ஜோடி பறவைகளின் பாசப் போராட்டம்


ஜோடி பறவைகளின் பாசப் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2019 3:57 PM GMT (Updated: 12 Jan 2019 3:57 PM GMT)

பறவை இனங்கள் ஆண்டு தோறும் இனப்பெருக்க காலமான கோடை காலங்களில் சாதகமான பருவ கால நிலை, சவுகரியமான அமைவிடம் கொண்ட பிரதேசங்களை தேடி நாடு கடந்து பயணிக்கின்றன.

அவைகளுக்கு சாதகமான சூழல் அமையாவிட்டால் ஆண்டு தோறும் வெவ்வேறு பிரதேசங்களை நோக்கி தேடலை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இணை பிரியாத ஜோடிகளாக பறந்து வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்து குஞ்சுகள் பொரித்து அவைகள் பறக்க பழகும் வரை தங்கி இருந்து, அவைகளுடன் நாடு திரும்புவதுதான் வழக்கமான நடைமுறை. அப்படி தென் ஆப்பிரிக்காவில் இருந்து நாடு கடந்து ஜோடியாக குரேஷியாவுக்கு பறந்து வந்த பெண் நாரை ஒன்று வேட்டைக்காரர்களின் வேட்டையில் சிக்கி சிறகுகளை இழந்து பறக்கமுடியாமல் பரிதவிப்புக்குள்ளானது. அதனால் தன் இணையை உடன் அழைத்து செல்ல முடியாமல் ஆண் நாரை மட்டும் தனியாக தன் சொந்த தேசமான குரேஷியாவுக்கு சென்றுவிட்டது. இந்த சம்பவம் நடந்தது 1993-ம் ஆண்டு. ஆண்டுகள் உருண்டோடி போனாலும் இந்த நாரை ஜோடிகளுக்கு இடையேயான பந்தம் இடைவெளி இல்லாமல் ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டிருக் கிறது. ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஆண் நாரை 5 ஆயிரம் மைல் தூரம் கடந்து இணையை தேடி வந்து கொண்டிருக் கிறது. பறக்க முடியாமல் இருக்கும் பெண் நாரை, அந்த ஆண் நாரையின் வருகையை எதிர்நோக்கி நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஆச்சரியப்படும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் மாதம் குறிப்பிட்ட நாட்களுக்குள் தவறாமல் ஆண் நாரை பறந்து வந்து அன்பை பொழிந்து கொண்டிருக்கிறது. குஞ்சுகள் பொரித்து அவை பறக்க பழகும் வரை இரை தேடி கொடுத்து உடன் தங்கி இருந்து பெண் நாரையை கவனித்து கொள்கிறது. பின்னர் குஞ்சுகளுடன் சொந்த நாட்டிற்கு பறந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு 16 ஆண்டு களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆண் நாரையின் வருகைக்காக பெண் நாரை மட்டும் அல்ல அந்த பகுதியை சேர்ந்த அனைவருமே ஆவலோடு காத்திருக்கிறார்கள். அந்த பெண் நாரைக்கு ‘மெலினா’ என பெயரிட்டு அடைக்கலமும், இரையும் தேடி கொடுத்து ஆதரவளித்து கொண்டிருக்கிறார், ஸ்டெஜ்பன் வோகிக். 71 வயதாகும் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

‘‘1993-ம் ஆண்டு இந்த பெண் நாரையின் கால்களில் வேட்டைக்காரர்களின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் பறக்க முடியாமல் சாலையோரம் துடிதுடித்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் அப்படியே அங்கு போட்டுவிட்டு வர எனக்கு மனமில்லை. வீட்டுக்கு தூக்கி வந்து சிகிச்சை அளித்தேன். கால்களில் இருந்த காயங்கள் குணமானது. ஆனாலும் பறக்கும் சக்தியை அது இழந்துவிட்டது. அதனால் இனி எங்கும் பறந்து செல்ல முடியாது என்பதால் எனது வீட்டிலேயே தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டேன்’’ என்கிறார்.

வானத்தை கூரையாக பாவித்து அதன் எல்லையை எட்டிப்பிடிக்கும் துடிப்புடன் சிறகடித்து வானில் வலம் வரும் நாரையை வீட்டில் இருட்டு அறைக்குள் அடைத்து வைப்பதற்கு வோகிக்கு மனம் வரவில்லை. தனது வீட்டு கூரையையே வானம் பார்க் கும் வேலியாக நாரைக்கு பரிசளித்துவிட்டார். வீட்டின் கூரையில் நாரை வசிப்பதற்கு ஏதுவாக கூண்டை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். அதனால் இரை தேட முடியாது என்பதால் தினமும் இரை தேடி கொடுத்து உபசரித்துக்கொண்டிருக்கிறார்.

‘‘தினமும் 30 கி.மீ. தூரம் சென்று குளத்தில் மீன்களை பிடித்துவந்து நாரைக்கு உணவாக கொடுத்து வருகிறேன். தனது இணையை பிரிந்து சென்ற ஆண் நாரை திரும்பவும் தேடி வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மறு ஆண்டு மார்ச் மாதம் பிரிந்து சென்ற அதே நாளில் திரும்பி வந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தேன். ஓராண்டுக்கு பிறகு தன் இணையை பார்த்ததும் மெலினா அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. வழக்கத்தை மீறி சுறுசுறுப்பாக இயங்கியது. கடந்த 16 ஆண்டுகளில் இரண்டும் சேர்ந்து 60-க்கும் மேற்பட்ட குஞ்சுகளை பொரித்து வளர்த்திருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் குஞ்சுகள் வளர்ந்து பறக்க தொடங்கியதும் ஆண் நாரை உடன் அழைத்து செல்வதை பார்த்து மெலினா சோகத்தில் ஆழ்ந்துவிடும். இரண்டு, மூன்று நாட்கள் உண்ணாமல், உறங்காமல் துயரத்தில் வாடிக்கொண்டிருக்கும். நான் அருகே சென்றாலும் கண்டு கொள்ளாது. படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி அடுத்த மார்ச் மாதத்தை எதிர்நோக்கி காத்திருக்க தொடங்கிவிடும்’’ என்கிறார், வோகிக்.

மெலினாவின் காதல் கதை, குரோஷியா முழுக்க பிரபலம். மார்ச் மாதம் பிறந்துவிட்டாலே, ஒட்டுமொத்த குரோஷிய மக்களும், மெலினாவின் ஆண் ஜோடியை எதிர்பார்க்கிறார்கள். ஆண் ஜோடி, ஸ்டெஜ்பன் வோகிக்கின் வீட்டை வட்டமடித்து, கூரையில் அமரும் வரை குரோஷிய மக்களின் தேடல் ஓயாது.

Next Story