சிறப்புக் கட்டுரைகள்

கனவு நனவாகுமா? + "||" + Dream come true?

கனவு நனவாகுமா?

கனவு நனவாகுமா?
“எப்படி இவ்வளவு மிகக்குறைவான எண்ணிக்கையில்தான் பெண்கள், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
பொது வாழ்க்கையில் பெண்கள் என்றைக்கு தங்கள் பங்களிப்பை செய்வதற்கு முழுமையான வாய்ப்பை பெறுகிறார்களோ, அன்றைக்குத்தான் இந்த நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்.” இது நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் கவலை தோய்ந்த வார்த்தைகள்.இந்த வார்த்தைகளை அவர் நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கடிதம் 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி தொடங்கி 1952-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி வரை நடந்து முடிந்த முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் எழுதப்பட்டது. முதல் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 489. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க் களின் எண்ணிக்கை, வெறும் 22 தான். 62 ஆண்டுகள் ஆன நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்த இடங்கள் 543. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி.க்கள் எண்ணிக்கை 66. இது மொத்த இடங்களில் 12.15 சதவீதம். முக்கிய பதவிகளை அரசியலில் பெண்கள் அலங்கரித்தாலும், காலங்கள் மாறினாலும், நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறவில்லை என்பது கசப்பான உண்மை.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் மார் தட்டிக்கொள்கிறோம். ஆனால் உலகளவில் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் என்று பார்த்தால் 190 நாடுகளில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் 153. நமது அண்டை நாடான பாகிஸ்தானில்கூட பெண்களுக்கு நடப்பு நாடாளுமன்றத்தில் 20 சதவீதம் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். தெற்கு சூடான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. சின்னஞ்சிறிய நாடான கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாதான் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்களை கொண்ட நாடு. இங்கு 61 சதவீதம் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.

உலகளவில் பெண் எம்.பி.க்களின் சராசரி எண்ணிக்கை 22.4 சதவீதம். அதைவிட மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான நிலை.இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களில் பெண்களின் பங்களிப்பு ஒற்றை இலக்கத்தில் அமைந்திருக்கிறது என்பது இன்னும் வெட்கக்கேடானது. அது 9 சதவீதம். அதிலும், புதுச்சேரி, நாகலாந்து ஆகிய இரு மாநிலங்களில் பெண் பிரதிநிதிகளே கிடையாது. இது இன்டர் பார்லிமென்டரி யூனியன் தருகிற புள்ளிவிவரம்.

இந்தியாவில் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறபோது, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விடுவோம் என்று அரசியல்வாதிகள் சொல்கிறார்கள். ஆனால் அன்றைக்கே அதை வழக்கம் போல மறந்து விடுகிறார்கள்.

முதன்முதலாக 1996-ம் ஆண்டு, நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா, அரசியல் சாசனத்தின் 108-வது திருத்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு பிறகு, 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. ஒரு போதும் ஓட்டெடுப்புக்கு விடப்படவும் இல்லை. 2014-ம் ஆண்டு 15-வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, மக்களவையில் இந்த மசோதா காலாவதியாகி விட்டது. அதன் பிறகு இன்றுவரை உயிரூட்டப்படவே இல்லை.

இந்த மசோதாவை நிறைவேற்றி விடுவோம் என ஒவ்வொரு முறையும் ஆளுங்கட்சிகள் கூறினாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. ஏனென்றால் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. ஆக 23 ஆண்டுகளாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற விடாமல் பல அரசியல்கட்சிகள் சீனப் பெருஞ்சுவராய் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது, “நாடாளுமன்ற, சட்டசபைக்கு வர பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மனம் உவந்து தர மாட்டோம், ஆனால் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும், அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும்” என்று பல தேசிய கட்சிகளும் சரி, மாநிலக் கட்சிகளும் சரி கணக்கு போடுகின்றன.

2014 நாடாளுமன்ற தேர்தலில் நாட்டில் உள்ள 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 16-ல் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்திருக்கிறார்கள் என்று இந்திய தேர்தல் கமிஷன் புள்ளி விவரம் சொல்கிறது.

இந்த நிலையில்தான் 17-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனியாவது நமக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா என்று 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பரிதவிக்கிறது. ஆனால் இந்த மசோதா ஒரு பக்கம் கிடப்பில் போடப்பட்டாலும், அரசியல் கட்சிகள் நினைத்தால் குறைந்தபட்சம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்த முடியும்.

ஒடிசா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பிஜூ ஜனதா கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துவதாக அந்தக் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் அறிவித்து இருக்கிறார். மேற்கு வங்காள மாநிலத்தில் அதை விட ஒரு படி மேலாக 40.5 சதவீதம் பெண் வேட்பாளர்களை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தி இருக்கிறது.

ஒவ்வொரு தேசிய கட்சியும், மாநில கட்சியும் 33 சதவீத அளவுக்கு பெண் வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்தினாலே, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறதோ இல்லையோ இப்போதைய நிலையை விட, அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்கள் வருவதற்கு வழி பிறக்கும்.எந்த அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறதோ அந்த கட்சிகளுக்கே வாக்களிப்போம் என்ற ஒரு நிலைப்பாட்டை பெண்கள் எடுத்தால் அது மாற்றத்தை கொண்டு வரும். ஏற்றத்தைக் கொண்டு வரும். கெஞ்சியது போதும் பெண்களே, நிமிர்ந்து நின்று முடிவு எடுங்கள். அதுதான் உங்கள் முன்னேற்றத்தின் முதல்படி.

- இலஞ்சியன்