பிரிக்க முடியாத பனையும், பொங்கலும்...


பிரிக்க முடியாத பனையும், பொங்கலும்...
x
தினத்தந்தி 14 Jan 2022 11:14 PM GMT (Updated: 14 Jan 2022 11:14 PM GMT)

உச்சி முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடியது, பனை மரம்.

உச்சி முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடியது, பனை மரம். தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பரவலாகவும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் பனை மரங்கள் உள்ளன. ஒரு பனையில் இருந்து 70 வகையான பொருட்கள் கிடைக்கிறது. தென் மாவட்ட மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த பனைப் பொருட்கள், பொங்கலிடுதலிலும் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. சில மாற்றங்களை உள்வாங்கினாலும், இன்றளவும் அந்த பிணைப்பு அசைக்க முடியாததாகவே உள்ளது. பொங்கல் திருநாளில் அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பே மக்கள் வீடுகளில் கிழக்கு நோக்கி நின்று பொங்கலிடுவார்கள். இதற்காக அவா்கள் பயன்படுத்துவது பனை ஓலையைத் தான். அதுவும் புதியதாக வெட்டி, சில நாட்கள் காயவைக்கப்பட்ட புதிய பனை ஓலையால் பொங்கல் வைப்பார்கள்.

அரிசி, வெல்லம் எல்லாம் போட்ட பிறகு, பொங்கலை கிளறி விடுவதற்கு, அகப்பைக்கு பதிலாக, பனை மட்டையை பயன்படுத்துபவர்களும் உண்டு. இதனால் பொங்கலின் சுவை கூடும் என்றும் பெரிய வா்கள் சொல்ல கேட்க முடியும். அதே போன்று பனங்கிழங்கை பொங்கலிட்ட அடுப்பில் வைத்து சுட்டு படையலில் வைப்பார்கள். பொங்கலை சாப்பிடுவதற்காக பனை ஓலையை சிறிது சிறிதாக வெட்டி கரண்டிகளாக பயன்படுத்துவர். பனை மரம் அதிகம் உள்ள தென்மாவட்டங்களில் கருப்பட்டி உற்பத்தி அதிகம். கருப்பட்டியை கொண்டே பொங்கலிட்ட வரலாறும் உண்டு. இந்தக் கருப்பட்டி பொங்கல், கால மாற்றத்தில் வெல்லத்துக்கு மாறிப்போனது.

இப்படி பொங்கலோடு பின்னிப்பிணைந்திருந்தது பனை மரம். தற்போது, பச்சை பனை மட்டை அகப்பையும், பனை ஓலையால் ஆன சிறிய கரண்டியும் காணாமல் போயிருந்தாலும், பனங்கிழங்கும், பனை ஓலையும் இன்றளவும் பொங்கலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை மறப்பதற்கில்லை.

Next Story