ஆச்சரியங்கள் ஆயிரம் கடலுக்குள் ஓர் இயற்கைப் பிரமிடு


ஆச்சரியங்கள் ஆயிரம் கடலுக்குள் ஓர் இயற்கைப் பிரமிடு
x
தினத்தந்தி 25 May 2019 10:07 AM GMT (Updated: 25 May 2019 10:07 AM GMT)

ஜப்பானின் தென்மேற்குக்கோடி தீவான ‘ரையுகியு’வின் யோனாகுனி கடற்கரையை ஒட்டி கடலுக்கடியில் ஓர் அதிசய இயற்கைப் பிரமிடு காணப்படுகிறது.

27 மீட்டர் ஆழத்தில் அமைந்திருக்கும் இந்த அமைப்பு, மணற்பாறையால் ஆனதாக உள்ளது. 150 மீட்டர் நீளம், 40 மீட்டர் அகலத்துடன், படிகளும், சமதள உச்சிப் பகுதியும், சுவர்களும் கொண்டதாக இது அமைந்திருக்கிறது.

இதன் அடித்தளத்தைச் சுற்றி மூன்று பகுதிகளில் தொங்கும் பாறை போன்ற அமைப்பு காணப்படுகிறது. ஒரு முக்கோணப் பள்ளத்தின் விளிம்புகளில் இரு பெரும் துளைகள் காணப்படுகின்றன. மனிதனின் முகம் போன்று காட்சியளிக்கும், 7 மீட்டர் உயரமுள்ள ஒரு பாறையும், இரண்டு பெரிய, நெருக்கமாக அமைந்த தூண்களும் உள்ளன.

இந்தப் புதிரான அமைப்பு, சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. கடைசிப் பனியுகத்தைச் சேர்ந்த இது, அக்காலத்தில் கடலுக்குள் அமிழ்ந்திருந் திருக்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த அமைப்பை ஓர் உள்ளூர் நீர்மூழ்கி வீரர் 1986-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அதுமுதல், இதுதொடர்பாக நிலவியல் நிபுணர்கள், கடல் தொல்லியல் நிபுணர்கள் இடையே ஒரு தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. அதாவது ஒரு சிலர், இது இயற்கையாக ஏற்பட்ட அமைப்பு என்றும், மற்றொரு தரப்பினர், இதன் நுணுக்கமான அமைப்புகளால், மனிதனின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

இப்பகுதியில் கிடைத்திருக்கும் சீரற்ற கற்கருவிகள் மாதிரியான பொருட்கள், பாறையில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியம் போன்றவை, இந்த அமைப்பு மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்ற வாதத்துக்கு வலுச் சேர்க்கின்றன.

அதேநேரம், இந்த அமைப்பு ஒரே பாறையில் அமைந்திருப்பதும், யோனாகுனி பகுதியில் அடிக்கடி ஏற்படும் நில அதிர்வுகள், அரிப்புகளும், இயற்கையாக இது உருவாகியிருக்கலாம் என்ற எண்ணத்துக்கு வித்திடுகின்றன.

இப்படி பலரும் பலவிதமாக விவாதித்து வந்தாலும், இந்த அமைப்பின் தோற்றம் குறித்து இன்னும் ஓர் இறுதி முடிவுக்கு வரவில்லை. சர்ச்சைகள் ஒருபுறம் தொடர்ந்துகொண்டிருக்க, கடலுக்குள் அமைதியாக அமர்ந்திருக்கிறது, யோனாகுனி அதிசயம்.


Next Story