உலகின் வயதான பெண்ணின் ஆசையும், ஆயுள் ரகசியமும்..!


உலகின் வயதான பெண்ணின் ஆசையும், ஆயுள் ரகசியமும்..!
x
தினத்தந்தி 12 May 2022 12:56 PM GMT (Updated: 12 May 2022 12:56 PM GMT)

உலகிலேயே மிகவும் வயதான நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த கன்னியாஸ்திரியான சகோதரி ஆண்ட்ரே. இவருக்கு 118 வயது 73 நாட்கள் ஆகிறது என்று சமீபத்தில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

இதுநாள் வரை உலகின் வயதான பெண்மணியாக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த கேன் டனாகா கடந்த ஏப்ரல் 17-ந் தேதி இறந்தார். அவர் 1903-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந் தேதி பிறந்தார். தனது 119 வயதில் இறந்தார். அடிக்கடி நோய் பாதிப்புக்கு ஆளானதால் அவரை மரணம் தழுவி விட்டது. அவர் 19 வயதில் திருமணம் செய்து 4 குழந்தைகளை பெற்றெடுத்தார். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அவர் இறந்ததை தொடர்ந்து தற்போது உலகின் வயதான பெண்மணியாக ஆண்ட்ரே அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ஆண்ட்ேர, 1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானார். அதில் இருந்தும் மீண்டு தனது ஆயுளை காப்பாற்றிக்கொண்டார். 1944-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது கன்னியாஸ்திரியானார்.

முதல் உலகப்போரின்போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டார். அவற்றை எல்லாம் சமாளித்து உயிர் தப்பினார். கடந்த ஆண்டு கொரோனாவையும் சமாளித்தார். கொரோனாவில் உயிர் பிழைத்த உலகின் வயதான பெண்மணி என்ற சாதனையையும் படைத்தார். கடந்த 12 வருடங்களாக டூலோனில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் தீவிரமெடுத்தபோது தனிமை அறையில் தன்னை தற்காத்துக்கொண்டார். தினமும் ஒரு டம்ளர் ஒயின் அருந்துவதும், சாக்லேட் சாப்பிடுவதும்தான் தனது நீண்ட ஆயுளின் ரகசியம் என்று குறிப்பிடுகிறார்.

தற்போது உலகின் வயதான பெண்மணி என்று அறியப்பட்டாலும் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த பெண்மணி என்ற சாதனையை படைக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. ஏனென்றால் ஜீன் லூயிஸ் கால்மென்ட் என்ற பிரெஞ்சுப் பெண்மணிதான் உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தவராக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அவர் 122 வருடங்கள் 164 நாட்கள் வாழ்ந்தார். தற்போது ஆண்ட்ரேவுக்கு 118 வயது ஆகிறது. இன்னும் அதிக வருடங்கள் உயிர் வாழ்ந்து ஜீன் லூயிஸ் கால்மென்ட்டின் சாதனையை முறியடித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்கு ஏதுவாக தனது வாழ்க்கை முறையை கட்டமைத்து வருகிறார்.


Next Story