குடியரசு தலைவரின் பாராட்டு பெற்ற ரிக்‌ஷா ஓட்டுனரின் மகன்


குடியரசு தலைவரின் பாராட்டு பெற்ற ரிக்‌ஷா ஓட்டுனரின் மகன்
x
தினத்தந்தி 24 Jan 2022 5:45 AM GMT (Updated: 2022-01-24T11:15:28+05:30)

ரிக்ஷா இழுக்கும் தொழிலாளியின் 18 வயது மகனான சிகாந்தோ மண்டல், பழைய சைக்கிளை பயன்படுத்தி குப்பை அள்ளும் இயந்திரத்தை உருவாக்கி பலருடைய பாராட்டுக்களை குவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள மதுரா இவரது பூர்வீகம். குப்பையை கையால் அள்ளாமல் கருவியைப் பயன்படுத்தி அள்ளும் இந்த கண்டுபிடிப்புக்காக சிகாந்தோ, தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும், குடியரசுத் தலைவரும் இவரை பாராட்டி கவுரவித்துள்ளார்.

சிகாந்தோவின் கண்டுபிடிப்புக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் பாராட்டு தெரிவித்துள்ளார். பத்மன் திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்கு சிகாந்தோவை அழைத்த அக்ஷய் குமார், ரூ.5 லட்சம் கொடுத்து கவுரவித்தார்.

தற்போது குஜராத்தைச் சேர்ந்த பெரிய நிறுவனம் ஒன்று இந்த குப்பை அள்ளும் இயந்திரத்தைத் தயாரிக்க சிகாந்தோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்த குப்பை அள்ளும் இயந்திரத்தை கண்டுபிடித்ததற்கான காரணம் குறித்து சிகாந்தோ சொல்கிறார். “என் தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே கை ரிக்ஷா இழுக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு நான் 9-ம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் தூய்மைத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதில் மாணவர்களும் பங்கேற்றனர். எனினும் கையும், ஆடை யும் அழுக்காகிவிடும் என்று பல மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடவில்லை. அப்போதுதான் குப்பை அள்ளும் இயந்திரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

அதன் வடிவமைப்புக்கு பழைய சைக்கிளை பயன்படுத்த முடிவு செய்தேன். சைக்கிள் பிரேக்கைப் அழுத்தும்போது, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கருவி தானாக குப்பையை அள்ளும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தேன். ஆனால், இதனை உருவாக்க செலவு செய்யும் அளவுக்கு என் குடும்பத்திடம் வசதியில்லை. இது பற்றி என் ஆசிரியரிடம் கூறியதும், அவர் என்னை பள்ளி அளவில் நடந்த ‘இன்ஸ்பைர் அவார்டு’ போட்டியில் பங்கு பெற வைத்தார். இதில் பங்கு பெற்று ரூ. 5 ஆயிரம் பரிசு பெற்றேன்.

இதன்பிறகு எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. பழைய இரும்புக் கடையில் இருந்து சைக்கிள், பிரேக்குகளை சேகரித்தேன். அதன்பிறகு இந்த குப்பை அள்ளும் இயந்திரத்தை உருவாக்கினேன். எனது கண்டுபிடிப்பைப் பார்த்து பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனது கண்டுபிடிப்பை மாநில அளவில் காட்சிப்படுத்தினேன். அதன்பிறகு தேசிய அளவில் என் கண்டுபிடிப்பு பிரபலமானது.

அதன்பிறகு எனக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு 7 நாட்கள் தங்கி, பலரையும் சந்தித்து தகவல்களை சேகரித்தேன். அவை எனக்கு பயனுள்ளதாக இருந்தன. இந்தியா திரும்பியதும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லத்தில் 3 நாட்கள் தங்கும் வாய்ப்பையும் பெற்றேன்.

நேரில் அழைத்து என்னைக் கவுரவித்ததோடு, எனது கண்டுபிடிப்பு அவரை வெகுவாக கவர்ந்ததாகத் தெரிவித்தார். தற்போது குஜராத் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறேன். குப்பை அள்ளும் இயந்திரத்தின் விலை ரூ.15 ஆயிரம் என நிர்ணயித்துள்ளேன்” என்றார்.

Next Story