உற்சாகம் தரும் கும்மிப்பாட்டு


உற்சாகம் தரும் கும்மிப்பாட்டு
x
தினத்தந்தி 14 Jan 2022 11:16 PM GMT (Updated: 14 Jan 2022 11:16 PM GMT)

தமிழர்களின் பாரம்பரியம் பழம்பெருமை வாய்ந்தது. ஒவ்வொரு சுக துக்கத்தையும், எண்ண ஓட்டங்களையும் இசை, பாடல்கள் மூலம் வெளிப்படுத்தும் தனிப்பெருமை தமிழர்களின் கலாசாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

தமிழர்களின் பாரம்பரியம் பழம்பெருமை வாய்ந்தது. ஒவ்வொரு சுக துக்கத்தையும், எண்ண ஓட்டங்களையும் இசை, பாடல்கள் மூலம் வெளிப்படுத்தும் தனிப்பெருமை தமிழர்களின் கலாசாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. விதைத்த காலம் முதல் அறுவடை முடியும் வரை, விவசாயிகளின் பெரும் துணையாக இருந்தது கும்மிப்பாட்டு.

இசைக்கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே கைத்தாளம் போட்டு பாடல் பாடி மகிழ்ந்த காலத்தில் தோன்றியது, கும்மிப்பாட்டு. சந்தம் தவறாமல், தாளம் தவறாமல், 2 பேர் கூடி பாடினாலும், நூறு பேர் கூடி பாடினாலும் நளினம் தவறாமல் ஒரே மாதிரி கைத்தாளம் போட்டு குனிந்து அசைந்து பாட்டுப் பாடும் பாங்கு கும்மிப்பாடலின் தனிச்சிறப்பு.

கும்மி பாடல்கள் எவற்றையெல்லாம் கொண்டாடி மகிழும் என்று பார்த்தால், குழந்தை பிறந்தால், குழந்தை வளரும் ஒவ்வொரு பருவத்திற்கும், பெண் பிள்ளை பருவமடைந்தால், பரிசம் போட்டால், திருமணத்திற்கு, மாமனை வம்பிழுக்க, சமரசம் செய்ய, கடவுளை அழைக்க, விதை விதைக்க, நடவு செய்ய, அறுவடைக்கு, அறுவடையின் பலனை அனுபவிக்க என்று பழந்தமிழனின் வாழ்வில் கலந்துபோனது இந்த கும்மிப்பாட்டு. இன்று நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குமரிகள் சிலருக்கு மட்டுமே இவ்வகை பாடல்கள் தெரிந்திருக்கிறது. அவர்களிடம் இருந்து இந்த கலையை ஆவலோடு தெரிந்து கொள்ளவும் ஆள் இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

அரியலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் தற்போதும் கும்மிப்பாட்டு வழக்கத்தில் உள்ளது. ஆண்டிமடம், திருமானூர், தா.பழூர் பகுதிகளில் காணும் பொங்கல் அன்றும், கோவில்களில் நடைபெறும் முக்கிய விசேஷங்களின்போதும் கும்மியடித்து பாடல் படிப்பதை அப்பகுதி பெண்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

Next Story