சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : சர்க்கரை நோயும், பெண்களும்...! + "||" + Sugar and females ...!

தினம் ஒரு தகவல் : சர்க்கரை நோயும், பெண்களும்...!

தினம் ஒரு தகவல் : சர்க்கரை நோயும், பெண்களும்...!
பெயரளவில் மட்டுமே இனிப்பைக்கொண்டது நீரிழிவு நோய். ஆனால் அது கொடுக்கிற இம்சைகள் அனைத்தும் கசப்பு.
தலை முதல் கால் வரை சகலத்தையும் பாதிக்கிற நீரிழிவு கருத்தரிப்பதையும் பாதிக்க வைத்து விடுகிறது. தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது என மாறிப்போன வாழ்க்கை முறையால் இப்போது இளம் வயதிலேயே நீரிழிவு நோய் தாக்குகிறது. நீரிழிவு நோய்க்கும் மலட்டுத் தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

குடும்ப பின்னணியில் நீரிழிவு இருந்தால் அந்த வழியில் வருவோருக்கும் அது பாதிக்க வாய்ப்புகள் அதிகம். அது தவிர நிறைய பெண்களுக்கு இப்போது பி.சி.ஓ.டி. என்னும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பு, மாதவிலக்கு சுழற்சி தள்ளிப்போவது என்று அடுக்கடுக்கான பிரச்சினைகளை சந்திப்பார்கள். இவர்களுக்கு தைராய்டு கோளாறும் வரலாம். தைராய்டு ஹார்மோன், சினைப்பைகளில் இருந்து சுரக்கிற எப்.எஸ்.எச். திரவம், நீரிழிவுக்கு காரணமான இன்சுலின், இதுவெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இந்த ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்ற இறக்கம் வரும்போது அதன் விளைவாக சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நீரிழிவு நோய் வரலாம். நீரிழிவு நோய் இருக்கிற பெண்கள் கருத்தரிப்பது கஷ்டம். அப்படியே கருத்தரித்தாலும் அது கலையவும் கரு சரியாக உருவாகாமல் போகவும் அபாயங்கள் அதிகம். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் வரும். பிரசவமானதும் அது தானாக போய்விடும். ஆனால் தாமதமாக கருத்தரிக்கிற, உடல் பருமன் அதிகமுள்ள, பி.சி.ஓ.டி. பிரச்சினை உள்ள பெண்களுக்கு கர்ப்ப காலம் முடிந்ததும் நீரிழிவுநோய் நிரந்தரமாக உடம்பில் தங்கலாம். கருத்தரிக்கும்போது அது தாயை மட்டுமல்ல குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும்.

முறையற்ற மாதவிலக்கு, உடம்பெல்லாம் முடி வளர்ச்சி, தாறுமாறாக எகிறும் உடற்பருமன் இதுவெல்லாம் இருக்கிற பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவே ஸ்கேன் மூலமாக பி.சி.ஓ.டி. பிரச்சினை இருக்கிறதா? என்று தெரிந்து கொள்வது நல்லது. எடைக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக இதையெல்லாம் சரி செய்தாலே நீரிழிவு நோய் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.