மகாகவி பாரதியார்... தமிழ்த் தாய் பெற்றெடுத்த பெருங் கவிஞன்!


மகாகவி பாரதியார்...  தமிழ்த் தாய் பெற்றெடுத்த பெருங் கவிஞன்!
x
தினத்தந்தி 10 April 2022 4:01 PM GMT (Updated: 10 April 2022 4:01 PM GMT)

‘அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே’ என்று பாடி தனது கவி வல்லமை மூலம் விடுதலை உணர்வை ஊட்டியவர், மகாகவி பாரதியார். ஆயிரம் கவிஞர்கள் கவி உலகை ஆண்டாலும், அழியாத புகழை அள்ளி சென்ற அவரை பற்றி இக்கட்டுரையில் காண்போம்...!


தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி சின்னசாமி மற்றும் இலக்குமி அம்மையார் தம்பதிக்கு மகனாக பிறந்தார், பாரதியார். பாரதி என்ற சொல்லுக்கு கலைமகள் என்ற பொருள் உண்டு. இவரது இயற்பெயர் சுப்பையா என்ற சுப்பிரமணியன். தனது 11-ம் வயதிலேயே கவிதை எழுத தொடங்கிய இவருக்கு முண்டாசு கவிஞன், சக்திதாசன் போன்ற சிறப்பு பெயர்களும் உண்டு. பைந்தமிழராய் பிறந்து பாவலராய் திகழ்ந்து கவிப்புகழ் பெற்றார். விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதையை தமது குருவாக கருதினார்.

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கினார். கவிஞராக மட்டுமின்றி எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முக தன்மை கொண்டு இருந்தார். 1897-ம் ஆண்டு செல்லம்மாள் என்பவரை மணந்துகொண்டார். இந்த தம்பதிக்கு தங்கம்மாள், சகுந்தலா ஆகிய 2 மகள்கள் உண்டு. தமிழ் மீது தீரார பற்று கொண்ட பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பா‌ பாட்டு, ஞானப்பாடல், விடுதலை பாடல், விநாயகர் நான்மணிமாலை, சின்னஞ்சிறு கிளியே, ஞான ரதம், சந்திரிகையின் கதை, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, பொன் வால் நரி, ஆறில் ஒரு பங்கு உள்பட பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.

இதற்கிடையில் தான் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், எட்டையபுரம் அரண்மனையில் பணியில் சேர்ந்தார். பின்னர் அந்த பணியை விட்டுவிட்டு காசிக்கு சென்றார். அங்கிருந்து மதுரைக்கு வந்த பாரதியார், அங்குள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். எனினும் கவிதை எழுதுவதையும், விடுதலை உணர்வை ஊட்டுவதையும் தொடர்ந்தார்.

விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் தேசிய கவியாக போற்றப்பட்டார். ‘மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநில மீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே...’ என்று முழங்கினார்.

மேலும் தாய்நாட்டின் எதிர்காலம் மீது மிகுந்த பற்று கொண்டவராக திகழ்ந்தார். ‘ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்... அந்நியர் வந்து புகலென்ன நீதி’ என்று முழங்கிய பாரதியார், பாமரருக்கும் புரியும் வகையில் கேலிச்சித்திரம் மூலம் விடுதலை வேட்கையை விதைத்தார். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று பெண் உரிமைக்கு குரல் கொடுத்தார்.

தமிழ் கவிதையிலும், உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாக திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, சமயங்கள் குறித்த கவிதைகளும், கட்டுரைகளும் எழுதினார். இந்தியா, விஜயா போன்ற இதழ்களை நடத்தினார். தனது எழுத்துகள் மூலம் மக்கள் மனதில் எழுச்சியை விதைத்தார். நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா என்று புகழ் பெற்ற பாரதியார் 1921-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி மண்ணைவிட்டு மறைந்தார்.

அவரது கவித்திறனை பாராட்டிய எட்டப்ப நாயக்கர் மன்னர், ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார். பாரதியாரின் இலக்கிய நூல்கள் மாநில அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கிய நூல்கள் பாரதியார் உடையதுதான்.

இந்திய வரலாற்றில் பல திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர், பாரதியார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும், சேவைகளும் இன்னமும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.


Next Story