கசப்பான இனிப்பு: ‘கார்பைடு’ மாம்பழம்...!


கசப்பான இனிப்பு: ‘கார்பைடு’ மாம்பழம்...!
x
தினத்தந்தி 17 May 2019 1:44 AM GMT (Updated: 17 May 2019 1:44 AM GMT)

முக்கனிகளில் முதல் பழமான மாம்பழம் வேதங்களில் தேவர்கள் உண்ணும் பழமாக கூறப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முகலாய மன்னர்களின் முக்கிய மன்னரான அக்பரின் அவை குறிப்புகளில் அக்பர் காலத்தில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்பட்ட முறைகள், தரங்கள், ரகங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு சிவன் முக்தி கொடுக்க காரணமாகியது மாம்பழம்.

மாங்கனி இந்தியாவில் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தியா வந்த சீனப்பயணி யுவான் சுவாங் மாம்பழத்தை ஆசிய நாடுகளுக்கு எடுத்துச்சென்று பரப்பினார். இத்தகைய மாம்பழம் தமிழ்நாட்டில் 1 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது. சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் என்ற பழமொழிக்கு ஏற்ப சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் ருசி மிக்கவை. மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும் அதிகமாக உள்ளது. மரத்தில் இருந்து தானாக பழுக்கும் மாம்பழத்துக்கு இந்த மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் தற்போது வியாபாரிகள் வியாபார நோக்கத்தில் செயற்கை முறையில் கார்பைடு கற்களைக்கொண்டு மாம்பழம், சப்போட்டா, அன்னாசி மற்றும் பப்பாளி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, தக்காளி போன்றவைகள் முதிர்ச்சி அடைந்தவுடன் அறுவடை செய்யப்பட்டு விளை நிலங்களில் இருந்து எடுத்துவரும் வழிகளிலும் சேமித்து வைக்கும் இடங்களிலும் பழுக்கின்றன. நெடுந்தூரம் சந்தைக்கு எடுத்து வருவதால் பழங்கள் சிதைந்துபோகின்றன. ஆகவே, இம்மாதிரியான பழங்களை பழுக்க வைக்க செயற்கை முறை கையாளப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறை வணிகர்களுக்கு எத்திலின் வாயுவைக் கொண்டு செயற்கை முறையில் பழங்களை பழுக்கவைப்பதற்கு தரமான செயல்பாட்டு செயல்முறையை வழங்கியுள்ளது. வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு பெற்ற பின் தான் உணவு வணிகம் செய்ய வேண்டும். முற்றிலும் முதிர்ந்த பழங்களையே அறுவடை செய்ய வேண்டும். இயற்கை வழியிலேயே பழங்களை பழுக்க வைக்க வேண்டும். மசாலா என்ற பெயர்கொண்ட கால்சியம் கார்பைடு கற்களைக்கொண்டு பழங்களை பழுக்க வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

எத்திலின் வாயுவை பயன்படுத்தி மட்டுமே காலநிலை சார்ந்த பழங்களை பழுக்க வைக்க முடியும். எத்திலின் வாயுவை உற்பத்தி செய்ய எத்திலின் சிலிண்டரையோ எத்தோபார்ம் சேசட்களையோ பயன்படுத்தலாம். எத்தோபார்ம் திரவத்தையோ, எத்தோபார்ம் சேசட்களையோ பழங்களோடு நேரடி தொடர்பில் வைப்பது குற்றமாகும்.

தடை செய்யப்பட்ட மசாலாக்(கால்சியம் கார்பைடு கல்)களையோ, எத்திலின் திரவத்தையோ பழங்களில் நேரடி தொடர்பில் பயன்படுத்தினாலோ உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவுகள் 50, 59, 57 மற்றும் 55-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கார்பைடு கல் என்பது கியாஸ் வெல்டிங் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம் ஆகும். அதில் ஆர்சனிக்-பாஸ்பரஸ் ஹைட்ரைடு படிமங்கள் இருக்கும். கார்பைடு மூலம் பழுக்க வைக்கும் பழங்களை உட்கொண்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், விழுங்குவதில் சிரமம் ஏற்படும். இருமல், தொண்டை மற்றும் தோலில் புண் ஏற்படும். மேலும் நரம்பு மண்டலத்தை பாதிப்பு அடைய செய்து தலை வலி, தலை சுற்றல், ஞாபக மறதி குறைதல் மற்றும் நுரையீரல் செரிமான உறுப்புகள் பாதிப்படையும். நாளடைவில் புற்றுநோயை உண்டாக்கும்.

பொதுமக்கள் பெரும்பாலும் முதிர்ந்த காயாகவே வாங்கி தாங்களாகவே இயற்கை முறையில் பழங்களை பழுக்கவைத்து உட்கொள்ளவேண்டும். வைக்கோல்களுக்கு இடையிலோ, காற்று புகாத அரிசி டப்பாக்களிலோ வைத்து பழங்களை பழுக்க வைக்கலாம்.

பழ வியாபாரிகள் மற்றும் முறையாக பழங்களை பழுக்கவைக்கப்பட்டவர்களிடமிருந்து பழங்களை வாங்கி உபயோகிக்க வேண்டும். பழங்களை முழுமையாக கழுவியோ தோலினை முழுமையாக அகற்றியோ பயன்படுத்த வேண்டும்.

கார்பைடு கற்களை கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்கள் இயற்கையாக பழுத்த பழங்களின் எடையைவிட எடை குறைந்திருக்கும். சீரான மஞ்சள் வண்ணம் கொண்டதாக சற்று குறைந்த மணத்துடன் புளிப்பு தன்மை கூடியதாக இருக்கும். வெளிப்புறத்தில் பழுத்ததை போன்றும் உள்ளே காய்தன்மையுடனும் இருக்கும். கார்பைடு கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்கள் 2 அல்லது 3 நாட்களில் தோலின் நிறம் கருப்பாக மாறிவிடும்.

தற்போது மாம்பழ சீசன் நிலவுவதால் பொதுமக்கள் நல்ல பழங்களை ஆய்வுசெய்து வாங்கவேண்டும். கடந்த சிலநாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தணிக்கை ஆய்வு செய்ததில் கிட்டத்தட்ட 4½ டன் மாம்பழங்கள் தவறான முறையில் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.3.5 லட்சம் மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பழவியாபாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

- டாக்டர் ஏ.ராமகிருஷ்ணன், நியமன அலுவலர்,
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, சென்னை மாவட்டம்.


Next Story