ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளும், தமிழர் பண்பாடும்...!


ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளும், தமிழர் பண்பாடும்...!
x
தினத்தந்தி 17 April 2019 6:34 AM GMT (Updated: 17 April 2019 6:34 AM GMT)

ஒரு வழியாக ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அறிவியல் முறைப்படி மத்திய அரசு அதன் காலத்தை வெளியிட்டுள்ளது.

ஆதிச்ச நல்லூர் திருநெல்வேலி கொற்கை சாலையில் 24 கி.மீட்டர் தொலைவில் தென்கிழக்காக தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தற்போது காலக்கணிப்பு செய்யப்பட்ட காலம் தொல்லியல் அறிஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

மத்திய அரசு தொல்லியல் துறை இரண்டு காலங்களை அறிவியல் முறைப்படி வரையறுத்துள்ளது; ஒன்று கி.மு. 905 மற்றொன்று கி.மு. 696. இவை இரண்டுமே இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் காலக்கணிப்பு செய்யப்பட்ட அகழாய்வு இடங்களில் காலத்தால் முற்பட்டவையாக விளங்குகின்றன. இக்காலக்கணிப்பின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவை 2004-ம் ஆண்டில் மத்திய அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருள்களின் அடிப்படையில் தான். ஆதிச்சநல்லூர் அகழாய்வினை முதன் முதலில் ஜெர்மனியைச் சார்ந்த ஆண்ட்ரோ ஜாகர் என்பவர் 1876 -ம் ஆண்டு மேற்கொண்டார்.

1899 முதல் 1902 வரை இங்கு இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் அலுவலர் அலெக்சாந்தர் ரே என்பவர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகளை மேற்கொண்டு ஏறக்குறைய 7 ஆயிரம் அரும்பொருள்களைக் கண்டெடுத்தார். அதன் பின்பு 1903-ம் ஆண்டில் பாரிஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த லூயிஸ் லாபிக் என்பவர் இங்கு அகழாய்வுகள் மேற்கொண்டு பல அரும்பொருள்களை அகழ்ந்தெடுத்தார். தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் ஹெண்டர்சன் என்பவரும் அகழாய்வுகள் மேற்கொண்டார்.

நூறு ஆண்டுகளுக்குப்பின் ஆதிச்சநல்லூரில், மீண்டும் 2004 முதல் 2006-ம் ஆண்டு வரை மத்திய அரசு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்ட இடம் அங்கு வாழ்ந்த மக்களின் இடுகாடாக விளங்கிய ஈமப்பகுதியாகும். இந்த அகழாய்வில் 200-க்கும் மேற்பட்ட ஈமத்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு கிடைத்த ஈமத்தாழிகள் வழவழப்பான மெருகூட்டப்பட்ட பானைகளால் வடிவமைக்கப்பட்டு கருப்பு சிவப்பு பானைகளாக இருப்பது சிறப்புக்குரியது.

பொதுவாக தமிழகத்தில் ஈமத்தாழிகள் பெரும்பாலும் சொரசொரப்பான மண்ணால் செய்யப்பட்ட தாழிகளாகவே உள்ளன. பொதுவாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருப்பு சிவப்பு மட்கலன்களை உயர்குடி மக்களே பயன்படுத்துவர் என கருதுவர். இங்கு வாழ்ந்த மக்கள் இறந்தவர்களைப் புதைப்பதற்கே இவ்வரியவகை மட்கலன்களைப் பயன்படுத்தியுள்ளமை இம்மக்கள் உயர்ந்த பண்பாட்டைக் கொண்டு செல்வச்செழிப்புடன் விளங்கியிருத்தல் வேண்டும் என்பதை காட்டுகின்றன.

கடந்த நூற்றாண்டில் மேற்குறித்த ஆய்வாளர்களால் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரும்பொருள்கள் போல் தமிழகத்தில் வேறு எந்த அகழாய்வுகளிலும் அரும்பொருள்கள் இதுவரை கிடைத்ததில்லை. ஆதிச்சநல்லூரில் வெண்கலத்தால் ஆன பொருள்களும் பொன் மற்றும் மணி அணிகலன்களும் பெருமளவில் கிடைத்துள்ளன. பொன் அணிகலன்களில் அருமணிகளைக் கோத்துள்ளனர். அலெக்சாந்தர் ரே செய்த அகழாய்வில் பொன்னால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டங்கள் பல அதிக அளவில் கிடைத்தன. இவை தட்டையான நீள்சதுர வடிவம் அல்லது இலை வடிவில் உள்ளன. இவற்றின் இருபக்க ஓரங்களிலும் நூலைக் கோப்பதற்கான துளைகள் உள்ளன. இங்கு வாழ்ந்த மக்களால் சடங்கின் போது இவை நெற்றிப் பட்டங்களாகப் பயன்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இது போன்ற பொன்னால் செய்யப்பட்ட நெற்றிப் பட்டங்கள் தமிழகத்தின் வேறு எந்த அகழாய்விலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் தமிழகத்தில் திருமணத்தின் பொழுது மணப்பெண்ணிற்கும், மணமகனுக்கும் தங்கமுலாம் பூசப்பட்ட செம்பாலான நெற்றிப் பட்டங்களைக் கட்டுவது மரபாக இருந்து வருகிறது. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மோதிரங்கள், கைவளைகள், வளையல்கள் மற்றும் வெண்கலத்தால் ஆன வீட்டு உபயோகப்பொருள்கள், விளக்குகள், பல்வகை விலங்கு உருவங்களுடன் கூடிய அலங்காரப் பொருள்கள் போன்றவை மிகுந்த அளவில் கிடைத்தன.

மேற்குறித்த அரும்பொருள்கள் யாவும் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். அண்மையில் 2004-ம் ஆண்டு அகழாய்வுகளில் இவ்வகையான பொருள்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது வியப்புக்குரியது. முந்தைய அகழாய்வுகள் ஆதிச்சநல்லூர் மக்கள் வாழ்ந்த பகுதிகளைத் தெரிவு செய்து கடந்த நூற்றாண்டில் மேற்கொண்டனர். ஆனால் 2004-ம் ஆண்டு அகழாய்வுகள் இம்மக்களின் பயன்பாட்டில் இருந்த இடுகாட்டுப் பகுதிகளில் தான் மேற்கொள்ளப்பட்டன. எனவே இறந்தவர்களைப் புதைக்கும் ஈமத்தாழிகளே இங்கு அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஈமப்பகுதிகள் உள்ள இடத்தை ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் திறந்த வெளிச் சுரங்கங்களாகவும் பயன்படுத்தியுள்ளனர். இச்சுரங்கங்களில் இருந்து பொன் மற்றும் செப்புக் கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளன. இம்மக்கள் பயன்படுத்திய பொன் அணிகலன்கள் மற்றும் வெண்கலப் பொருள்கள் இக்கனிமங்களிலிருந்தே செய்யப்பட்டுள்ளன. கனிமங்களின் சுவடுகள் இருப்பதை சென்னையிலுள்ள தேசிய கடலாய்வு நிறுவனத்தினர் 2004-2006-ம் ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 175-க்கும் மேற்பட்ட ஊர்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தான் பெருமளவில் பொன் மற்றும் வெண்கலத்தால் ஆன பொருள்களும் கருப்பு, சிவப்பு நிறத்தால் ஆன முதுமக்கள் தாழிகளும் பெருமளவில் கிடைத்துள்ளன. ஜோகர், லூயிஸ் லாபிக் மற்றும் அலெக்சாந்தர் ரே ஆகியோர் அகழாய்வுகள் செய்த ஆதிச்சநல்லூரின் வாழ்விடப் பகுதிகளைக் கண்டுபிடித்து அப்பகுதிகளில் அகழாய்வுகள் மேற்கொண்டால் மட்டுமே ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த தமிழர்களின் முழுமையான வரலாற்றை அறிய முடியும். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கால கட்டங்களான கி.மு. 905 மற்றும் கி.மு. 696 என்பவை ஈமப்பகுதிகளிலிருந்து பெறப்பட்டக் காலக்கணிப்பு. ஆதிச்சநல்லூரின் அருகிலுள்ள கொற்கையில் தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வினை மேற்கொண்டு கிடைத்த பொருளின் காலத்தை கரிமம் 14 காலக்கணிப்பு முறைப்படி காலம் கி.மு. 785 என வரையறுத்தனர். எனவே ஆதிச்சநல்லூர் சிறந்த ஒரு நகரமாகவும் கொற்கை கடற்கரைத் துறைமுகமாகவும் நீண்ட காலங்கள் இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. இவ்விரு பகுதிகளிலும் மீண்டும் அறிவியல் முறைப்படி அகழாய்வுகள் செய்வதுடன் இதுவரை அகழாய்வுகள் செய்யப்பட்ட தமிழகத்தின் பிற இடங்களின் காலத்தையும் அறிவியல் முறைப்படி காலக்கணிப்பு செய்தால் மட்டுமே தமிழர்களின் தொன்மையையும், காலத்தையும் முழுமையாக அறிய முடியும்.

- பேராசிரியர் சு.ராசவேலு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

Next Story