சுவையான சுவாரசியங்கள்


சுவையான சுவாரசியங்கள்
x
தினத்தந்தி 17 May 2019 7:49 AM GMT (Updated: 17 May 2019 7:49 AM GMT)

சீனாவை பூர்வீகமாக கொண்ட நூடுல்ஸ் உணவுகள்

சீனாவை பூர்வீகமாக கொண்ட நூடுல்ஸ் உணவுகள், தற்போது அநேக நாடுகளின் பிடித்தமான உணவாக மாறிவிட்டன. இந்நிலையில்தான் ஜப்பானியர்கள் நூடுல்ஸ் உணவை கொண்டு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

மரூக்கா என்ற உணவு நிறுவனம் ஒன்று ‘யாகிசோபா நூடுல் பாக்ஸ்’ என்ற பெயரில் நூடுல்ஸ் உணவை பிரமாண்ட அளவில் தயாரித்திருக்கிறது. ஜப்பானின் ஜசசாக்கி பகுதியில் முயற்சிக்கப்பட்ட, இந்த சாதனை நிகழ்விற்காக, 352 பவுண்ட் எடையில் பிரமாண்ட நூடுல்ஸை உருவாக்கி, சமைத்திருக்கிறார்கள்.

ராட்சத நூடுல்ஸ் உணவாக தயாரிக்கப்பட்ட இந்த உணவை, 579 பேர் ருசித்துள்ளனர். நூடுல்ஸ் உணவு இந்தளவிற்கு பிரமாண்டமாக தயாரிக்கப்படுவதும், உணவை 579 பேர் சுவைபார்ப்பதும் இதுவே முதல்முறை என்பதால், இந்த நிகழ்வை கின்னஸ் சாதனையாக அங்கீகரித்துள்ளனர். சாதனை என்பதை தாண்டி, ஐசசாக்கி பகுதி மக்கள், இதை நூடுல்ஸ் திருவிழாவாகவே கொண்டாடியிருக்கிறார்கள்.

சாப்பாட்டு ராணி


ஜப்பானைச் சேர்ந்த யுகா கினோஷிடா சாப்பாட்டு ராணியாக வலம் வருகிறார். இவர் தன்னை தானே பல உணவு சவால்களில் உட்படுத்திக்கொண்டு, அதை வெற்றிகரமாக முடித்தும் காட்டுகிறார். அதாவது இன்று ஒரு நூடுல்ஸ் சாப்பிட்டால், நாளை இரண்டு சாப்பிட வேண்டும் என்பதை போல, பல உணவு சவால்களை தனக்கு தானே முறியடித்திருக்கிறார்.

100 பிரெட் துண்டுகளை ஒரே சமயத்தில் உட்கொண்டது, 30 நூடுல்ஸ்களை சுவை பார்த்தது, 7 கிரில்ட் சிக்கன்களை ஒரே சமயத்தில் ஏப்பம் விட்டது, 100 ஐஸ்கிரீம்களை ரசித்து ருசித்தது... என இவரது சவால் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

கண்ணில் பார்ப்பதை எல்லாம், தன்னுடைய உணவு சவால் பட்டியலில் சேர்க்கும் யுகா, அதை கண்ணும் கருத்துமாக முடித்து காட்டுவதுதான், வியப்பான வேடிக்கை. இவரது சேட்டைகளை பதிவு செய்வதற்காகவே பிரத்யேக யூ-டியூப் சேனல்கள் இயங்குகின்றன. அதில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் யுகாவை பின் தொடர்ந்தபடி, உணவு சவால்களை பார்த்து ரசிக்கிறார்களாம்.

பிரத்யேக பாதுகாப்பு படை

உலகிலேயே மிகச் சிறிய பெங்குவின்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள மிடில் தீவில் வசிக்கின்றன. இவை ஒரு அடி உயரமும், ஒரு கிலோ எடையும் கொண்டவை. ஓரிடத்தில் கூட்டமாக வசிக்கும் இயல்புடையவை. பெங்குவின்களை நரிகள் வேட்டையாடுவதால் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டன. 15 ஆண்டுகளுக்கு முன்பு 800 பெங்குவின்கள் இங்கே இருந்தன. 10 ஆண்டுகளுக்கு முன்பு 4 பெங்குவின்களே எஞ்சியிருந்தன. இவற்றைக் காப்பாற்றுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றும் பலனளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கோழிகள், ஆடுகளைக் காப்பாற்றுவதற்கு நாய்களைப் பயன்படுத்துவதுண்டு. 2006-ம் ஆண்டு நாய்களை அனுப்பி, பெங்குவின்களை காக்கும் முடிவுக்கு வந்தனர்.

நரிகள் வரும் வழிகளில் நாய்களை நிறுத்திவிடுவோம். நாய்களின் குரைப்புக்குப் பயந்துகொண்டே நரிகள் நெருங்கி வருவதில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை நாய்கள் பெங்குவின்களை காக்கும் பணியில் ஈடுபடுகின்றன. நாய்களின் வாசம் அங்கேயே இருப்பதால் சனி, ஞாயிறுகளிலும் நரிகள் எட்டிப் பார்ப்பதில்லை. 9 ஆண்டுகளில் நரிகளால் ஒரு பெங்குவினைக் கூட வேட்டையாட முடியவில்லை. இன்று பெங்குவின்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்திருக்கிறது. பெங்குவின்களை காப்பாற்றும் நாய்களின் கதை ‘ஆட்பால்’ என்ற பெயரில் ஹாலிவுட் திரைப்படமாக வெளி வந்திருக்கிறது.

முடி வெட்டினால், தன்னம்பிக்கை வளரும்

பென்சல்வேனியாவை சேர்ந்த ஜோனதன் எஸ்குயிடா, ‘குட்ஸ் டவுன்’ பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ‘தி சிட்டி கட்ஸ்’ என்ற பெயரில் இயங்கும் இந்த சலூனில், முடி திருத்தம் செய்ய சிறுவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் மற்ற சலூன்களில் கட்டணம் செலுத்தி முடிதிருத்தம் செய்ய வேண்டும் என்றால், ஜோனதனின் சலூனில் சிறுவர்கள் இலவசமாகவே முடிதிருத்தம் செய்து கொள்ளலாம். அதேசமயம் இலவசமாக முடிதிருத்தம் செய்து கொள்ளும் சிறுவர்களுக்கு, ஜோனதன் 3 டாலர்களை பரிசாகவும் கொடுக்கிறார்.

‘‘இலவசமாக முடி திருத்தம் செய்யும் எனக்காக ஒன்றை மட்டும் செய்யுங்கள். அதாவது முடிதிருத்த வேலைகளின் போது, நான் கொடுக்கும் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை மட்டும் சத்தமாக வாசித்து காண்பியுங்கள். உங்களுக்கு முடிதிருத்தமும் இலவசம். அதோடு 3 டாலர்கள் அன்பளிப்பும் உண்டு.

இக்காலத்து இளைஞர்கள் மேடை நிகழ்ச்சிகள், கல்லூரி செமினார் நிகழ்ச்சிகளில், பெரும் திரளான மக்கள் கூட்டத்திற்கு முன்பாக பேச கூச்சப்படுகிறார்கள். பயப்படுகிறார்கள். அவர்களுக்கு பொது இடங்களில் பேச கற்றுக்கொடுப்பதற்காகவே இத்தகைய சலுகையை வழங்கியிருக்கிறேன்’’ என்கிறார், ஜோனதன்.


Next Story