ஒருபுறம் வெப்ப அலை இன்னொரு புறம் கனமழை: காலநிலை மாற்றத்துடன் போராடும் இந்தியா - நிபுணர்கள் எச்சரிக்கை!


ஒருபுறம் வெப்ப அலை இன்னொரு புறம் கனமழை: காலநிலை மாற்றத்துடன் போராடும் இந்தியா - நிபுணர்கள் எச்சரிக்கை!
x
தினத்தந்தி 17 May 2022 8:52 AM GMT (Updated: 17 May 2022 8:52 AM GMT)

வெப்ப அலைகள் வீசுவது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கத்தை குறிக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களின்தான் வெப்ப அலை வீசும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெப்ப அலை வீசத் தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் சராசரி வெப்பநிலை, கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மே மாதம் இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது.

வானிலை நிகழ்வில் ஏற்படும் தீவிர மாற்றங்களை ஆய்வு செய்த நிபுணர்கள் ஒரு பயங்கரமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதன்படி, இந்தியாவில் அதிக தீவிரமான, நீண்ட மற்றும் அடிக்கடி வெப்ப அலைகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

வெப்ப அலை என்பது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஒரு தீவிர வானிலை நிகழ்வாகும். காலநிலை மாற்றத்தை குறிக்கும் விதமாக, வானிலை நிகழ்வில் தீவிர மாற்றங்கள் அடிக்கடி எற்படும். அதில் ஒன்றாக  வெப்ப அலை உள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலையால், வெப்ப அலை மற்றும் வெயில்காலம் அதிகரித்து குளிர் காலம் குறைய வழிவகுக்கும். கணித்தபடி வெப்ப அலைகள் தொடர்ந்தால், இவை இப்பகுதியில் உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை மோசமாக பாதிக்கும் என்று காலநிலை குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் நிலையாக நீடித்து, இன்னும் மோசமாகவும் மாற உள்ளதாக  விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வடகிழக்கு பகுதிகளை அழித்துவரும் திடீர் வெள்ளம், வடமாநிலங்களில் வீசும் வெப்ப அலை, தென்னிந்தியாவில் மழை என இப்படி மாறிவரும் காலநிலையால், கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று  எச்சரித்துள்ளனர்.  

கடந்த 1966ம் ஆண்டுக்கு பின் இந்த ஆண்டு தான், டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது.உலகளாவிய புவி வெப்பமடைவதன் தாக்கமே இந்த நிலைக்கு காரணம். இது போன்ற வெப்ப அலைகள் தொடர்ச்சியாக அடிக்கடி ஏற்படும் என்பதற்கான அறிகுறியாக இது அமைந்துள்ளது.

வெப்பநிலை உயர்வு என்பது, பருவநிலை மாற்றத்தின் முக்கிய அறிகுறியாகும். அதிலும் வெப்ப அலைகள் வீசுவது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கத்தை குறிக்கிறது.கடந்த நாற்பது ஆண்டுகளில் வெப்ப அலைகளால் இறப்பு விகிதம் ஒரு மில்லியனுக்கு  62.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 



பருவநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்வது?

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் நகரங்களில் அதிகரித்து வருகிறது. 

பசுமை மற்றும் நீல உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்வதன் மூலம், அதாவது பசுமை சுவர்கள், பசுமை வழிகள், நகர்ப்புற காடுகள், பசுமை கூரைகள் மற்றும் நகர்ப்புறங்களை குளிர்விக்க நீர்நிலைகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து நகர்ப்புற திட்டமிடலில் அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், வெப்ப அழுத்தத்தைக் குறைக்கவும் நகரங்களில் வெப்பத்தீவுகள் உருவாவதை தடுக்கவும் தெருவோர மரங்களை அதிக அளவில் நட வேண்டும் என்று  உலகளாவிய காலநிலைமாற்றம் குறித்து ஆய்வு செய்யும் நிபுணரான ஹர்ஜீத் சிங் தெரிவித்தார்.

புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்த  ராக்ஸி மேத்யூ கோல் கூறியதாவது, வருங்காலங்களில் அடிக்கடி ஏற்படும் வெப்ப அலைகளை எதிர்கொள்வதற்கு, புதிய கொள்கைகளுடன் தொலைநோக்குப் பார்வையை ஏற்றுக்கொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.

நீர் வானிலை பேரழிவுகளின் அதிகரிப்பு மற்றும் கடும் வெப்பத்தால் பனிக்கட்டிகளில் ஏற்படும் தாக்கம் ஆகியவை கவலை கொள்ளச் செய்கின்றன. அறிவியல் உள்ளீடுகள் மற்றும் அறிவின் அடிப்படையிலான கொள்கைகள் மூலம் இந்த பிரச்சினைகள் துறை வாரியாக தீர்க்கப்பட வேண்டும் என்று காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் காலநிலை விஞ்ஞானியுமான ஷகில் அகமது ரோம்ஷூ தெரிவித்தார்.

Next Story