சிறப்புக் கட்டுரைகள்

இரு பெண்கள் இணைந்த இனிய வாழ்க்கை + "||" + The happy life of two women combined

இரு பெண்கள் இணைந்த இனிய வாழ்க்கை

இரு பெண்கள் இணைந்த இனிய வாழ்க்கை
“எங்கள் மணவாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கன்னத்தோடு கன்னங்கள் உரசியபடி, கட்டி அணைத்தபடி ஜோடியாக சொல்கிறார்கள் இந்த இரண்டு பெண்களும்.
இவர்களது பெயர்கள் மேகலா, டெய்ட்டத். ‘எனது கையை பிடித்த இந்த நிமிடம் முதல் எனது வாழ்க்கையில் எல்லா சுகங்களிலும், துக்கங்களிலும் நீதான் என் துணை’ என்று உறுதிமொழி எடுத்து, நண்பர்கள் சூழ அமர்க்களமாக அரங்கேறியிருக்கிறது இவர்கள் திருமணம். பத்து வருடங்கள் காதலித்து, கரம் பற்றியிருக்கிறது, இந்த ஓரின கல்யாண ஜோடி.

மேகலா மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். டெய்ட்டத் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்தவர். மேகலா வெர்ஜினியாவில் உள்ள ‘விமன்ஸ் லிபரல் ஆர்ட்ஸ் காலேஜ்’க்கு கிரியேட்டிவ் ரைட்டிங் துறையில் கல்வி கற்பதற்காக சென்றார். அங்குதான் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். இலக்கியமும், எழுத்தும் இருவரையும் நெருங்கிய தோழிகளாக்கியிருக்கிறது. நட்போடு படிப்பையும் தொடர்ந்திருக்கிறார்கள். மேகலா, கனடா நாட்டு குடியுரிமையும் பெற்றவர்.

படிப்பு முடிந்ததும் இருவரும் பிரிந்தனர். மேகலா கனடா சென்றுவிட்டார். அங்கு போன பின்புதான் அவரை பிரிவுத்துயர் பெரிதும் வாட்டியிருக்கிறது. அவர் தனது ஏக்கங்களை வெளிப் படுத்த, ‘அதே நிலையில்தான் நானும் இருந்துகொண்டிருக் கிறேன்’ என்று டெய்ட்டத்தும் சொல்ல, அப்போதுதான் இரு வருமே தங்களுக்குள் காதல் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் உடலுக்குள் காதல் ஹார்மோன்கள் கலாட்டா செய்ததையும், இணைந்திருந்ததையும் இரு குடும்பத்தாரும் தெரிந்துகொண்டதும் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் நான்கு வருடங்கள் அவர்கள் சோகத்தையும், துயரத்தையும், தனிமையையும் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் இருவரும் எப்போதாவது ஒருமுறைதான் சந்தித் திருக்கிறார்கள். அப்படி சந்திக்கும் நாட்களில் ஏதாவது ஒரு பஸ்சில் ஏறி, அருகருகே அமர்ந்து இரவுபகல் பாராமல் பயணம் செய்திருக் கிறார்கள்.

எதிர்ப்புகள் அவர்கள் காதலை வலுவாக்கியிருக்கிறது. எதிர்ப்பு களுக்கு மத்தியில் அவர்கள் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல தீர்மானித்திருக்கிறார்கள். அப்போதுதான் தனது மனதிற்குள் எழுந்த மிக முக்கியமான கேள்வியை மேகலாவிடம், டெய்ட்டத் கேட்டிருக்கிறார். ‘எத்தனை பேர் எதிர்த்தாலும் நாம் ஒன்றிணைந்து வாழலாம். என்னுடைய துணையாக வாழ்க்கை முழுவதும் நீ இருக்க விரும்புகிறாயா?’ என்பதுதான் அந்த கேள்வி!

டெய்ட்டத் திருமண ஆசையை வெளிப்படுத்திய அந்த காலகட்டத்தில் மேகலா, புற்றுநோயோடும் ஒரு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அந்த நோய் அவரை அதிகமாகவே ஆக்கிரமித்திருந்தது. அதனால் அவரது ஆரோக்கியமும் சீர்குலைந்திருந்தது. மனதும், உடலும் தளர்ந்துபோயிருந்த மேகலாவுடன் உணர்வுரீதியாக டெய்ட்டத் ஒன்றுபட்டார். புற்றுநோய் என்ற வில்லனை சேர்ந்து நாம் வீழ்த்தலாம் என்றுகூறி, உற்சாகம் கொடுத்தார்.

சொன்னபடியே டெய்ட்டத் மேகலாவை அருகில் இருந்து கவனித்தார். அன்பு செலுத்தினார். படிப்படியாக அந்த நோயின் கொடுமையில் இருந்து மருந்துகளின் உதவியோடு வெளிக்கொண்டு வந்தார். அவர் செலுத்திய பாசம் மேகலாவின் பெற்றோரை நெகிழவைத்தது. சரி.. நீங்கள் விரும்பியபடியே திருமணம் செய்துகொள்ளுங்கள் என்றார்கள்.

அதற்குள் அவர்கள் காதல் தோன்றி பத்து வருடங்கள் கடந்துபோயிருந்தன. அந்த பத்தாவது ஆண்டு காதல் தினத்தில், முதலில் அவர்கள் காதலை எங்கு வெளிப்படுத்தினார்களோ அந்த இடத்தில், அவர்களது ஆசிரியர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள். ‘ஆணும், பெண்ணும் இணைவதுதான் மண வாழ்க்கை இல்லை. பெண்களாகிய நாங்கள் எங்களை இணைத்துக்கொண்டாலும் மணவாழ்க்கைதான்’ என்று சமூகத்திற்கு கூடுதலாக ஒரு உதாரணத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

இவர்களில் யார் கணவன், யார் மனைவி என்ற கேள்விக்கு இடமில்லை என்றாலும் ‘வாழ்க்கையில் நாங்கள் இருவரும் சமமானவர்கள். ஒருவருக்கு இன்னொருவர் வாழ்க்கைத்துணை’ என்று மட்டும் சொல்கிறார்கள். ‘உங்கள் காதலில் எந்த அளவுக்கு சத்தியம் இருக்கிறது?’ என்று கேட்டால், ‘சத்தியத்தின் அர்த்தம் எங்களுக்கு தெரியாது. காதலின் அர்த்தம்தான் எங்களுக்கு தெரியும்’ என்று காதல் உணர்வு பொங்க சொல்கிறார்கள்.

டெய்ட்டத்துக்கு பிடித்தது மேற்கத்திய உடைகள் என்றாலும், மேகலா விரும்பியதால் இந்திய கலாசார உடை உடுத்தி, இந்து சம்பிரதாயங்களின்படி முதலில் தங்கள் திருமணத்தை நடத்திக்கொண்டார்கள். ஆரஞ்சு நிற நவ்ரி புடவையில், மராட்டிய கலாசார பெண் அலங்காரத்தில் மேகலா திகழ, இளம் ஆரஞ்சு லெஹங்காவில் அட்டகாசமான அழகில் ஜொலித்தார், டெய்ட்டத். முதலில் இந்திய முறையில் ‘திருமணம்’ நடத்திவிட்டு, பின்பு உடைகளை மாற்றிக்கொண்டு மேற்கத்திய சாயலுக்கு மாறி மீண்டும் ஒரு திருமண சடங்கையும் நடத்திக்கொண்டார்கள்.

அப்புறம் என்னன்னு கேட்கிறீங்களா? அவங்க.. சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்காங்க.. அவ்வளவுதான்..!