கொரோனா மூன்றாவது அலை; மாநில அளவில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் புள்ளிவிவரம்...!


கொரோனா மூன்றாவது அலை; மாநில அளவில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் புள்ளிவிவரம்...!
x
தினத்தந்தி 27 Jan 2022 7:54 AM GMT (Updated: 2022-01-27T13:24:18+05:30)

கொரோனா மூன்றாவது அலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதற்கு முந்தைய கொரோனா அலைகளை விட குறைவு என்று தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

உலக வரலாற்றில் 2020ம் ஆண்டு வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. யாரும் எதிர்பார்க்காத கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல லட்சக்கணக்கான மக்களை கொன்றது. கொரோனா முதல் அலையுடன் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வீரியம் அதிகரித்துக் கொண்டே போய், கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இரண்டாவது அலையில் டெல்டா வகை கொரோனாவாக உருமாற்றம் அடைந்து மிரட்டியது. சிறிது கால அவகாசத்துக்கு பின் மீண்டும், மூன்றாவது அலையில் ஒமைக்ரான் வைரசாக மாறி தற்போது உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை  முதல் இரண்டு கொரோனா அலைகளை விட குறைவு என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மாநிலங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி ஆராய்ந்ததில், கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகி வரும் மாநிலங்களில் கூட  மருத்துவமனைகளில் 95 சதவீத படுக்கைகள் காலியாகவே உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

இனி பல்வேறு மாநிலங்களில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் 2வது கொரோனா அலையின் உச்சத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் விகிதம் 21 சதவீதமாக இருந்தது. முதல் அலையின் போது இது 16 சதவீதமாக இருந்தது.ஆனால் இந்த விகிதம்  இப்போதைய கொரோனா அலையில் 5 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா முதல் அலையில் 12, 331 பேர் உயிரிழந்தனர், 2வது அலையின் போது 25,992 பேர்  உயிரிழந்தனர், தற்போதைய அலையில் ஜனவரி 25ந்தேதி வரை 333 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த கொரோனா அலையில், அம்மாநிலத்தில் மூன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆனால், அவர்களில் 2 சதவீதத்தினரே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதை போன்றே தெலுங்கானா மாநிலத்திலும், நிலைமை உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஜனவரி 25ந்தேதி நிலவரத்துடன், கடந்த ஆண்டு மே மாதம் 15 ந்தேதி நிலவரத்தை  ஒப்பிடுகையில், முந்தைய ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 31.8 சதவீதம் பேர்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5.1 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னர், 17.8 சதவீதம் பேர் ஆக்சிஜன் தேவைப்படும் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது அந்த விகிதம்  2.4 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேபோல, முன்னர், தீவிர சிக்கிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டோர் விகிதம் 4.2 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போதைய அலையில் அது 0.5 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

(மார்ச் 19, 2021 - மே 21,2021) வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பை, (டிசம்பர் 31, 2021 - ஜனவரி 24, 2022) வரையிலான கால கட்டத்துடன் ஒப்பிடுகையில், அப்போதைய உயிரிழப்புகளில் வெறும் 7 சதவீதம் மட்டுமே இப்போது பதிவாகி உள்ளது. 

கேரளாவில் கொரோனா 2ம் அலை உச்சம் அடைந்திருந்த போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 8 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போதைய அலையில், 3.5 சதவீதத்தினரே மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

கொரோனாவின் கோர தாண்டவத்தில் அதிகம் பாதிப்பை சந்தித்து வரும் மராட்டிய மாநிலத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சம் தொட்டது. அப்போது தலைநகர் மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 29,903 படுக்கைகளில் 21,581 படுக்கைகள் நிரம்பின. ஆனால் இப்போதைய ஒமைக்ரான் பாதிப்பில் மொத்தமுள்ள 37,741 படுக்கைகளில் 4011 மட்டுமே நிரம்பியுள்ளன.

தலைநகர் டெல்லியை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஏப்ரல் 20ந்தேதி கொரோனா 2-வது அலை உச்சம் தொட்டது. அப்போது அங்குள்ள மருத்துவமனைகளில் 16,418 படுக்கைகள் நிரம்பின. ஆனால் இப்போதைய ஒமைக்ரான் பாதிப்பு உச்சம் தொட்ட ஜனவரி 13ந்தேதி, மொத்தமுள்ள படுக்கைகளில் 2424 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

இது குறித்து, டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்தியேந்தர் ஜெயின் மற்றும் மருத்துவர்கள் கூறுகையில், கொரோனா மூன்றாவது அலையின் போது மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது என்று தெரிவித்தனர்.

Next Story