வருமானவரியை மிச்சப்படுத்தும் முதலீடு


வருமானவரியை மிச்சப்படுத்தும் முதலீடு
x
தினத்தந்தி 5 Oct 2019 6:09 AM GMT (Updated: 5 Oct 2019 6:09 AM GMT)

பங்கு சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ். நிதியில் முதலீடு செய்தால் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். இந்த நிதியில் செய்யும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.1½ லட்சம் வரை வருமான வரி விலக்கு உண்டு. இந்த நிதியில் போட்ட முதலீட்டை மூன்று ஆண்டுகள் வெளியில் எடுக்க முடியாது.

மாதம் குறைந்தபட்சமாக 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். இந்த இ.எல்.எஸ்.எஸ். நிதித் திட்டத்தில் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் வருமானம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை சார்ந்திருக்கும். அந்த வகையில், முதலீட்டின் மீது கடின முடிவு எடுக்கக்கூடியவர்களுக்கு ஏற்றதாக இந்த நிதித்திட்டம் இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் இந்த ரிஸ்க் என்பது பரவலாக்கப்பட்டுவிடுகிறது.

இ.எல்.எஸ்.எஸ். செய்யப்பட்ட முதலீட்டை அதன் ‘லாக்இன் பிரீயட்’ மூன்றாண்டுகள் முடிந்ததும் பெரும்பாலோர் எடுத்து விடுகிறார்கள். அது தேவை இல்லை. பணத்தை எடுக்கும் போது முதலீடு எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதை அறிந்து எடுப்பது அவசியம்.

நீங்கள் எடுக்க நினைக்கும் போது, முதலீட்டு மீதான வருமானம் குறைவாக இருந்தால் சந்தை ஏறும் வரை காத்திருந்து எடுப்பது லாபகரமாக இருக்கும். இந்த திட்டத்தில் செய்த முதலீட்டை குறைந்தபட்சம் 5 முதல் 8 ஆண்டுகளுக்காவது தொடர்ந்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் எதுவென்றால், தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரக்கூடிய பெரிய மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் இ.எல்.எஸ்.எஸ். பண்டைத் தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள். 

நீங்கள் தேர்வு செய்திருக்கும் இ.எல்.எஸ்.எஸ். நிதி குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்கு மேல் செயல்பாட்டில் இருக்க வேண்டும். 

முதலீட்டுக்குத் தேர்வு செய்யும் பண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை குறைந்தது 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில், தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் நல்ல வருமானம் தந்திருக்க வேண்டும். 

முதலீட்டை இரண்டு அல்லது மூன்று இ.எல்.எஸ்.எஸ். பண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது. இதன்மூலம் முதலீடு மீதான ரிஸ்க் குறைய வாய்ப்பிருக்கிறது.

சந்தை இறங்கிய காலத்தில் நல்ல வருமானம் தருகிறது. அண்மை காலத்தில் சந்தை மிக அதிகமாக இறங்கியிருக்கும் நிலையிலும், இந்த பண்ட் மூலமான வருமானம் மூன்றாண்டு காலத்திலும் இரட்டை இலக்க வருமானத்தைத் தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story