மன அழுத்தம் முதல் தூக்கம் வரை... எப்சம் உப்பின் 5 நன்மைகள்!


மன அழுத்தம் முதல் தூக்கம் வரை... எப்சம் உப்பின் 5 நன்மைகள்!
x
தினத்தந்தி 25 Jan 2022 1:56 PM GMT (Updated: 2022-01-25T19:26:08+05:30)

எப்சம் உப்பு என்பது மெக்னீசியம் சல்பேட் உள்ளடங்கி இருக்கும் இயற்கையான தாது உப்பாகும். இது சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பில் இருந்து வித்தியாசமானது. சற்று கசப்புத்தன்மை கொண்டது. பல வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

தசை வலி, மன அழுத்தம், அஜீரணம், மன அழுத்தம், வீக்கம் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிப்பதாக நம்பப்படுகிறது. எப்சம் உப்பை நீரில் கரைக்கும்போது இதிலிருக்கும் சல்பேட், மெக்னீசியம் போன்றவை வெளிப்படும். இந்த தாதுக்கள் பல்வேறு உடல் அமைப்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமானவை. எப்சம் உப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

1. வலி நிவாரணம்:

வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கும், வீக்கத்தை குறைப்பதற்கும் எப்சம் உப்பை உபயோகிக்கலாம். உடலில் போதிய அளவு மெக்னீசியம் இல்லாதவர்கள் தசைப்பிடிப்பு, உடல் வலி மற்றும் அழற்சி போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வலியைப் போக்கவும், தசைகளை தளர்த்தவும், மூட்டுவலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் எப்சம் உப்பு உதவுகிறது. எப்சம் உப்பில் இருக்கும் மெக்னீசியத்தை உடலில் உறிஞ்ச வைப்பதன் மூலம் நோய் பாதிப்பின் தன்மையை குறைக்கலாம். தசைப்பிடிப்பு மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற எப்சம் உப்பை பயன் படுத்தும் விதம் பற்றி பார்ப்போம்.

* குளியலுக்கு பயன்படுத்தப்படும் ‘பாத் டப்’ அல்லது அகன்ற பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி அதில் ஒரு கப் எப்சம் உப்பை கலக்கலாம். வெந்நீர், மிதமான சூடுக்கு மாறியதும் உடலில் வீக்கம் அடைந்த பகுதியை அதில் மூழ்க வைக்கவும். அல்லது ஒட்டுமொத்த உடலையும் எப்சம் நீரில் மூழ்க வைத்து சுமார் 20 நிமிடங்கள் குளியல் போடலாம். பின்பு மென்மையான டவலை கொண்டு உடலை துடைத்து விடலாம்.

2. மன அழுத்தம்:

இன்றைய உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக மன அழுத்தம் அமைந்திருக்கிறது. அன்றாட வாழ்க்கை யில் எதிர்கொள்ளும் சிரமங்கள், வேலையில் ஏற்படும் நெருக்கடி, தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினைகள், கொரோனா பயம் போன்றவை மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மன அழுத்தம் உடலில் கார்டிசோலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் மெக்னீசியம் போதுமான அளவு இல்லாவிட்டால், அதனாலும் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். எப்சம் உப்பில் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், அது உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் குறைத்து, மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

* 2 கப் எப்சம் உப்புடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் கலந்து கலந்து கொள்ளவும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் கிளிசரினும் கலந்து கொள்ளவும். இந்த கலவையை நன்றாக கிளறி காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும். குளிக்கும்போது சோப்புடன் இதனையும் பயன்படுத்தலாம்.

3. மலச்சிக்கல்:

குடல் இயக்கத்தின் செயல்பாடு குறைந்து மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது மலச்சிக்கல் எனப்படும். இந்த நிலை குடல் இயக்கத்தை தளர்வடைய செய்துவிடும். வயதானவர்கள் இந்த பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள நேரிடும். குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது, அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, நீரிழப்பு, அதிகப்படியான பால் பொருட்களை சாப்பிடுவது மற்றும் மன அழுத்தம் போன்றவை காரணமாக இந்த நிலை ஏற்படலாம். எப்சம் உப்பு குடல் இயக்கத்தை மேம் படுத்த உதவும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

* ஒரு டம்ளர் தண்ணீரில் 2 டீஸ்பூன் எப்சம் உப்பு கலந்து பருகலாம். இது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவும். எனினும் எப்சம் உப்பை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

4. சருமம்:

முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பொலிவின்மை உள்பட அனைத்துவிதமான சரும பிரச்சினைகளையும் போக்கும் தன்மை எப்சம் உப்புக்கு உண்டு. எப்சம் உப்பைப் பயன்படுத்துவது முகப்பரு மற்றும் தழும்புகள் ஏற்படுவதை தடுக்க உதவும். கரும்புள்ளிகளுடன் சேர்ந்து தூசி, அழுக்கு போன்ற சரும பாதிப்பை அனுபவிப்பவர்கள் எப்சம் உப்பை பயன்படுத்துவது நல்லது.

* ஒரு கிண்ணத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எப்சம் உப்பை எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிதளவு பாதாம் எண்ணெய் சேர்க்கவும்.

இரண்டையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.

5. தூக்கம்:

தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எப்சம் உப்பை உபயோகப்படுத்தலாம். உடலில் போதிய அளவு மெக்னீசியம் இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைந்த அளவில் இருந்தாலோ அது தூக்கத்தை பாதிக்கும். மன அழுத்தத்தின் அளவை அதிகரிக்க செய்யும்.

மெக்னீசியம் நிறைந்த எப்சம் உப்பை பயன்படுத்துவது உடலில் மெலடோனின் அளவை அதிகரிக்க செய்யும். தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன் என்று அழைக்கப்படும் இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை கப் எப்சம் உப்பு சேர்க்கவும். அது நன்கு கரையும் வரை கலக்கவும். தூங்க செல்வதற்கு முன்பு இந்த தண்ணீரில் கால்களை ஊறவைக்கவும்.15 நிமிடங்கள் கழித்து மென்மையான டவலில் துடைத்துவிடலாம்.

Next Story