சிறப்புக் கட்டுரைகள்

தமிழில் பேச தயங்க வேண்டாமே..! + "||" + Do not hesitate to speak in Tamil ..!

தமிழில் பேச தயங்க வேண்டாமே..!

தமிழில் பேச தயங்க வேண்டாமே..!
தமிழ் வெறும் பேச்சு மொழி மட்டும் அல்ல. தமிழ், உயிர் மொழி. ‘இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாவேந்தர் பாரதி தாசன். இது, தொன்மையான மொழி என்பதோடு, மிகவும் இனிமையான மொழி. இதனால் தான், மகாகவி பாரதியார், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியுள்ளார்.
ஆனால், இன்றைக்கு எழுத்துக்களில் வாழும் மொழி, உச்சரிப்பில் வாழ்வது இல்லை. பிள்ளைகளுக்கு வைக்கும் பெயரில் இருந்து, கடைகளுக்கு வைக்கும் பெயர் வரை அரிதாகிறது தமிழ். அண்டை மாநிலம் கேரளாவில் ஏதேனும் ஒரு தேநீர் கடைக்கு சென்று ‘ஒரு சாயா கொடுங்கள்’ என்று கேட்டால் அங்கே இயல்பில் எந்த மாற்றமும் இன்றி தேநீர் கிடைத்து விடுகிறது. தமிழகத்தில் நகர்ப்புறமோ, புறநகர் பகுதியோ ஒரு தேநீர்க்கடைக்கு சென்று, ‘ஒரு குவளை தேநீர் கொடுங்கள்’ என்று கேட்டால், கேட்பவர் முகத்தை கடைக்காரர் திரும்பி பார்த்து நகைப்பது இயல்பு. இங்கே இயல்பு மாறுகிறது. இந்த மாற்றம் தான் தமிழ் சொற்கள் உச்சரிப்பில் இருந்து இழந்துள்ளதை உணர வைக்கிறது.

தமிழ்நாட்டில் எத்தனையோ கடைவீதிகள் உள்ளன. ‘வெதுப்பகம்’ என்ற வார்த்தையை பெயர் பலகையில் காண முடிந்தால் தமிழ் ஆர்வலர் களுக்கு அதை விட மகிழ்ச்சி வேறு இருக்காது என்றே கூறலாம். காரணம், வெதுப்பகம் என்ற சொல்லை பேக்கரி என்று மொழி பெயர்த்தால் தான் பலருக்கும் தெரியும் என்கிற நிலைமை உள்ளது.

மெடிக்கல் என்ற சொல் தமிழ், ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்டு இருக்கும். அங்கே மருந்தகம் அல்லது மருந்துக்கடை என்ற வார்த்தை இருப்பது இல்லை. இப்படி சொற்களை பயன்படுத்த ஏற்படும் தயக்கம், பிற மொழி கலப்பு போன்றவை தமிழ் வார்த்தைகளை பாதுகாக்கவும், தொடர்ந்து பயன்படுத்தவும் வேண்டிய கட்டாய தேவையை ஏற் படுத்தி உள்ளது.

உலக அளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்து விடும் வாய்ப்பு உள்ள 25 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்து இருந்தது. பயன்படுத்தாத எதுவொன்றும் படிப்படியாக அழிந்துவிடும் என்பார்கள். அந்த வகையில், சொற்களை இழந்துவிட்டால் மொழியும் நீண்டகாலம் உயிர்ப்புடன், இனிமையுடன் வாழாது.

ஆக, தமிழ் நமது உயிர் மொழி. அதை உச்சரிக்க தயக்கம் தேவையில்லை. தூய ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக கருதுவதும், தூயத் தமிழில் பேசினால் அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்ற தயக்கத்தில் தமிழ் வார்த்தைகளை தவிர்ப்பதும் ஒருவிதமான மனக்குழப்பம் என்றே கூறலாம். முடிந்தவரை அன்றாடம் வழக்கத்தில் பிற மொழிகளை தவிர்த்து, தமிழ் சொற்களை பயன்படுத்தும் பழக்கத்தை தமிழர்கள் வளர்த்துக் கொண்டால், தமிழின் சிறப்புகளை அடுத்த தலைமுறையினரும் தூக்கிப் பிடிப்பார்கள்.

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது வெறும் முழக்கமாக மட்டும் இருக்கிறது. அது, அன்றாட சொற்கள், பேச்சில் புழக்கமாகவும் இருக்க வேண்டும்.