குடும்பத்தைக் கோவிலாக்குவோம்...!


குடும்பத்தைக் கோவிலாக்குவோம்...!
x
தினத்தந்தி 14 May 2019 3:30 AM GMT (Updated: 14 May 2019 3:30 AM GMT)

நாளை (மே 15-ந் தேதி ) உலக குடும்ப தினம்.

குடும்பம் என்பது அதிகாரம் தூள்பறக்கும் நிறுவனமல்ல. அன்பும், அருளும் தவழும் கோவில். குடும்பம் என்பது உருவங்கள் நடமாடும் இடம் அல்ல, உள்ளங்கள் உறவாடும் இடம். வீடு என்பது தங்குமிடமல்ல. இன்பம் பொங்குமிடம். எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு வகையான பெருமை உண்டு என்றால் இந்தியாவின் பெருமை இனிய குடும்பம்.

தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு தம்பதியிடம் ஒரு நிருபர் பேட்டி எடுத்தார். “இங்குள்ள கோவில்களையெல்லாம் பார்த்தீர்களா?” “பார்த்தோம். அதிசயமாக இருந்தது. அதைவிட அதிசயம் இங்குள்ள குடும்பங்களெல்லாம் கோவிலாக இருப்பது” இதுதான் நமக்குப் பெருமை. அந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். கால ஓட்டத்தில் நிலைமை மாறி வருவதாகச் சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் உடைந்த வீடுகள் உடையாத உள்ளங்கள். இப்போது உடையாத வீடுகள் ஆனால் உடைந்த உள்ளங்கள். இல்லறத்தில் மகிழ்ச்சி எப்போது வரும்? புடவை, பட்டுக் கொடுத்தால் வருமா? நகை நட்டு கொடுத்தால் வருமா? பணக்கட்டு கொடுத்தால் வருமா? சீர்வரிசை தட்டு கொடுத்தால் வருமா? அப்போதெல்லாம் விட ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் வரும். விட்டுக் கொடுப்பதென்பது வீழ்ச்சியல்ல விதைப்பது. உலகின் மிக உன்னதமானது கணவன் மனைவி உறவு. முன்பின் அறிமுகம் இல்லாத, ரத்த உறவாகப் பிறந்திடாத இரண்டு பேருக்கு இடையே அறிமுகம் முளைத்து, அது நட்பாக வளர்ந்து, இனிய அன்பாகப் பிரவாகம் எடுத்து, இரண்டு உடல்களில் ஓர் உயிர் இருப்பது போல நெருக்கமாகி, ஆயுள் முழுவதும் இணைந்திருக்கும் இனிய பந்தம். அது அழகாக இருக்க சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

கணவனுக்கும், மனைவிக்கும் நடக்கும் விவாதங்களில் ஜெயிப்பதற்கு ஆர்வம் காட்டாதீர்கள். யார் ஜெயித்தாலும், தோற்றவர் வாழ்க்கைத் துணைதானே. ஒருவர் தோல்வியின் விரக்தியில் இருக்கும்போது, மற்றவர் வெற்றியைக் கொண்டாட முடியுமா? விட்டுக்கொடுங்கள். அன்பை வெளிப்படுத்தவும், ஆறுதல் சொல்லவும் அவ்வப்போது அரவணைப்பையும் அன்பான வார்த்தைகளையும் பயன்படுத்துங்கள். நெடுநாள் இனிமையாக உறவு நீடிக்க இந்த “மந்திரச் செயல்” அவசியம்.

பணம்தான் பல குடும்பங்களில் உறவை உடைக்கும் கருவியாக இருக்கிறது. வருமானம், கடன், செலவுகள், வீடு வாங்குவது போன்ற உங்கள் பொருளாதார இலக்குகள் என எதையும் வாழ்க்கைத்துணையிடம் மறைக்காதீர்கள். வாழ்க்கையில் யாராவது ஒருவரிடமாவது ஒளிவு மறைவின்றி உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அது உங்களது வாழ்க்கைத்துணையாக இருக்கட்டும். எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப் பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள். ஆகவே, நிறைய அன்பைக் கொடுங்கள். வாழ்க்கைத்துணை கச்சிதமான நபரான, எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்பவராக, நூறு சதவீதம் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்பவராக இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். பலங்களும், பலவீனங்களும் இணைந்தவர்களே ஒவ்வொருவரும். நீங்களும் அப்படித்தானே. வாழ்க்கைத் துணையிடம் மட்டும் நூறு சதவீத கச்சிதத்தை எதிர்பார்ப்பது நியாயமா?

யாரோடும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒப்பிட்டால் அந்த நிமிடத்தில் இருந்து நிம்மதியைத் தொலைத்துவிடுவீர்கள். ஒவ்வொரு தனிநபரும் தனிப்பட்ட குணங்களின், திறமைகளின், விருப்பங்களின் கலவை. அந்தத் தனித் திறமையைக் கண்டறிந்து, அதை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல சிந்தனைகளில் மூழ்காதீர்கள். “டைனிங் டேபிளில்” அமர்ந்து சாப்பிட்டபடி அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலையை மனதில் நினைத்துக்கொண்டு, உதட்டளவில் வாழ்க்கைத் துணையிடம் பேசாதீர்கள். நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் அக்கறை குறைவதை, வேறு யாரையும்விட வாழ்க்கைத் துணையால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

வாழ்க்கைத்துணையின் உறவினரோ, நண்பரோ, உங்களை ஏமாற்றி இருக்கலாம்; ஏதாவது நஷ்டத்துக்கு ஆளாக்கி இருக்கலாம். அதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கைத்துணையை விமர்சிக்காதீர்கள். யாரோ செய்த தவறுக்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும்? உங்கள் உடன்பிறந்தவர்களே கூட உங்களைப் போல இருக்க முடியாது என்கிறபோது, யாரோ ஒருவர் எப்படி உங்களின் வாழ்க்கைத் துணைபோல அக்கறையாக இருப்பார்?

வாழ்க்கைத்துணை மீது கோபமோ, வருத்தமோ ஏற்படும்போது என்ன செய்யலாம்? எதுவுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லவழி. கோபத்தில் திட்டுவதோ, போனில் கத்துவதோ பிரச்சினைகளைத் தீர்க்காது. அவசரத்தில் உதிர்க்கும் வார்த்தைகள், இன்னொரு புது பிரச்சினையை உருவாக்கிவிடும். உணர்ச்சிவசப்பட்டு மனதால் முடிவு எடுக்காதீர்கள்; நிதானமாக யோசித்து அறிவால் முடிவெடுங்கள். இன்றைய கோபத்தை இன்றே மறந்துவிடுங்கள். அதை சுமந்துகொண்டு படுக்கைக்குப் போகாதீர்கள். மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். கோபத்தில் வரும் யோசனைகள், பலூன் மாதிரி பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கிவிடும். அன்பு எனும் ஊசியால் அதை உடைத்துவிடுங்கள். கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் பிரச்சினையை பெரிதாக்காமல் தீர்க்கும் போக்கில் அமைய வேண்டும். சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?

ஒருவர், தன் மகள் திருமணத்துக்காக ஒரு ஜோசியரைப் பார்த்து, இரண்டு ஜாதகங்களைக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார். இரண்டும் பெண்களின் ஜாதகமாயிருந்தால் அதிர்ச்சியடைந்த ஜோசியர் காரணம் கேட்டார். “ஒன்று என் மகள் ஜாதகம், இன்னொன்று அவளுக்கு மாமியாராக வரப்போறவங்க ஜாதகம். இரண்டும், பொருந்தி வருதா பாருங்க”. இந்த நிலைமை ஏன்? தன்னுடைய மகள் கட்டிக்கொடுத்த இடத்தில் கண்கலங்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிற தாய், தன்னை நம்பி வந்திருக்கும் ஒரு பெண்ணை கண்கலங்காமல் காப்பாற்ற வேண்டாமா? தன் அம்மாவை நேசிக்கும் ஒரு பெண், தனது மாமியாரும் தாய்மாதிரித்தான் என்று எண்ணத் தொடங்கினால் குடும்பம் கோவிலாகி விடும். மாமியாரின் அனுபவத்தை மருமகளும், படித்த மருமகளின் அறிவாற்றலை மாமியாரும் மதிக்கத் தொடங்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.

நமது குடும்பத்தின் வலிமையே கூட்டுக்குடும்பம்தான். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா அடடா? எத்தனை உறவுமுறைகள். தாய்மாமன் உறவு என்பது தனித்துவமானது. தாத்தா சரித்திரம் சொல்ல, பாட்டி கதைகள் சொல்ல, அத்தையும், மாமாவும் அரவணைக்க அந்த வளர்ப்பின் அனுபவமே அற்புதமானது. நட்ட நடுநிசியில் தொட்டில் குழந்தை, நிதானத்துக்கு அதிகமாக அழுது துடித்தால் எந்த டாக்டரிடம் கொண்டு செல்வது? இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம்.

இப்போது அவசர உலகத்தில் இந்த கூட்டுக்குடும்ப தத்துவம் தகர்ந்து கொண்டிருக்கிறது. தனிக்குடித்தனம் என்ற சுயநலத் தேவை அதிகரித்துவிட்டது. வேலை நிமித்தம் தவிர்க்க முடியாத சூழ்நிலை தவிர, மற்ற காலகட்டத்தில் ஒன்றாக வாழ்வதே நல்லது. அப்போதும் இல்லறங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் நெருங்கியிருந்தால் உறவுகள் மேம்படும். “வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம். அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்” என்ற நிலையும் உள்ளது. ஒரு பெரியவர் சொன்னார்: எனக்கு ஐந்து சன்ஸ் உண்டு. ஆனால் நான் பெற்றெடுக்காத இன்னொரு சன்தான் என்னைக் காப்பாற்றுகிறான். அவன்தான் பென்சன்.

பெரியவர்கள் வீட்டில் இருந்தால் பெருமை என்று கருதுவோம். அவர்களை வழிபடுவதே சிறந்த ஆன்மிகம் என்ற நிலை வந்தால் குடும்பம் கோவிலாகிவிடும். குடும்ப தினத்தில் அதைப்பற்றி அதிகம் யோசிப்போம்.

- முனைவர் இளசை சுந்தரம்,
வானொலி நிலைய முன்னாள் இயக்குனர், மதுரை.


Next Story