இசை கேட்டால் புவி அசைந்தாடும்..


இசை கேட்டால் புவி அசைந்தாடும்..
x
தினத்தந்தி 14 April 2019 5:51 AM GMT (Updated: 14 April 2019 5:51 AM GMT)

கேரளாவில் இசைக்கு புகழ்பெற்ற இடம் வடக்கம் பரவூர். ஆதிசங்கரர் பிறந்த காலடிக்கு அருகில் இந்த ஊர் அமைந்திருக்கிறது.

கேரளாவில் இசைக்கு புகழ்பெற்ற இடம் வடக்கம் பரவூர். ஆதிசங்கரர் பிறந்த காலடிக்கு அருகில் இந்த ஊர் அமைந்திருக்கிறது. பரவூர் என்பது மருவி பரூர் ஆகி, வயலின் இசையில் புது சகாப்தத்தையும் தொடங்கியது. அதற்கு ‘பரூர் ஸ்டைல்’ என்று பெயர். அதாவது கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை ஆகிய இரண்டிலும் உள்ள சிறப்புகளை எடுத்து புதுப்பாணியில் உருவாக்கப்பட்டது, பரூர் ஸ்டைல். வயலின் இசையில் இ்ந்த புது பாணியை உருவாக்கியவர், பேராசிரியர் பரூர் சுந்தரம் ஐயர். இவரது இசை ஆராய்ச்சிப் பயணம் நீண்டது.. நெடியது.

“பரூர் சுந்தரம் ஐயர் என் தாத்தா. அவரது இசைத் தேடல் வியப்பிற்குரியது. பழைய காலத்திலே மும்பை சென்று, இந்துஸ்தானி இசை ஜாம்பவனான பண்டிட் விஷ்ணு திகம்பர் பலுஸ்கரிடம் இந்துஸ்தானி இசையை கற்றுத் தேறி, அவரோடு இணைந்து வயலின் வாசித்தார். பின்பு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் வயலின் பேராசிரியராக பணியாற்றினார். அப்போது உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞர் பண்டிட் ஓம்கார்நாத் தாகூரும் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார். தாத்தாவிடமிருந்து எனது தந்தை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலின் கற்றுத்தேறினார். தாத்தாவும், தந்தையும் உலகம் முழுக்க இசைப் பயணம் மேற்கொண்டார்கள். எனது தந்தை பத்மபூஷன் விருதும் பெற்றார்” என்று குடும்பத்தின் பூர்வீக இசைப் பெருமையை எடுத்துரைக்கிறார், கலை மாமணி முனைவர் நர்மதா.

இவர் பரூர் பாணி வயலின் பாரம்பரியத்தில் மூன்றாம் தலைமுறை இசை கலைஞர். பரூர் பாணி வயலின் இசையை உலக நாடுகளுக்கு கொண்டு செல்வது, சர்வதேச அளவில் இசைக் கலைஞர்களை உருவாக்குவது, பல்கலைக்கழகங்களில் இசை கருத்தரங்குகளை நடத்துவது என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். மத்திய அரசின் கலாசார துறைக்காக நீண்ட இசை ஆராய்ச்சி ஒன்றிலும் ஈடுபட்டிருக்கிறார்.

“சமீபத்தில் இந்திய அரசின் கலாசார தூதராக ரஷியாவுக்கு வயலின் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு சென்றிருந்தேன். மாஸ்கோ, சோச்சி, ராஸ்டர்டாம், விளாடிவாஸ்டாக் ஆகிய நான்கு நகரங்களில் பெருந்திரளான ரஷிய மக்களுக்கு மத்தியில் இசை விருந்து அளித்தேன். எனது வயலினில் இருந்து இந்திய தேசபக்தி பாடல்கள், கர்நாடக இசை, ரஷிய கிராமிய பாடல் ஆகியவைகளை இசைத்தேன். அங்குள்ள மக்கள் ரசித்து பாராட்டினார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களில் பெரும்பாலானவர்கள் என்னை புன்னகையோடு சூழ்ந்து கொண்டு, ஏதோ கேட்டார்கள். ரஷிய மொழி என்பதால் புரியவில்லை.

பின்பு மொழிப்பெயர்ப்பாளர் வந்து ஆங்கிலத்தில் விவரித்தபோதுதான் அவர்கள், ‘எங்கள் கிராமியப்பாடலான கலிங்காவை உங்களால் எப்படி இவ்வளவு அற்புதமாக வயலின் இசையில் கொண்டு வர முடிந்தது?’ என்று கேட்டார்கள் என்பது புரிந்தது. அவர்களது கிராமிய பாடலை நான் கற்றுக்கொண்டது ஒரு அருமையான அனுபவம். நான் வாய்ப்பாட்டிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருப்பதால், அதை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டு, வயலின் இசையில் தரமுடிந்தது.

இந்தியாவில் இருந்து செல்லும் நம்மவர்கள் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும்போது, நாம் இசைக்கும் வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் போன்றவை அந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு புதிதாக தோன்றும். அப்போது நாம் அவர்களுக்கு அந்த இசைக்கருவிகளை பற்றியும் எடுத் துரைக்கவேண்டியதிருக்கும். ஆனால் வயலின் உலகம் முழுக்க தெரிந்த இசைக்கருவியாக இருப்பதால், அதற்கு விளக்கம் தேவையில்லை. அதே நேரத்தில் உலக அளவில் மக்கள் வயலின் இசையில் மிகுந்த தேர்ச்சிபெற்றிருப்பதால் அவர்களே, சபாஷ் சொல்லும் அளவுக்கு வயலினில் நமது புலமையை நிரூபிக்க வேண்டியதிருக்கிறது” என்கிறார், முனைவர் நர்மதா.

இவரது இசைப் பயணம் எப்போது, எப்படி தொடங்கியது? என்ற கேள்விக்கு ஆச்சரியமான பதிலைத் தருகிறார்.

“நான்கு வயதிலே எனது இசைப்பயணம் தொடங்கிவிட்டது. அம்மா மீனாட்சி கோபாலகிருஷ்ணன் எனக்கு வாய்ப்பாட்டு கற்றுத்தந்தார். பின்பு வயலினில் கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை போன்றவைகளை தாத்தாவிடமும், அப்பாவிடமும் கற்றேன். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் இசையில் எம்.ஏ. பட்டம் பெற்றேன். இந்துஸ்தானி இசையை மிக ஆழ்ந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக டெல்லிக்கு சென்று பேராசிரியர் தபு சவுத்ரி, மும்பையில் டாக்டர் கே.ஜி.ஹிண்டே, இந்தூரில் பண்டிட் ஸ்ரீகிருஷ்ணசகானீர் ஆகியோரிடம் பயிற்சிபெற்றேன்.

பின்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. ஆய்வு படிப்பை மேற்கொண்டேன். இந்துஸ்தானி- கர்நாடக இசைகளை ஒப்பிட்டு ஆய்வு செய்தேன். ஆய்வுக்காக மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்பட எட்டு மாநிலங் களுக்கு சென்று புகழ்பெற்ற இசைக் கலைஞர்களை சந்தித்தேன். அங்குள்ள இசை வடிவங்களை எல்லாம் சேகரித்தேன். இந்தியாவில் உள்ள பிரபலமான கோவில்களில் இருக்கும் இசை தொடர்புடைய சிற்பங்களையும் ஆய்வுக்கு உள்படுத்தினேன். அங்கெல்லாம் எனக்கு கிடைப்பதற்கரிய இசைப் பொக்கிஷங்கள் கிடைத்தன. அவைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றேன். அந்த அற்புதமான ஆய்வுத் தகவல்களை எல்லாம் தொகுத்து ‘இந்தியன் மியூசிக் அண்ட் சஞ்சாரா இன் ராகாஸ்’ என்ற பெயரில் ஆங்கில புத்தகம் வெளியிட்டேன். அது இசை விமர்சகர் களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுத்தந்தது” என் கிறார்.

நர்மதா பத்து வயதில் மேடைகளில் வயலின் கச்சேரி நிகழ்த்த ஆரம்பித்திருக்கிறார். 16 வயதில் தனது தந்தையுடன் ஆஸ்திரேலியா சென்று நிகழ்ச்சி நடத்திஇருக்கிறார். இதுவரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பத்தாயிரம் மேடைகளில் கச்சேரிகள் நடத்தியிருப்பதாகவும் சொல் கிறார்.

“நான் வயலின் கச்சேரிகள் நடத்துவது ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், வயலின் இசையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதிலும் அதிக கவனம் செலுத்துகிறேன். அதனால் மத்திய அரசின் உதவியோடு இசை ஆய்வுகளையும் மேற்கொள்கிறேன். ஏற்கனவே பல்கலைக்கழக மானியக்குழுவின் உதவித்தொகையை பெற்று ஆய்வு செய்தேன். தற்போது சி.சி.ஆர்.டி. சீனியர் பெலோஷிப் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், வயலின் இசை வரலாற்றை திரட்டி ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.

பரூர் வயலின் பாணி பற்றி அதில் விரிவாக பதிவு செய்கிறேன். எனது தாத்தா, அப்பாவின் இசைப்பயணம், அவர்கள் நளினகாந்தி, குமுதகிரியா, ஹமீர் கல்யாணி, சிந்து பைரவி போன்ற ராகங்களை பரூர் பாணியில் இசைக்கும்முறை பற்றியும் குறிப்பிடுகிறேன். இது இசை பயில விரும்பும் அடுத்த தலைமுறைக்கு பெரும் பொக்கிஷமாக இருக்கும். எனது தாத்தா பற்றி இ்ன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூற விரும்புகிறேன். ஆர்மோனியமும், சாரங்கியும் நிறைந்திருக்கும் வட இந்தியாவில் வயலின் இசைக்கருவியை அவர் அறிமுகம் செய்தார். அங்கிருந்து இந்துஸ்தானி இசையை கற்றுவந்து, சென்னையில் பிரபலப்படுத்தினார். இவை எல்லாம் இசை வரலாற்றில் இடம்பெறத் தகுந்த தகவல்களாகும்” என்றார்.

முனைவர் நர்மதாவின் இசைப் பயணத்தில் ‘இசை மனித மன நிலையிலும், உடல்நிலையிலும் எத்தகைய மாற்றங்களை உருவாக்கும்?’ என்பது பற்றிய ஆய்வும் இடம் பெற்றிருக்கிறது.

“அந்த ஆய்வினை நாங்கள் புனேயில் உள்ள கல்லூரி மாணவர்கள் மத்தியில் மேற்கொண்டோம். அதிக பரபரப்பு நிறைந்த பரீட்சை காலத்தில் 100 மாணவ- மாணவிகளை அழைத்து, வயலின் மூலம் குறிப்பிட்ட ராகங்களை இசைத்து, அதை அவர்களை ஆழ்ந்து ரசிக்கவைத்தோம். அது தியானத்தை போல் அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. லட்சியத்தை நோக்கி பயணிக்கும் விதத்தில் அவர்களிடம் மனோபலமும் அதிகரித்தது. தேர்விலும் அவர்கள் அதிக மதிப்பெண் பெற்றார்கள். பொதுவாகவே மனதில் அமைதி, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஏற்பட்டால் அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மூளையின் சக்தி கூர்தீட்டப்படுவதால் செயல்திறனும் அதிகரிக்கும்.

இசைக்கு மனித மன- உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி இருப்பது, ஏழாம் நூற்றாண்டிலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் நவஆவரண கீர்த்தனையில், சஹானா ராகத்தால் உடல்- மன ஆரோக்கியத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். மியூசிக்தெரபி இசை ஆய்வுகளில் நாம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியதிருக்கிறது” என்று கூறும் நர்மதா, பல்கலைக்கழகங்களில் இசை கருத்தரங்குகள் நடத்து கிறார். இசை பயிற்சியும் அளித்து வருகிறார். இவர் சென்னையில் மகள் ஜெயலட்சுமியுடன் வசிக்கிறார். இவருக்கு கேரள சங்கீத நாடக அகாடமி விருது உள்பட ஏராளமான விருதுகள் கிடைத்திருக்கின்றன.

இவரது வெளிநாட்டு பயணங்களில் இத்தாலியில் உள்ள ‘வயலின் கிராமம்’ இவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அது பற்றி விளக்குகிறார்!

“இத்தாலியில் உள்ள கிரமோனா என்ற கிராமத்தை ‘மெக்கா ஆப் வயலின் வில்லேஜ்’ என்று குறிப்பிடுவார்கள். வயலின் இசைக் கருவியின் தொழில்நுட்பம் அங்குதான் வளர்ந்தது. வயலின் இசையின் வரலாறும் அங்குதான் உருவாகியிருக்கிறது. அதை குறிப்பிடும் விதத்தில் அங்கு வயலின் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு தங்கம், வைரம், பிளாட்டினம் போன்றவைகளால் வடிவமைக்கப்பட்ட வயலின்களும் உள்ளன. உலகின் தலைசிறந்த வயலின் வடிவமைப்பாளர்கள் அந்த கிராமத்தில் வசிக் கிறார்கள். சிறந்த வயலின் 72 விதமான மரங்களில் தயார் ஆகிறது. அதில் 50 விதமான பாகங்கள் இணைக்கப்படுகின்றன. எங்கேயும் ஆணி பயன்படுத்தப்படு வதில்லை. வெளி நாடுகளில் வயலின் செய்வது ஒரு பாடத்திட்டமாகவும் கற்றுக்கொடுக்கப்படுகிறது” என்று கூறும் முனைவர் நர்மதாவிடமும் மிக அபூர்வமான வயலின்கள் இருக்கின்றன.

“என் தாத்தா, என் அப்பா பயன்படுத்திய மிக பழமையான வயலின்களை நான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அவை உலகின் பலபகுதிகளில் உள்ள பல்லாயிரம் மக்களுக்கு இசைவிருந்து அளித்திருக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் உலகத்திலே சிறந்த பரிசும், விருதும் அவைதான். என்னிடம் விலைமதிப்பற்ற 15 வயலின்கள் உள்ளன. அவைகளை அப்படியே வைத்திருக்க முடியாது. அதனால் தினமும் அவை ஒவ்வொன்றையும் எடுத்து சிறிது நேரம் வாசித்து, பாதுகாக்கிறேன். நான் தினமும் நான்கு மணிநேரம் சாதகமும் மேற்கொள்கிறேன்” என்கிறார்.

எல்லைகடந்து செல்லும் முனைவர் நர்மதாவின் இசைப்பயணம் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கட்டும்!

Next Story