சிறப்புக் கட்டுரைகள்

வீட்டு முகப்பை அலங்கரிக்கும் ‘கூரைப்பூ கொத்து’ + "||" + ‘Roof bouquet’ to decorate the facade of the house

வீட்டு முகப்பை அலங்கரிக்கும் ‘கூரைப்பூ கொத்து’

வீட்டு முகப்பை அலங்கரிக்கும் ‘கூரைப்பூ கொத்து’
பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்ட பொங்கல் பண்டிகையில், ‘கூரைப்பூ கொத்து’ என்பது மிகவும் பிரசித்தம்.
பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்ட பொங்கல் பண்டிகையில், ‘கூரைப்பூ கொத்து’ என்பது மிகவும் பிரசித்தம். பொங்கல் திருநாள் அன்று, கிராமங்களில் வீடுதோறும் கூரையில் (அதாவது தலைவாசலில்) ‘கூரைப்பூ கொத்து’ சொருகி வைப்பார்கள். கூரைப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை, மாவிலை, தும்பைச்செடி, பிரண்டைச்செடி ஆகியவற்றின் தொகுப்பு தான் ‘கூரைப்பூ கொத்து.’ மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பொங்கல் அன்று தலைவாசல், பின்புறவாசல், வாகனங்கள் என பல்வேறு இடங்களில் கூரைப்பூ கொத்து தொங்கவிடப்பட்டு இருக்கும். இது தவிர, கிராமங்களில் உள்ள விநாயகர், அய்யனார், பெண் தெய்வங்களின் கோவில்களில் ஒவ்வொரு வீட்டின் சார்பாகவும் கூரைப்பூ கொத்து வைப்பது வழக்கம்.


காலம் காலமாக இருந்துவரும் இந்த வழக்கம், முன்னோர்களின் அறிவார்ந்த செயலாகத்தான் பார்க்கப்படுகிறது. தமிழர்களாகிய நாம், இயற்கை சார்ந்த வாழ்வியலை பின்பற்றியே வந்துள்ளோம். மருத்துவம் வளர்ச்சி அடையாத காலகட்டத்தில், இயற்கை மூலிகைகளின் மூலமாகத்தான் நமக்கு ஏற்பட்ட நோய்களில் இருந்து விடுபட்டுள்ளோம். அந்த வகையில் கூரைப்பூ சிறுநீரக கல் அடைப்பிற்கு சிறந்த நிவாரணி. வேப்பிலை ஒப்பற்ற கிருமி நாசினி. மா இலை, காற்று மண்டலத்தில் ஆக்சிஜனை அதிகரித்து, காற்றை சுத்தப்படுத்தும் பணியைச்செய்கிறது. தோல் வியாதி, சர்க்கரை வியாதிக்கு ஆவாரம்பூ அற்புதமான மருந்து. பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவல்லது தும்பைச்செடி. வயிற்றுப்புண், செரிமான கோளாறுகளுக்கு தீர்வு தருவது பிரண்டை. எனவேதான் இவை அனைத்தும் சேர்ந்த ‘கூரைப்பூ கொத்தை’ வீட்டின் தலைவாசலில் வைத்து பராமரித்து வந்துள்ளனர்.

இன்று, கூரைப்பூ கொத்து, சம்பிரதாயத்திற்காக மட்டுமே வீடுகளில் வைக்கப்படுகிறது. இதனால் பிரண்டை, தும்பைச்செடி, மாவிலை எல்லாம் அதில் இடம் பெறுவதில்லை. பெயருக்கு கூரைப்பூ, வேப்பிலை மட்டும் இடம் பெறுகிறது. இன்னும் சிலர், வெறும் கூரைப் பூவை மட்டுமே வைக்கிறார்கள். நம்முடைய பழக்க வழக்கம் வாழ்வியலோடு சேர்ந்த வாழ்க்கை முறை என்பதை வருங்கால சந்ததியினருக்கு சொல்வது நமது கடமை.