சிறப்புக் கட்டுரைகள்

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு கல்வி இலவசம் + "||" + Educational free of plastic waste

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு கல்வி இலவசம்

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு கல்வி இலவசம்
பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொண்டு செல்லும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலிக்காமல் இலவச கல்வி அளிக்கப்படுகிறது
வீடுகளிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொண்டு செல்லும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வசூலிக்காமல் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. அதனால் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு பாடப்புத்தகங்களை சுமக்கும் பைகளுக்கு இணையாக பிளாஸ்டிக் கழிவுகளையும் கொண்டு செல்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த வித்தியாசமான பள்ளிக்கூடம் அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் அமைந்திருக்கிறது.

பர்மிதா சர்மா - மஜின் முக்தார் தம்பதியர் இந்த பள்ளிக்கூடத்தை நிர்வகிக்கிறார்கள். இருவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். அதன் தாக்கம் அவர்கள் கட்டமைத்திருக்கும் பள்ளிக்கூடத்திலும் வெளிப்படுகிறது. மேற்கூரை, சுவர்கள், ஜன்னல்கள், மேஜைகள், நாற்காலிகள் என பள்ளிக்கூடம் முழுவதும் மூங்கில்கள்தான் வாசம் செய்கின்றன. திறந்தவெளி பள்ளிக்கூடம் போல காற்றோட்டமான வசதியுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

‘‘எங்கள் பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினை இருந்தது. அடிக்கடி பிளாஸ்டிக் கழிவுகளை தீவைத்து கொளுத்திக்கொண்டிருப்பார்கள். அதில் இருந்து எழும் நச்சு புகைகள் வகுப்பறைக்குள்ளும் புகுந்து கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்துதான் மாணவர்களை பள்ளிக்கூடத்திற்கு வரும்போது பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வர ஊக்குவித்தோம். அதற்கு ஊக்கத்தொகையாக கல்வி கட்டணத்தை இலவசமாக்க முடிவு செய்தோம்’’ என்கிறார், பர்மிதா சர்மா.

மஜின் 2013-ம் ஆண்டு நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். பின்னர் பல்வேறு கல்வி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அப்போது பர்மிதாவும் அதே துறையில் ஈடுபட்டிருக்கிறார். இருவரும் இணைந்து கல்விசார்ந்த சமூக பணிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டிருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு இந்த பள்ளிக்கூடத்தை தொடங்கியவர்கள் 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தாம்பத்திய வாழ்க்கையிலும் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

‘‘குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் கல்வி சமூகரீதியாகவும், சுற்றுச்சூழல் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வருவது சவாலானதாக இருந்தது. அந்த பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கல் குவாரிகளில் பணியாற்றுபவர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு வேலைவாய்ப்புக்கு உகந்த பாடத்திட்டங்களை கொண்ட கல்வியை வடிவமைக்க வேண்டியிருந்தது. ஏனெனில் படிக்காமல் கல்குவாரிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் தினமும் அங்கு ரூ.150 முதல் ரூ.200 வரை சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கவனத்தை கல்வி மீது பதிக்க ஏற்கனவே கல்வி கற்றிருந்தவர்களை கொண்டு கல்வி போதிக்க ஏற்பாடு செய்தோம்.

பெரும்பாலான குடும்பங்கள் குளிர்காலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் நொறுக்கி தீப்பற்ற வைத்து குளிர் காய்ந்தார்கள். அதில் இருந்து வெளிப்படும் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் ஆரம்பத்தில் உணரவில்லை. ஆபத்தை உணர்ந்த பின்புதான் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்’’ என்றும் சொல்கிறார்.

தற்போது பிள்ளைகளுடன் சேர்ந்து பெற்றோரும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க தொடங்கி இருக்கிறார்கள். அவைகளை மறு சுழற்சி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரு வதற்கான பயிற்சி வழங்கவும் பர்மிதா - மஜின் தம்பதியர் திட்டமிட்டிருக்கிறார்கள்.