2018-ஆம் ஆண்டில், அளவு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 14.5% குறைந்தது


2018-ஆம் ஆண்டில், அளவு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 14.5% குறைந்தது
x
தினத்தந்தி 10 Jan 2019 11:05 AM GMT (Updated: 10 Jan 2019 11:05 AM GMT)

கடந்த 2018-ஆம் ஆண்டில், அளவு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 14.5 சதவீதம் குறைந்து 759 டன்னாக உள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

சீனா

உலக அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 800 டன் முதல் 900 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், 2018-ஆம் ஆண்டில் 759 டன் தங்கம் இறக்குமதி ஆகி இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 876 டன்னாக இருந்தது. ஆக, இறக்குமதி 14.5 சதவீதம் குறைந்துள்ளது. இதில் தங்கத்தாது இறக்குமதி 24.3 சதவீதம் அதிகரித்து சுமார் 280 டன்னாக இருக்கிறது.

இறக்குமதி செய்யப்படும் தங்கத் தாதுவிற்கு தற்போது 9.35 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதில் 3 சதவீத ஜி.எஸ்.டி.யும் சேர்ந்தால் மொத்த வரி 12.35 சதவீதமாக இருக்கும். இறக்குமதியாகும் சுத்த தங்கத்திற்கு மொத்தம் 13 சதவீத வரி விதிக்கப்படுகிறது (10 சதவீத இறக்குமதி வரி+3 சதவீத ஜி.எஸ்.டி). ஆக, சுத்தத் தங்கத்தைக் காட்டிலும் தங்கத் தாதுவிற்கு இறக்குமதி வரி கொஞ்சம் குறைவாக இருக்கிறது.

உள்நாட்டுத் தேவையை கருத்தில் கொண்டு தங்கம் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என ஆபரண தொழில் துறையினர் நீண்ட காலமாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிக வரி விதித்தும் தங்கம் இறக்குமதி அதிகமாக இருப்பதாக கருதுவதால் இது குறித்து பரிசீலிக்கும் எண்ணம் தற்சமயம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

நம் நாட்டில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக தங்கம்தான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்ற நிதி ஆண்டில் (2017-18) 955 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 22 சதவீதம் அதிகமாக இருந்தது.

சுத்திகரிப்பு

எம்.எம்.டி.சி. பாம்ப் மற்றும் சில நிறுவனங்கள் சுரங்கங்களில் இருந்து தங்கத்தாதுவை எடுத்து சுத்திகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. நடப்பு நிதி ஆண்டில் (2018-19) 250 டன் தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என சுத்திகரிப்பு நிறுவனங்கள் நம்புகின்றன. இதனால் இறக்குமதி பெரிதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story