பெண் குழந்தை பிறந்தால் இலவச மருத்துவம்


பெண் குழந்தை பிறந்தால் இலவச மருத்துவம்
x
தினத்தந்தி 7 Dec 2021 7:58 AM GMT (Updated: 7 Dec 2021 7:58 AM GMT)

தனது மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை கட்டணம் வசூலிக்காமல் இலவசமாகவே பிரசவம் பார்க்கிறார், டாக்டர் கணேஷ் ராக். கடந்த 9 ஆண்டுகளாக சுமார் இரண்டு ஆயிரம் பெண் குழந்தைகள் இவரது மருத்துவமனையில் பிறந்துள்ளன. சுக பிரசவம், சிசேரியன் என எந்த சிகிச்சை முறையில் பெண் குழந்தை பிறந்தாலும் கட்டணம் வசூலிப்பதில்லை என்பதை கொள்கை முடிவாகவே பின்பற்றி வருகிறார்.

டாக்டர் கணேஷ் ராக், மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். மல்யுத்த வீரராக வேண்டும் என்பதுதான் அவரது சிறு வயது லட்சியமாக இருந்திருக்கிறது. அவரது தந்தை ரெயில் நிலையத்தில் கூலி வேலையும், தாயார் வீட்டு வேலையும் செய்து குடும்பத்தை நிர்வகித்திருக்கிறார்கள்.

‘‘நான் சிறுவயதில் மல்யுத்த வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். ‘நீ மல்யுத்த வீரரானால் சமைக்கும் உணவு முழுவதையும் சாப்பிட்டுவிடுவாய். மற்றவர்களுக்கு சாப்பிட உணவிருக்காது’ என்று என் அம்மா சொல்வார். உன் அப்பாவை போல் கூலி வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடும். நன்றாக படித்து நல்ல வேலையில் சேர வேண்டும் என்று கூறுவார்.

நான் என் தந்தையுடன் ரெயில் நிலையம் சென்று அவருக்கு உதவி இருக்கிறேன். அந்த பணி எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்ததும் படிப்பில் கவனம் செலுத்தினேன். நன்றாக படித்து மருத்துவராகிவிட்டேன். ஆரம்ப காலத்தில் பகல் வேளையில் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு இரவில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தேன். மருத்துவ படிப்பு படித்தபோதும் மருத்துவமனைகளில் இரவு ஷிப்ட் வேலை பார்த்தேன்’’ என்பவர் 2007-ம் ஆண்டு மருத்துவமனை தொடங்கி இருக்கிறார்.



 
பெண் குழந்தை பிறக்கும்போது குடும்பத்தினர் வெறுப்பு காட்டுவதும், மருத்துவ சிகிச்சை கட்டணம் செலுத்துவதற்கு முணுமுணுப்பதும் கணேஷ் ராக்கை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது. இதையடுத்து 2012-ம் ஆண்டு முதல் பெண் குழந்தைகள் பிறந்தால் கட்டணம் வசூலிப்பதில்லை என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார்.

‘‘பெரும்பாலான பெற்றோர்கள் ஆண் குழந்தைகள் மீதுதான் பற்று வைத்திருக்கிறார்கள். மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வரும்போது தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று என்னிடம் கேட்பார்கள். நான் அதை கடவுள்தான் தீர்மானிப்பார் என்று பதில் சொல்வேன். குழந்தையின் பாலின விஷயத்தில் மருத்துவர் களால் எதுவும் செய்ய முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை. குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியிலும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

பிரசவ அறையில் ஆண் குழந்தை பிறந்தால் எல்லா வலிகளையும் மறந்து விடுவார்கள். பெண்ணாக இருந்தால் குடும்பத்தினர் தரும் மன வலியை நினைத்து அழ ஆரம்பித்து விடுவார்கள். குடும்பத்தினரும், உறவினர்களும் ஆண் குழந்தையாக இருந்தால் கொண்டாடுவார்கள். பெண்ணாக இருந்தால் தாயை புறக்கணித்துவிடுவார்கள். ஆண் குழந்தையாக இருந்தால் மருத்துவ கட்டணத்தை மகிழ்ச்சியுடன் செலுத்துவார்கள். பெண்ணாக இருந்தால் முணுமுணுப்பார்கள்.

எனக்கு சகோதரி இல்லை. நான் இரண்டு சகோதரர் களுடன் வளர்ந்தேன். சோலாப்பூரில் உள்ள எனது கிராமத்தில் பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். பெண் குழந்தை வீட்டுக்கு சுமையாக கருதப்பட்டது. இத்தகைய பாரபட்சமான பழக்கவழக்கங்களை பார்த்து வளர்ந்ததால் பிறக்கும் பெண் குழந்தையை கொண்டாடவும், பிரசவத்திற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் முடிவு செய்தேன்’’ என்கிறார்.

பெண் குழந்தை பிறந்தால் மருத்துவமனையில் கேக் வெட்டி நோயாளிகள் உள்பட அனைவருடன் மகிழ்ச்சியை பரிமாறும் வழக்கத்தையும் பின்பற்றி வருகிறார்.

தற்போது பெண் குழந்தை பிறப்பு விஷயத்தில் குடும்பத்தினரின் மன நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார். ‘‘பெண் குழந்தை பிறந்தால் சிலர் தாமாகவே முன் வந்து மருத்துவ கட்டணத்தை செலுத்த விரும்புகிறார்கள். ஆனாலும் நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை.

பெண் குழந்தை பெற்றெடுத்திருப்பவர்களுக்கு பணம் தேவைப்பட்டால் அதனை வழங்குமாறு சொல்கிறோம். இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தாலும் கட்டணம் வசூலிப்பதில்லை. இரட்டையர்களில் ஒரு குழந்தை ஆணாக இருந்தால் 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கிறோம்’’ என்றும் சொல்கிறார்.

Next Story