டோக்கியோ ஒலிம்பிக்கும்.. பாலியல் வன்முறையும்..


டோக்கியோ ஒலிம்பிக்கும்.. பாலியல் வன்முறையும்..
x
தினத்தந்தி 25 Jan 2022 1:50 PM GMT (Updated: 25 Jan 2022 1:50 PM GMT)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்ற பெண் வீராங்கனைகள் குறித்து உலக தடகள நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. கணக்கெடுப்பின்படி, 87 சதவீத பெண் வீராங்கனைகள் ஆன்லைன் வன் முறையை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

சமூகவலைத்தளங்களில் அவர்களின் மனதை காயப் படுத்தும் விதத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலான கருத்துக்கள் பாலியல் சீண்டல், இனவெறி, ஓரினச்சேர்க்கை போன்ற விஷயங்களை மையப்படுத்தியதாக இருந்தன. அவர்களின் ஆண் நண்பர்கள், நெருங்கி பழகுபவர்களுடன் ஒப்பிட்டும் பலர் விமர்ச்சித்திருக்கிறார்கள்.

இந்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 9 வரை அதாவது டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கி, நிறைவு விழாவிற்கு மறுநாள் வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளத்தில் பதிவான 2,40,707 டுவீட்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதில் 23,521 படங்கள், `ஜிப்' பைல்கள் மற்றும் வீடியோக்கள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றுள் பெண் வீராங்கனைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை குறிக்கும் விஷயங்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. ‘‘119 பேரிடம் இருந்து 132 பாரபட்சமான பதிவுகள் இடம்பெற்றிருந்தன. 161 தடகள வீரர்களில் 23 பேர் மீது கடுமையான விமர்சனங்கள், அவதூறுகள் முன்வைக்கப்பட்டன. அவர்களுள் 16 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தவறான பதிவுகளாக அடையாளப்படுத்தப்பட்ட 132 பதிவுகளில் 115 பதிவுகள் வீராங்கனைகளை குறிவைத் திருந்தன’’ என்றும் கணக்கெடுப்பு கூறுகிறது.

கருப்பின பெண் விளையாட்டு வீரர்கள்தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை குறிவைத்துதான் 63 சதவீத வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. அவையும் பாலியல் சீண்டல், இனவெறி சார்ந்ததாக அமைந்திருக்கின்றன. பல பதிவுகளில் ஊக்கமருந்து சர்ச்சைகள், ஓரினச்சேர்க்கைகள் பற்றிய கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆன்லைனில் பகிரப்பட்ட 65 சதவீத பதிவுகள் தவறானவையாக கருதப்படுவதால் அதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று உலக தடகள சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மற்ற ஒலிம்பிக் போட்டிகளை விட டோக்கியோ ஒலிம்பிக் தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பங்கேற்ற 11 ஆயிரம் வீரர்களில் கிட்டத்தட்ட 49 சதவீதம் பேர் பெண்கள். இது ஒலிம்பிக் வரலாற்றில் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்தும் முதல் நிகழ்வாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, டோக்கியோ ஒலிம்பிக்கில் தடைகளை உடைத்து, 150-க்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர், திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்து கொண்டார்கள்.

Next Story