நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! 4-வது அலை வருமா? ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி விளக்கம்


நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! 4-வது அலை வருமா? ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி விளக்கம்
x
தினத்தந்தி 20 April 2022 2:26 PM GMT (Updated: 20 April 2022 2:26 PM GMT)

சிலர் தொற்று நோய் பரவும் என்ற அச்சம் இல்லாமல், சுதந்திரமாக உலா வருகின்றனர்.நோய்த்தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்வதால் அவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.

புதுடெல்லி,

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் அது நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயர் விஞ்ஞானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து, தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. 

சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்  எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளன.ஆனால், நோய்த்தொற்றின் எழுச்சி எந்த சந்தர்ப்பத்திலும் கொரோனா நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ சி எம் ஆர்) முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஆர் கங்காகேத்கர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் மாறுபாட்டின் துணைப்பிரிவுகள் உள்ளன. ஆனால் இதுவரை புதியவகை கொரோனா வைரஸ் மாறுபாடு எதுவும் கண்டறியப்படவில்லை.எனவே, நான்காவது அலைக்கான வாய்ப்புகள் இப்போது தென்படவில்லை.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பிஏ.2 வகை வைரஸ், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மக்களைப் பாதிக்கிறது.

தற்போதைய சூழலில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டதன் காரணமாக, மக்கள் சமூக ரீதியாக சுறுசுறுப்பாக மாறியுள்ளனர். இதன் விளைவாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர்  எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.ஆனால், குறிப்பிட்ட அளவிலான குறுகிய சமூக பரவலாக மட்டுமே இப்போதைய பாதிப்பு நிலவரம் உள்ளது.

மாஸ்க் பயன்பாட்டை திரும்பப் பெறுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்  எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம்.

நம்மில் சிலர் தொற்று நோய் பரவும் என்ற அச்சம் இல்லாமல், சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் மாஸ்க் அணிவதில்லை. தற்போது நோய்த்தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்வதால் அவர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.

ஒமைக்ரானில் இருந்து ஏற்படும் தொற்று பாதிப்பானது, 6 முதல் ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கும். நான்காவது அலை ஏற்படுமா என்பது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story