உடல்மொழி வெளிப்படுத்தும் ரகசியங்கள்


உடல்மொழி வெளிப்படுத்தும் ரகசியங்கள்
x
தினத்தந்தி 30 Nov 2021 3:40 PM GMT (Updated: 30 Nov 2021 3:40 PM GMT)

ஒருவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவருடைய சைகைகள், முக பாவனைகள், செயல்பாடுகளை கொண்டு அவர் எத்தகைய மன நிலையில் இருக்கிறார் என்பதை யூகித்துவிட முடியும். இத்தகைய வாய் மொழி வார்த்தைகள் இல்லாத வெளிப்பாடு ‘உடல் மொழி’ எனப்படுகிறது.

வாய் வார்த்தைகள் என்பது யோசித்து, நிதானமாக பேசும்போது வெளிப்படுபவை. ஆனால் உடல்மொழி அப்படிப்பட்டதல்ல. உள்ளுணர்வின் அடிப்படையில் சட்டென்று நொடிப்பொழுதில் ‘பளிச்’சென்று வெளிப்பட்டுவிடும். ஒருவருடைய உடல்மொழியை கொண்டு அவருடைய சுபாவங்கள், குணாதிசயங்களை மதிப்பீடு செய்து விடலாம். உடல்மொழிகள் எந்த மாதிரியாக வெளிப்படுகின்றன என்று பார்ப்போம்.

ஆடை

உடுத்தும் ஆடை ஒருவரின் தோற்றத்தை, மதிப்பை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். செல்லும் இடத்திற்கு ஏற்ப ஆடை தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அலுவலகத்திற்கு விரும்பிய ஆடைகளை அணிந்து செல்ல முடியாது. குறிப்பாக ஸ்டைலாக ஆடை அணியக் கூடாது.

தொடுதல்

அறிமுகம் இல்லாத நபர்களை முதன் முதலாக சந்திக்கும்போது கை குலுக்குவதில் தவறில்லை. இரு கைகளை கூப்பி வணக்கம் செலுத்துவதுதான் சரியானது. நெருங்கி பழகுபவர்களிடம் அவருடைய சுபாவத்தை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்ளலாம். முதுகில் தட்டிக்கொடுப்பது, தோளில் கை போடுவது போன்ற செய்கைகளை அவர் அனுமதிக்கும் பட்சத்தில் தொடரலாம். அலுவலகத்தில் சக ஊழியர் உங்களுடன் எந்த அளவுக்கு நெருக்கத்தை பேணுகிறாரோ, அதற்கேற்பவே நடந்து கொள்ள வேண்டும். சிலர் தொட்டு பேசுவதை ஏற்றுக்கொள்வார்கள், சிலர் விரும்ப மாட்டார்கள்.

கண்கள்

ஒருவரிடம் பேசும்போது அவரின் கண்களை பார்த்து பேச வேண்டும் என்பார்கள். கேட்பவரும், பேசுபவரின் கண்களை பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்காக அவருடைய கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. பார்வையை அங்கும், இங்கும் கொஞ்சம் நகர்த்தலாம். அதேவேளையில் கண்களை பார்க்காமல் பேசுவது அவ மரியாதையாகவும், உண்மையை மறைப்பதாகவும் கருதப்படுகிறது.

முகம்

அறிமுகமான நபர், அறிமுகமற்ற நபர் என யாரை சந்தித்தாலும் மறக்காமல் புன்னகையை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் நட்பையும், உறவையும் பேணுவதற்கு உதவும். நெருக்கடியான சூழ்நிலையையும் புன்னகை மாற்றி விடும்.

கை-கால்கள்

ஒருவரிடம் பேசும்போது கைகளை அசைத்து பேசுவது உற்சாகத்தின் வெளிப்பாடாக அமையும். கூட்டங்களில் பிறர் முன்னிலையில் பேசும்போது உடல் மொழியை வெளிப்படுத்த வேண்டும். கைகளை அசைத்த நிலையில் பேசுவது சிறப்பானது. அதற்காக எப்போதும் கைகளை அசைத்தபடி பேசுவது ‘ஓவர் ஆக்டிங்’ அல்லது முதிர்ச்சியற்ற தன்மையின் வெளிப்பாடாக அமைந்துவிடும். கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்தபடியோ, பின்புறம் மறைத்துவைத்த நிலையிலோ பேசுவதும் கூடாது. கால்களும் உங்களின் உடல் மொழியை மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்தி விடும். சிலர் பேசும்போது கால்கள் தடுமாற்றமடையும். அது பதற்றம், படபடப்பின் வெளிப்பாடாக அமையும். ஆதலால் கால்களை நேரான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சைகைகள், மேனரிசங்கள் வழியாக ஒவ்வொருவரின் உடல் மொழியும் வெளிப்படும். மற்றவர்களிடம் இருந்து மாறுபடவும் செய்யும். அவற்றை மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வதற்கேற்ப சரியான சமிக்ஞைகளை வெளிப்படுத்துவது நல்லது.

தலை
ஒருவர் பேசும்போது அவருடைய பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை உடல் மொழியால் வெளிப்படுத்த வேண்டும். அவரது கண்களை பார்ப்பதோடு மட்டுமின்றி தலையை அசைத்தபடியும் கேட்கலாம். அப்படி தலையசைப்பது அவரது பேச்சை சுவாரசியமாக கேட்கிறோம் என்பதற்கான அடையாளமாகும். தலையை நிமிர்ந்தபடி வைத்திருப்பது தன்னம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதற்காக எப்போதும் தலையை உயர்த்தியபடியே வைத்திருக்கக்கூடாது. அது தலைக்கனம் பிடித்தவர் என்ற எண்ணத்தை மற்றவர் மத்தியில் உருவாக்கிவிடும். எப்போதும் தலையை குனிந்த நிலையில் வைத்திருந்தால் அது தன்னம்பிக்கை குறைவாக இருப்பதை வெளிக்காட்டும்.


Next Story