சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் தலீபான்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் - அண்டோனியோ குட்டாரெஸ்


சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் தலீபான்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் - அண்டோனியோ குட்டாரெஸ்
x
தினத்தந்தி 8 May 2022 4:16 PM GMT (Updated: 8 May 2022 4:34 PM GMT)

ஆப்கானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை தலீபான்கள் நிறைவேற்ற வேண்டும் என அண்டோனியோ குட்டாரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவா,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு மக்கள் மத்தியிலும் மனித உரிமை ஆர்வலர்களும்  கவலை தெரிவித்தனர். எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று(1996- 2001) கடுமையான ஆட்சி இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். 

ஆனால்,  பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று தலீபான்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது இடங்களில்  பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். 

அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும், அதே போல் அரசுப் பணிகளில் உள்ள ஆண்களின் மனைவியோ, மகளோ பர்தா அணியாவிட்டால் அவர்கள் மீதும் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் தலீபான்கள் பிறப்பித்துள்ளனர். 

இந்த நிலையில், தலீபான்களின் இந்த அறிவிப்புகள் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டாரெஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்க வேண்டும் என்றும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் தலிபான்கள் அறிவித்திருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆப்கானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அளித்த வாக்குறுதிகளையும், சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்களின் கடமைகளையும் தலீபான்கள் காப்பாற்ற வேண்டும் என்று நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.  

Next Story