2018 ஜனவரி-நவம்பர் மாத காலத்தில் 22.58 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி


2018 ஜனவரி-நவம்பர் மாத காலத்தில் 22.58 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி
x
தினத்தந்தி 10 Jan 2019 10:32 AM GMT (Updated: 10 Jan 2019 10:32 AM GMT)

கடந்த 2018-ஆம் ஆண்டில், ஜனவரி-நவம்பர் மாத காலத்தில் 22.58 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி ஆகி இருக்கிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

இந்தியா 2-வது இடம்

சர்வதேச அளவில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. உயர்தர தேயிலையான ஆர்தோடக்ஸ் ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சி.டி.சி. தேயிலை பெரும்பாலும் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி-நவம்பர்) தேயிலை ஏற்றுமதி சற்றே குறைந்து 22.58 கோடி கிலோவாக இருக்கிறது. இதில் பாகிஸ்தானிற்கு மட்டும் தேயிலை ஏற்றுமதி (1.26 கோடி கிலோவில் இருந்து) 1.47 கோடி கிலோவாக அதிகரித்து இருக்கிறது. இதே காலத்தில் காமன்வெல்த் நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி (5.84 கோடி கிலோவில் இருந்து) 5.49 கோடி கிலோவாக குறைந்து இருக்கிறது.

மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரத்தின்படி, நவம்பர் மாதத்தில் மட்டும் ரூ.509 கோடிக்கு தேயிலை ஏற்றுமதி ஆகி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.537 கோடியாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 5 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதே காலத்தில், டாலர் மதிப்பில் தேயிலை ஏற்றுமதி 15 சதவீதம் சரிந்து (8.28 கோடி டாலரில் இருந்து) 7.08 கோடி டாலராக குறைந்துள்ளது.

2018-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.5,100 கோடிக்கு தேயிலை ஏற்றுமதியாகி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில் அது ரூ.4,988 கோடியாக இருந்தது. இந்த நிலையில், முதல் 11 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளதாக இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

காபி ஏற்றுமதி

நம் நாட்டில் காபி நுகர்வு குறைவாக உள்ளதால் உற்பத்தியாகும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது.

உள்நாட்டில் நுகர்வு மிகவும் அதிகமாக உள்ளதால் அதிக அளவு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. தேயிலை உற்பத்தியில் முன்னணி நாடுகளுள் ஒன்றான கென்யா அதன் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது.

Next Story