செய்தி வாசிக்கிறார், மாயம் செய்கிறார் மாயா ஸ்ரீகுமார்...!


செய்தி வாசிக்கிறார், மாயம் செய்கிறார் மாயா ஸ்ரீகுமார்...!
x
தினத்தந்தி 16 Jan 2022 4:22 PM GMT (Updated: 16 Jan 2022 4:22 PM GMT)

தொலைக்காட்சி செய்தி வாசிப்பில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மாறினாலும், தொடர்ந்து 33 ஆண்டுகள் மலையாள தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் மாயா ஸ்ரீகுமார். அவர், தனது நீண்ட கால பணி அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

‘‘1985-ம் ஆண்டு ஜனவரி மாதம் தற்காலிக செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் சேர்ந்தேன். யாரையும் பின்பற்றி நான் செய்தி வாசிக்கவில்லை. முதன்முதலில் தூர்தர்ஷனில் செய்தி வாசித்தபோது, அவர்கள் சொல்லிக் கொடுத்தபடியே வாசித்தேன். அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்நிலையில், செய்தி வாசிக்கும்போது எனது உச்சரிப்பு தவறாக இருப்பதாக அலுவலகத்துக்குள்ளும், வெளியேயும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. வாரந்தோறும் மதிப்பீடு செய்யும் செய்தித்தாள்களிலும் என் வாசிப்பு குறித்து விமர்சிக்கப்பட்டது. பொதுவாக என் உச்சரிப்பு முதல் உடை வரை விமர்சிக்கப்பட்டன’’ என்றவர், செய்தி வாசிப்பு பணியை மெதுவாக கற்றுக்கொண்டார்.

‘‘ஒரு முறை அரசியல் கட்சி தலைவர் இறந்த செய்தியை கலர் புடவை கட்டி வந்து செய்தி வாசித்தவர்கள் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இது போன்ற சோகமான நேரத்தில் கொண்டாட்ட மனப்பான்மையுடன் ஆடை அணிவதா? என்ற கேள்வி எழுந்தது. இதுவும் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. அப்போதிலிருந்து சூழலுக்கு ஏற்றவாறு அணிவதற்கு ஏற்ப சேலைகளை கையோடு எடுத்து செல்வேன்.

தூர்தர்ஷன் இயக்குநர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மதிப்பீடு கூட்டம் வாரந்தோறும் நடைபெறும். ஒரு வாரத்தில் நடந்த செய்தி வாசிப்பு தொடர்பான தவறுகளை மூத்த ஊழியர்கள் சுட்டிக்காட்டுவார்கள். அங்கு சுட்டிக்காட்டப்படும் தவறுகளை நாங்கள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கு இந்த கூட்டம் உதவியது’’ என்றவர், பல்வேறு செய்தி சேனல்களில் வாசிப்பு பணியை மேற்கொண்டதை பகிர்ந்து கொள்கிறார்.

‘‘11 ஆண்டுகள் தூர்தர்ஷனில் பணியாற்றிவிட்டு தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்தேன். அதன் நிறுவனர் செய்தி வாசிப்பில் வித்தியாசமான விதிமுறைகளை வகுத்திருந்தார். அங்கு பணியாற்றியபோது, என் பணியில் நிறைய சுதந்திரம் கிடைத்தது. முன்பு எல்லாம் செய்தி வாசிக்கும்போது தவறு வந்துவிடக்கூடாது என கடவுளை வேண்டிக்கொள்வோம். ஆனால், தனியார் தொலைக்காட்சி நிறுவனரை பொறுத்தவரை, செய்தி உரையாடல் போல் சாதாரணமாக இருக்க வேண்டும் என்றார்.

அவர் எங்களுடன் சகஜமாகப் பேசினார். அங்கு நிறைய கற்றுக்கொண்டேன். உடை உடுத்துவது கூட நமது தேர்வாக இருந்தது. அந்த காலத்தில் ‘அப்ளிங்’ வசதியை தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு வழங்காததால், சிங்கப்பூரில் இருந்த செய்தி நிறுவனத்தின் ஸ்டூடியோவிலிருந்து நேரடியாகச் செய்திகள் ஒளிபரப்பப்பட்டன. அதற்காக நான் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தேன்.

வங்கியில் அதிகாரியாக இருந்த என் கணவர், விடுப்பு எடுத்துக்கொண்டு என்னுடன் சிங்கப்பூருக்கு வந்தார். அதன்பிறகு, 3 ஆண்டுகளில் மீண்டும் கேரளாவுக்குத் திரும்பினேன். தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றினேன்’’ என்றவர், உச்சரிப்பில் பிழை வந்தால், என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும் சுவாரசியமாக விவரிக்கிறார்.

‘‘10 ஆண்டுகள் கழித்து மற்றொரு தொலைக்காட்சியில் சேர்ந்தேன். அங்கு பணியாற்றிய ஆசிரியர், முந்தைய செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர். நட்பாக பழகக்கூடியவர். அதேசமயம் உச்சரிப்பில் தவறு ஏற்பட்டால், அதை சரிசெய்ய தண்டனை வழங்கக்கூடியவர். ஒரு வார்த்தையை தவறாக உச்சரித்தால், அதே வார்த்தையை 100 முறை எழுதச் சொல்லி தண்டனை கொடுப்பார். ஆனால் ஒருபோதும் நான் தவறாக உச்சரித்ததில்லை. அதேபோல செய்தி வாசிப்பாளர் உச்சரிப்பில் தவறு செய்யாமல் இருக்க முடியாது. தூர்தர்ஷனில் பணியாற்றியபோது நான் பல முறை உச்சரிப்புகளில் தவறு செய்திருக்கிறேன்’’ என்றவரிடம், ‘செய்தி வாசிப்பு துறையில், பல வருடங்களாக நீடித்து இருப்பது எப்படி ?’ என்ற கேள்வியை முன்வைக்க, பொறுப்பாக பதிலளித்தார்.

‘‘செய்தியை ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் வாசிப்பேன். ஒவ்வொரு முறை மாற்றம் நிகழும்போதும், அதனுடன் நான் பொருந்திக்கொள்வேன். நான் தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்த 2 வருடங்களிலேயே டெலிபிராம்ப்டர் வந்துவிட்டது. இப்போது லேப்டாப்பை பார்த்து செய்தி வாசிக்கும் முறை வந்துவிட்டது. புதிய தொழில்நுட்பத்தில் எல்லாமே ரிமோட் கண்ட்ரோலாகவே மாறிவிட்டது.

ஆனால், மாயா, மாயாவாகவே இருக்கிறாள். என்னைப் பார்த்து ‘போர் அடிப்பதாக’ மக்கள் சொன்னால், என் நேரம் முழுவதையும் குடும்பத்தோடு செலவழிப்பேன். என் மகள் தன்யாவும், மருமகன் சுரேஷும் மருத்துவர்கள். என் பேத்தி தியா 9-ம் வகுப்பு படிக்கிறாள்” என்றவரிடம், செய்தி வாசிப்பில் மறக்கமுடியாத சம்பவத்தை கேட்க முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணச் செய்தி வாசிப்பை பகிர்ந்து கொண்டார்.

‘‘1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி மரணச் செய்தி வாசித்தபோது அதிர்ச்சியடைந்தேன். எனினும் நிலைமையை சமாளித்துக்கொண்டு விதிமுறைகளை பின்பற்றினேன். அப்போது என் இதயத்துடிப்பு அதிகமானது. அதை நினைத்து பார்த்தால், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் கூட மீள முடியவில்லை’’ என்று விடைகொடுத்தார்.


Next Story