தாய் வீட்டு பொங்கல் சீர்வரிசை


தாய் வீட்டு பொங்கல் சீர்வரிசை
x
தினத்தந்தி 14 Jan 2022 11:59 PM GMT (Updated: 14 Jan 2022 11:59 PM GMT)

தாய் வீட்டில் இருந்து வருகிற சீதனம், பெண்களுக்கு எப்போதுமே உயர்வானது.

தாய் வீட்டில் இருந்து வருகிற சீதனம், பெண்களுக்கு எப்போதுமே உயர்வானது. தாய்வழி உறவில் மிகவும் முக்கியமானதாக கருதி செய்யப்படும் சம்பிரதாயங்களில் பொங்கல் சீர்வரிசை முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. தென் மாவட்டங்களில் பல்லாண்டு காலமாய் இருந்து வரும் இந்த வழக்கம், இன்றைய நவீன யுகத்திலும் தொடர்ந்து வருகிறது.

மணம் முடித்து கணவர் வீட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு, திருமணத்திற்கு பின் வரும் முதல் பொங்கல் திருநாளில், ‘பொங்கல் படி’ என்ற பெயரில் பொங்கல் சீர்வரிசை மிகவும் விமரிசையாக கொடுக்கும் வழக்கம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்றளவும் இருந்து வருகிறது.

இந்த சீர்வரிசையில், பொங்கலிடும் பாத்திரமான பித்தளை பானை, பித்தளை கரண்டி முதலிடத்தைப் பிடிக்கிறது. அதைத் தொடர்ந்து பொங்கலிடும் பொருட்களான பச்சரிசி, அச்சுவெல்லம், முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை, நெய், அனைத்து வகை காய்கறிகள் தேவையான அளவுக்கு வாங்கிக் கொள்வார்கள்.

இதுதவிர மங்கலப் பொருளான செடியுடன் கூடிய மஞ்சள் குலை, கரும்புக்கட்டு ஆகியவை இடம்பெறும். சில விவசாயிகள் வீட்டில் அரிசி கொண்டு செல்லாமல் நெல் கொண்டு செல்வார்கள். இதுதவிர வீட்டு உபயோகப் பொருட்களையும் வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொடுப்பார்கள். சில இடங்களில் சீர்வரிசையுடன், புதுமண தம்பதிக்கு புத்தாடையும் வழங்கப்படுகிறது.

மணமகன் வீட்டுக்குச் செல்லும் இந்த சீர்வரிசையை, பெண் வீட்டார் தங்கள் சொந்த பந்தங்கள் சூழ கொண்டு செல்வார்கள். சீர்வரிசையைக் கண்டு புதுப்பெண் மனம் மகிழ்வார். சீர்வரிசை கொண்டு வந்த மணமகள் வீட்டாருக்கு, மணமகன் இல்லத்தில் விருந்து கொடுப்பார்கள். பின்னர் அந்த பொருட்களை கொண்டு தை திங்கள் முதல் நாளில் வீட்டின் முற்றத்தில் பொங்கலிட்டு கதிரவனை வழிபடுவார்கள்.

இந்த சீர்வரிசை புதுமண தம்பதிக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரவர் தாய் வீட்டில் இருந்து ஆண்டுதோறும் பொங்கல் சீராக கிடைப்பதும் உண்டு. தாய், தந்தை மறைந்த பிறகும் கூட, உடன் பிறந்த சகோதரர்கள் சீர்வரிசைகளை தங்களின் சகோதரிகளுக்கு செய்வார்கள்.

தொட்டுத் தொடரும் பந்தமாய் நீடித்து வரும் தமிழர்களின் இந்தப் பண்பாட்டு கலாசார நிகழ்வை எண்ணி பெருமை கொள்வோம்.

Next Story