பழந்தமிழர் கண்டறிந்த நெருப்பின் பயன்பாடுகள்...!


பழந்தமிழர் கண்டறிந்த நெருப்பின் பயன்பாடுகள்...!
x
தினத்தந்தி 14 April 2019 5:28 AM GMT (Updated: 14 April 2019 5:28 AM GMT)

சூரியன், நெருப்பு, நிலவு ஆகிய முச்சுடர்களையும் வணங்குவது தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும் என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார்.

சூரியன், நெருப்பு, நிலவு ஆகிய முச்சுடர்களையும் வணங்குவது தெய்வ வழிபாட்டுக்கு சமமாகும் என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் பெயர்களால் அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். விளக்கேற்றி வழிபடுவதை அனைத்துக் குடும்பங்களிலும் காண்கிறோம். அச்சத்தினால் அல்லது அன்பினால் தெய்வத்தை வணங்குங்கள் என்று தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார். நெருப்பை கண்டு தமிழர்கள் யாரும் அஞ்சவில்லை. அன்பினால் நெருப்பை வணங்கினர். மழை தரும் கதிரவனும், குளிர்தரும் நிலவும், ஒளிதரும் நெருப்பும் மிகுந்த அன்புக்குரியன. அன்புடையவர்களுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். அதனால்தான் நெருப்பு வழிபாடு தமிழர்களிடம் தோன்றியது. ஐம் பூதங்களில் நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் வரிசையில் நெருப்பு நடுவில் வைத்து எண்ணப்படுகிறது.

நெருப்பு கண்ணுக்குப் புலப்பட்டும், கையால் தொடும் திடப்பொருள் ஆக புலப்படாமலும் உள்ளது. இதனால்தான், நெருப்பின் வடிவம் கொண்ட சிவனை அருவுருவாக போற்றினர். நெருப்பு தன் இருப்பைக் காட்டிக்கொள்கிறது. ஆனால், நீளம், அகலம் உயரம் என்னும் திடப்பொருளுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வதில்லை. மாணிக்க வாசகர் நெருப்பு வடிவான சிவனை, வாழ்முதலாகிய பொருளே என்றார். தமிழர் பழக்க வழக்கங்களில் நெருப்பை வழிபடுவது மற்றும் பயன்கொள்வது மட்டும் அடங்கவில்லை. வாழ்வில் இன்பதுன்ப நேரங்களில் அரவணைக்கும் தாயாகவும் தீயைக் கருதினார்கள். தாங்க முடியாத துன்பங்களின்போது, தவிர்க்க முடியாத சூழலில் நெருப்பில் பாய்ந்து உயிர் விட்டனர். போர்க்களத்தில் தோற்றுப் போன மன்னனின் அந்தப்புர மகளிர் பகைவரின் கைகளில் கிடைக்காமல், தீப்பாய்ந்து உயிர்விட்டனர்.

தமிழ்ப்பெண்கள் மானத்தோடு வாழ்ந்து மானத்தோடு மடிவதைப் பெருமையாகக் கருதினர். இது போர்க்காலத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நெருப்பில் பாய்ந்து உயிர்விடும் முறையாகும். ஏனைய காலங்களில் கணவன் இறந்தால், மனைவியும் இறந்துவிட வேண்டும் என்னும் கட்டாயம் இருந்ததில்லை. பூதப் பாண்டியன் இறந்தபின் அவன்மனைவி பெருங்கோ பெண்டு தீப்பாய்வதை அனைவரும் தடுத்தனர் என்பது ஒன்றே உடன் கட்டை ஏறுவது கட்டாயமாக இருந்ததில்லை என்பதைக் காட்டுகிறது. ஆனால் வடநாட்டில், இது மூடநம்பிக்கை போல் பரவி சககமணம் என்னும் வழக்கமாக மாறியது. இதனை ராசாராம் மோகன்ராய் போன்ற பெருமக்கள் தடுத்ததால் அறவே தடைசெய்யப்பட்டு விட்டது. நெருப்பின் மேல் சத்தியம் செய்வது, நெருப்பை தாண்டுவது, தீக்குண்டத்தில் இறங்கி நடப்பது, தீச் சட்டி எடுத்து கோவிலை வலம் வருவது போன்ற வழக்கங்கள் நாளடைவில் தோன்றின. வெள்ளிக்கை வேளாளருள் ஒருபிரிவினர் எந்தப் பெண்ணின் மீதாவது களங்கம் கற்பிக்கப்பட்டால், அப்பழியிலிருந்து அவளை மீட்பதற்காக கன்னிப்பழி கழித்தல் என்னும் சடங்கை நடத்தி வந்தனர்.

மூத்த மகளிர் பலர் நள்ளிரவில் ஓரிடத்தில் ஒன்று கூடி, கன்னிப்பழி கழித்தல் சடங்கை நடத்தி வைப்பார்கள். ஒரு குச்சியால் பெரிய வட்டம் வரைவார்கள். அந்த வட்டத்தை சுற்றிலும் முள் மர விறகுகளை வைப்பார்கள். பழி சுமத்தியபெண்ணை ஈரப் புடவையோடு அழைத்துச் சென்று வட்டத்தின் நடுவில் நிறுத்துவார்கள். அவள் தலையில் ஏழுவகை முட்களால் ஆன முள் முடி சூட்டுவார்கள். பிறகுவட்ட விளிம்புள்ள விறகுக்குத் தீ வைப்பார்கள். வட்டமாக நெருப்பு எரியும்போது. அந்தப் பெண் தன் தலையில் உள்ள முள் முடியையும் அணிந்த ஈரப்புடவையையும் எரியும் நெருப்பில் எறிந்துவிட்டு, நெருப்பைத் தாண்டி ஓடிவந்துவிட வேண்டும். மூத்த மகளிர் அந்தப் பெண்ணுக்கு கன்னிப்பழி தீர்க்கப்பட்டதாக அறிவித்தபின் அந்தப்பெண்ணின் திருமணத்திற்கு எந்தத் தடையும் இருக்காது. இதுவே புராணக் கதைகளில் நெருப்பில் இறங்கி கற்பை நிரூபிக்கும் கதைகளாக மாறிவிட்டது. ராமாயணத்தில் சீதை நெருப்பில் இறங்கிய செய்தியும் இத்தகைய பழைய வழக்கத்தின் தொடர்ச்சி எனக் கருதப்படுகிறது. எனவே தீமிதிப்பது, தீச் சட்டி எடுப்பது போன்றவை தன்குற்றங்களிருந்து தன்னை நீக்கிக் கொள்ளும் அடையாளங்களாக பின்பற்றப்பட்டுவருகிறது எனலாம்.

காமன் பண்டிகையின் போது காமனைத் தீயிட்டு எரிப்பது, காமக் கோளாறுகளால் ஏற்படும் பண்பாட்டுச்சீரழிவை உணர்த்தியது. சூரியன், நிலவு, தீ ஆகிய மூன்றும் மூவேந்தர்க்குரிய குல அடையாளங்கள். வடநாட்டு ராசபுத்திரர்களிலும் சூரியன், நிலவு, தீ ஆகிய முப்பிரிவு குலங்கள் உள்ளன. சேர மன்னர் தீயை வழிபடும் பிரிவைச் சார்ந்தவர்கள். எனவே, அண்டையிலுள்ள கன்னடத்தார் தமிழர்களை தீக் குலத்தவர் என்னும் பொருளில் திகளர் என அழைக்கின்றனர். எனவே தீ தொடர்பான பழக்கவழக்கங்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தது என அறியமுடிகிறது. வள்ளல் பெருமானும் ஒளி வழிபாடே தமிழரின் உண்மையான தெய்வ வழிபாடு என நிலைநாட்டியதை உலகத் தமிழர் அனைவரும் போற்றத்தக்க பழந்தமிழர் தெய்வ நெறியாக உணர வேண்டும். தீ என்னும் சொல்லில் இருந்தே தெய்வம் என்றும் சொல் தோன்றியதாக வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர் மொழி ஞாயிறு பாவாணர் புலப்படுத்தியிருக்கிறார்.

ம.தாமரைச்செல்வி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

Next Story