பட உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவிய காலரா நோய் கிருமி, ஆங்கிலேயர்கள் மூலம் இந்தியாவிலும் பரவியது.

1855-ம் ஆண்டும் மூன்றாம் பிளேக் சீனாவில் தொடங்கி இந்தியா, ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளை தாக்கிய புபோனிக் பிளேக் 1கோடி மக்களை பலி கொண்டது. யூனானில் சுரங்கப்பகுதியில் தொடக்கத்தில் ஈக்கள் மூலம் பரவிய இந்த நோய், பின்னர் இந்தியாவில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

1875-ம் ஆண்டு பிஜி தட்டம்மை நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பிஜி தீவுகள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்த பிறகு விக்டோரியா மகாராணியின் சார்பாக ஒரு அரசக்குழு ஆஸ்திரேலியா சென்று வந்தது. அப்போது தட்டம்மை தாக்கம் இருந்தால் இந்தக்குழு தன்னுடன் நோயை கொண்டு சென்றதால் அது மேலும் பரவியது. நோயின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் கிராம மக்கள் ஆங்காங்கே செத்து மடிந்தனர்.

1889-ம் ஆண்டு ரஷ்ய காய்ச்சல் புளு காய்ச்சலின் முதல் தீவிர தாக்குதல் சைபீரியாவில் தொடங்கி மாஸ்கோவை தாக்கியது. பின்னர் போலாந்து, பின்லாந்தையும் தாக்கியது. இந்த நோய் தாக்கியதில் 3 லட்சம் பேருக்கு மேல் பலியானார்கள்.

1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் ஐரோப்பாவை உலுக்கியது. அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளையும் தாக்கியது. லட்சக்கணக்கானோர் பலியானார்கள்.

1957-ம் ஆண்டு ஆசிய காய்ச்சல் ஹாங்காங்கில் தொடங்கி சீனாவில் பரவியது. பின்னர் அமெரிக்காவிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. 10 லட்சம் பேரை உலக அளவில் பலி வாங்கியது. அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் பலியானார்கள்.

1981-ல் முதலில் கண்டறியப்பட்ட எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி அழித்தது. எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் காய்ச்சல், தலைவலி, லிம்ப் நோய், வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளை பெற்றனர். இந்த நோய் உலகை உலுக்கியது. நோயின் தாக்கத்தை குறைக்க சிகிச்சை உருவாக்கப்பட்டாலும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

2003-ம் ஆண்டு சார்ஸ் நோய், வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றியது. சீனாவிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மூச்சுதிணறல், இருமல், தலைவலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் கொண்டது. இருமல், தும்மல் மூலம் பரவியது. பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது. அண்மை காலத்தில் பறவை காய்ச்சல், எபோலா வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ்களும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிலை யில் தற்போது கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடிய நோய்க்கு நிரந்தர தீர்வு இதுவரை காணப்படவில்லை. எனினும் தடுப்பூசி திட்டம் பலனை தந்துள்ளது. இது தற்காலிகமானது என்றாலும், விரைவில் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்புவோம்.

Next Story