சிறப்புக் கட்டுரைகள்

கணியான் கூத்து தமிழர்களின் கலைக்கூத்து + "||" + Kanyakum Kuttu Tamil artist

கணியான் கூத்து தமிழர்களின் கலைக்கூத்து

கணியான் கூத்து தமிழர்களின் கலைக்கூத்து
தமிழகத்தின் நெல்லை, தூத்துக்குடி, விருது நகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மக்கள் குலதெய்வ வழிபாட்டை கடைப்பிடிப்பது வழக்கம். பெரும்பாலும் காட்டுப்பகுதி மற்றும் ஆறு, குளக்கரைகளில் இருக்கும் இந்த கோவில்களில் சாஸ்தா தான் பிரதானம். கருப்பசாமி, சுடலைமாடசாமி, பேச்சி, பிரம்மசக்தி, இசக்கியம்மன் உள்ளிட்ட தெய்வங்களும் அவர்களால் வழிபடப்படுகின்றன.
இவற்றில் சுடலைமாடசாமியை துடிப்பான சாமி, காவல் தெய்வம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட தெய்வம் என கூறும் பக்தர்கள், அதற்கு ஆண்டுதோறும் கொடை விழா நடத்தி வருகிறார்கள். அந்த விழாவில் முக்கியத்துவம் பெறும் கலைநிகழ்ச்சி கணியான் கூத்து ஆகும். இதில் கூத்து கலைஞருடன், அந்த கொடை விழாவில் சாமி ஆடுகிறவரும் சேர்ந்து ஆடுவதால் அந்த நிகழ்ச்சி பெரும் பரவசத்தை ஏற்படுத்தும்.

கணியான் கூத்தில் அண்ணாவி (முதன்மை பாடகர்) என்பவர் தலைவராக இருந்து சுவாமி கதைகளை பாடுவார். இவரது அருகில் பக்கப்பாட்டு பாட ஒருவரும், மகுடம் அடிக்க 2 பேரும் இருப்பார்கள். மகுடம் என்பது மாட்டு தோலில் செய்யப்பட்ட சிறந்த இசைக் கருவி. இது ஒரு பக்க தோல் முரசு. இதை அந்த கலைஞர்கள், அண்ணாவி பாடுகின்ற பாட்டு - கதைக்கு ஏற்றவாறும், அண்ணாவியின் ராகத்திற்கு தகுந்தபடியும் அடித்து இசைப்பார்கள்.

இந்த இசைக்கு ஏற்ப பெண் வேடமிட்ட 2 ஆண்களும் ஆடுவார்கள். இவர்களை வேஷக்காரன் என்று அழைப்பார்கள். இவர்கள் பெண்கள் போல் நேர்த்தியாக புடவை உடுத்தி, காலில் சலங்கை கட்டி, செயற்கையான கூந்தலில் கொண்டைபோட்டு பூவைத்து நடனமாடு வார்கள். அவர்களுடைய ஆட்டத்திற்கு இணையாக சாமி ஆடுபவரும் ஆடுவார். சில கோவில்களில் சாமி ஆடுகிறவருக்கு சாமி வரவில்லை என்றால் இந்த கலைஞர்கள் அவர் முன்பு நின்று பாட்டு பாடிய பிறகு தான் சாமி வரும். அந்த அளவிற்கு பக்தியுடன் பாடுவார்கள்.