பாறு கழுகுகள்


பாறு கழுகுகள்
x
தினத்தந்தி 11 Jan 2022 3:33 PM GMT (Updated: 11 Jan 2022 3:33 PM GMT)

பிணந்தின்னி கழுகுகள் இயற்கையில் மடியும் எல்லா உயிரினங்களையும் உணவாகக்கொண்டு காட்டையும் நாட்டையும் துப்புரவு செய்துவருகின்றன.

சென்னையில் 1950-களில் காகத்தின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையில் பிணந்தின்னி கழுகுகள் என்று அழைக்கப்படும் பாறு கழுகுகள் இருந்தன. பட்டிதொட்டியெங்கும் இந்த வகை கழுகுகளை மிகச்சாதாரணமாக பார்க்க முடிந்தது. இறந்த சடலங்கள் கிடந்தால், அவற்றுக்கு எப்படித்தான் தெரியுமோ. சட்டென்று கூட்டமாக பறந்துவந்து, சடலம் இருந்த இடம் தெரியாமல் தின்று துப்புரவு செய்வது அவற்றினுடைய அடிப்படை பண்பு.

ஆறறிவு படைத்த மனிதர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பையைச் சேர்த்துக் கொட்டி ஊரை நாற்றக்காடாக்கி கொண்டிருக்கிறோம். ஆனால், பிணந்தின்னி கழுகுகள் இயற்கையில் மடியும் எல்லா உயிரினங்களையும் உணவாகக்கொண்டு காட்டையும் நாட்டையும் துப்புரவு செய்துவருகின்றன. இப்படி அவை சடலங்களை உண்பதால், காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கின்றன.

மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ள கோமாரி உள்ளிட்ட பயங்கரமான நோயில் வீழ்ந்த கால்நடைகளை உண்டபோதுகூட, பாறு கழுகுகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்ததில்லை. ஆனால், இன்றைக்கு தமிழகத்தின் ஒரேயொரு பகுதியில்தான் பாறு கழுகுகளைப் பார்க்க முடிகிறது. இந்த மோசமான அழிவு 90-களுக்கு பிறகு நிகழ்ந்த அதிவேக மாற்றம்.

இப்படி அவை வீழ்ந்து போனதற்கு அடிப்படை காரணம் ஒரு வகை வலிநிவாரணி. மூட்டுவலி, தசைவலிகளுக்கு வெளியில் தடவும் மருந்தாக இப்போதும் இதை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த மருந்து கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. தொடர்ச்சியாக வலிநிவாரணி செலுத்தப்பட்ட கால்நடை இறக்கும்போது, அவற்றின் உடலெங்கும் இந்த வலிநிவாரணி எச்சமாக தேங்கி கிடக்கிறது. இந்த சடலத்தை உண்ணும் பாறு கழுகுகளை, அந்த வலி நிவாரணி கொல்கிறது. 1960-களில் ஒருவகை பூச்சிக்கொல்லியால் அமெரிக்காவில் மொட்டை கழுகுகள் வேகமாக அழிந்ததைப்போல, பாறு கழுகுகளும் கூட்டம்கூட்டமாக இறக்க ஆரம்பித்தன. இன்றைக்கு நாடு முழுவதுமே பாறு கழுகுகள் அருகிவிட்டன.

கால்நடைகளுக்கு இப்போது, அந்த வகை வலி நிவாரணி தடை செய்யப்பட்டுவிட்டாலும், அது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. இயற்கையாக இறந்த விலங்குகளை புதைக்காமலும் எரிக்காமலும் கழுகுகளுக்கு இரையாக விட வேண்டும். இறந்த சடலங்களின் மேல் விஷம் தடவுவது தண்டனைக்குரியது என்பது ஒரு பக்கம், அவற்றை உண்டு கழுகு மட்டுமில்லாமல் வேறு பல காட்டு உயிரினங்களும் மடிகின்றன.

ஐந்தாண்டுகளாக பாறு கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பாறு கழுகுகள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் ஒன்றையும் தமிழக வனத்துறை உருவாக்கி உள்ளது. இது போன்ற நம்பிக்கை தரும் முயற்சிகள் மீண்டும் பாறு கழுகுகள் வானில் வட்டமிடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story