சிறப்புக் கட்டுரைகள்

ருசிக்கிறது உணவு.. இனிக்கிறது வருமானம்.. + "||" + Tastes food .. Income is sweet ..

ருசிக்கிறது உணவு.. இனிக்கிறது வருமானம்..

ருசிக்கிறது உணவு.. இனிக்கிறது வருமானம்..
“வீட்டில் இருந்தே ருசியான பலகாரங்கள் தயாரித்து மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்” என்று புன்னகை பூரிக்க சொல்கிறார், பவுர்ணமி. இவர் முழுநிலவுபோல் சிரித்தமுகமாய் இருப்பதால் பெற்றோர் அப்படி பெயர் வைத்திருப்பார்கள் போலும்!
“எனது அக்காளும், தங்கையும் நன்றாக படிப்பார்கள். நான் படிப்பில் ரொம்ப சுமார். அவர்கள் இருவரும் படித்து முடித்து நல்ல வேலைக்கு போய்விட்டார்கள். நான் மட்டும் சாதாரண குடும்பத் தலைவியாக குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அது எனக்கு மனகஷ்டத்தை கொடுத்தது. வீட்டில் இருந்தே ஏதாவது ஒரு வேலையை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லை. ரொம்ப குழப்பமாக இருந்த நேரத்தில்தான் இந்த ‘ஐடியா’ தோன்றியது..” என்கிறார், பவுர்ணமி. கேரள மாநிலம் திருச்சூரில் இவரது வீடு உள்ளது.

“நான் ஒரு வருடமாக இந்த பலகாரங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்கு ‘சவுபர்ணிகா புட்ஸ்’ என்று பெயரிட்டிருக்கிறேன். என் கணவர் ஜினேஷ் தங்க ஆபரணங்கள் உருவாக்கும் வேலை பார்த்தார். அப்போது அவரிடம் சிலர் வேலை பார்த்தார்கள். முதலில் அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்கத் தொடங்கினேன். அப்போதுதான் சமையலில் ஆர்வம் அதிகரித்தது. அவர்களுக்கு சில நாட்கள் மாலை நேரங்களில் நானே இனிப்பு பலகாரங்கள் தயாரித்து கொடுத்தேன். பின்பு பேக்கரிகளில் வாங்கிக் கொடுத்தபோது, ‘நீங்கள் தயாரித்ததுபோல் ருசியாக இல்லை’ என்றார்கள். அவர்கள் குறிப்பிட்ட அந்த ருசி என்ற வார்த்தைதான் என்னை இதை ஒரு தொழிலாக செய்யத் தூண்டியது. முதலில் அக்கம்பக்கத்தினருக்கு பலகாரங்கள் தயாரித்து வழங்கினேன். அதன் பின்பு அப்படியே அது வியாபாரமாக பெருகிவிட்டது. நான் இதை ஒரு தொழிலாக செய்யத் தொடங்கிய பின்பும், வீட்டின் சுவைபோல் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்” என்கிறார், பவுர்ணமி.

இவர் இந்த தொழிலில் காலடி எடுத்துவைத்த நேரத்தில், இது தொடர்பான பயிற்சி வகுப்பு ஒன்றிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

“நான் கலந்துகொண்ட அந்த பயிற்சி வகுப்பு ரொம்ப வித்தியாசமானதாக இருந்தது. இதுபோன்ற துறைகளில் வெற்றி பெற்ற பெண்கள் பலர் வந்து, தங்கள் வெற்றி ரகசியங்களை சொன்னார்கள். அதை நானும் தெரிந்துகொண்டேன். ஆரோக்கியமான உணவை வழங்கவேண்டும். அக்கம்பக்கத்தில் வேலையில்லாமல் இருக்கும் அம்மாக்களுக்கு வேலையும் கொடுக்கவேண்டும் என்று விரும்பினேன். அதற்கு தக்கபடி என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் என்று பட்டியலிட்டேன். உன்னியப்பம், வெள்ளையப்பம், கொழுக்கட்டை, இலை அடை போன்றவைகளை தயாரித்து விற்கிறேன். இவை அனைத்தும் அரிசியும், தேங்காயும், வேறு சில பொருட்களும் சேர்ந்தவை. இவைகளை அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. அதனால் தேவையறிந்து தயாரித்து விற்பனை செய்கிறேன்” என்கிறார்.

தினமும் அதிகாலை மூன்றரை மணிக்கு பவுர்ணமி வேலையை தொடங்கி விடுகிறார். அவருடன் வேலைபார்க்கும் அம்மாக்களும் அந்த நேரத்திற்கு வந்துவிடுகிறார்கள். அன்றைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்பவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஓய்வெடுக்க போய்விடுகிறார்கள். பின்பு மீண்டும் மாலை நான்கு மணிக்கு வந்து அடுத்தகட்ட மாவு தயாரிப்பு பணிகளை தொடங்கி விடுகிறார்கள். பவுர்ணமியின் இந்த உணவுத் தயாரிப்புத் தொழில் விரிவடைந்து விட்டதால், அவரது கணவர் ஆபரண தயாரிப்பு பணியை விட்டுவிட்டு, மனைவிக்கு துணையாக இந்த தொழிலில் இறங்கிவிட்டார்.