உதவி கேட்டு, உலகை சுற்றி பார்த்தவர்...!


உதவி கேட்டு, உலகை சுற்றி பார்த்தவர்...!
x
தினத்தந்தி 4 Dec 2021 5:02 PM GMT (Updated: 4 Dec 2021 5:02 PM GMT)

உதவி (லிஃப்ட்) கேட்டு, சிலர் இந்தியாவை சுற்றி வந்த கதைகள் நிறைய படித்திருப்போம். ஆனால் 20 வயது இளைஞர் சுபம் யாதவ், கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார். தனது பயண அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்தபடியே, உதவி (லிஃப்ட்) கேட்டு, உலகையே சுற்றி வந்திருக்கிறார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் யாதவ். இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தச் சேனலை தற்போது 1.69 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். உதவி கேட்டே, உலக நாடுகளை சுற்றி வருவதும், அந்த பயண அனுபவத்தை யூடியூப் வீடியோவாக பதிவதுமே, இவரது ஸ்டைல். அந்த வகையில் இதுவரை 40 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்துள்ளார். அந்தப் பயணங்களின்போது பெரும்பாலும் ஒரு பையில் நான்கு துணிகள், ஒரு டென்ட் மற்றும் படம் எடுக்க பயன்படும் சாதனங்கள் ஆகியவற்றை மட்டும் எடுத்து செல்கிறார்.

பல நாடுகளில் செயல்படும் கறுப்பு பண சந்தை முதல் ஒசாமா பின்லேடன் முன்பு தங்கியிருந்த வீடு வரை இவர் பார்த்துள்ளார். அத்துடன் பல நாட்கள் பாலைவனத்தில் நடந்தும், உதவி கேட்டும் சென்றுள்ளார்.

தன்னுடைய பயணம் குறித்து அவர் பேசுகையில், “நான் என்னுடைய யூடியூப் சேனலை 2019-ல் மங்கோலியாவில் இருக்கும்போது தொடங்கினேன். அங்கு ஒரு பழங்குடியின நபரை பார்த்தவுடன் எனக்கு இந்த ஆசை வந்தது. அவர்கள் அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்ததை கேட்டபிறகு எனக்கும் அப்படி ஒரு ஆசை வந்தது” எனக் கூறியுள்ளார்.

இவர் பயணத்திற்கு செலவு செய்வது, விசா போன்ற பயண ஆவணங்களுக்கு மட்டுமே. அதன்பின்னர் மற்றவற்றிற்கு இவர் பிறரையே நாடியுள்ளார். அதாவது லிஃப்ட் கேட்டு செல்லும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.

தினமும் இவருக்கு ஆகும் செலவு 500 ரூபாய் மட்டுமே. பயணங்களின்போது பெரும்பாலும் தெரு ஓரங்களிலும், காவல்நிலையங்களிலும் சில நாட்கள் படுத்து தூங்கியுள்ளார். சில சமயங்களில் இவருக்கு உதவும் நபர்கள் அவரை அவர்களுடைய வீட்டில் தங்க வைத்துள்ளதாகக் கூறுகிறார்.

இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், கம்போடியா, மங்கோலியா, ரஷியா, சீனா எனப் பல நாடுகளுக்கு விமானம் இல்லாமல் தரை வழியாக இவர் பயணம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மேற்கு ஆசியா வழியாக ஆப்பிரிக்க கண்டத்திற்கு இவர் தரைவழியாகப் பயணம் செய்துள்ளார். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இவர் பயணம் செய்தபோது இவரை ஓர் உளவாளி என்று ஆப்கான் ராணுவம் 8 மணி நேரம் சிறை பிடித்துள்ளது. அதன்பின்னர் இவர் பற்றிய உண்மை அறிந்து விடுவித்துள்ளது.


Next Story