சிறப்புக் கட்டுரைகள்

போலியோ இல்லாத புது யுகம் படைப்போம்! + "||" + Let us create a new era without polio!

போலியோ இல்லாத புது யுகம் படைப்போம்!

போலியோ இல்லாத புது யுகம் படைப்போம்!
நாளை (அக்டோபர் 24-ந் தேதி) உலக போலியோ தினம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டே இரண்டு சொட்டுக்கள் போலியோ சொட்டு மருந்து கிடைக்காததால், நாளொன்றுக்கு சராசரியாக 1000 பிஞ்சுக்குழந்தைகளை போலியோ எனும் இளம்பிள்ளை வாதநோய் வாழ்நாளெல்லாம் சப்பாணிகளாக வாழச்செய்த கொடுமை நிலவியது.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் அமெரிக்காவில் இளம்பிள்ளை வாதம் ஒரு முக்கிய சுகாதார பிரச்சினையாக இருந்து வந்தது. 1952-ம் ஆண்டில் 58 ஆயிரம் பேர் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.

போலியோ என்னும் இளம்பிள்ளை வாதநோய்க்கு முதன்முதலாக தடுப்பு ஊசி கண்டுபிடித்தவர் டாக்டர் யொனாசு சால்க் என்பவர் ஆவார். இவர் 28.11.1914-ல் நியூயார்க்கில் பிறந்தார். 1947-ம் ஆண்டில் சால்க் பிட்சுபர்க் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் பணியில் அமர்ந்தார். 1948-ல் போலியோ நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் இறங்கினார். இப்பணிக்காக தொடர்ந்து 7 ஆண்டுகள் அவர் செலவழித்தார். 18 லட்சத்திற்கும் அதிகமான பள்ளி சிறுவர்களை சோதித்து தடுப்பூசியை கண்டுபிடித்தார். 12.4.1955-ல் போலியோவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது வெற்றிகரமாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் டாக்டர் யொனாசு சால்க் ஒரு அதிசய மனிதர் என போற்றப்பட்டார்.

அவரை தொடர்ந்து டாக்டர் ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின் என்பவர் வாய்வழியாக சொட்டுமருந்து கொடுக்கும் முறையை கண்டுபிடித்தார். இன்று இதுதான் நடைமுறையில் உள்ளது. பொதுவாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டுமுறை இரண்டு சொட்டு மருந்து போடவேண்டும் என்பது தற்போது நடைமுறையாக உள்ளது. முதன்முதலாக டாக்டர் யொனாசு சால்க்கினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாலும், போலியோ தடுப்பூசி போடுவதனால் கடுமையான காய்ச்சல் வருவதாலும் அதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று கடுமையாக ஆராய்ச்சி செய்து ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின் வாய்வழியாக சொட்டுமருந்து போடப்படும் முறையை கண்டுபிடித்தார். இதனால் போலியோ சொட்டுமருந்து போடும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை. ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின் 26.8.1906-ம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்தார். இவர் போலந்தில் பிறந்து அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க நாட்டில் மருத்துவ படிப்பை படித்து போலியோ நோயை ஒழிப்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து இறுதியாக வாய்மூலம் போலியோ சொட்டுமருந்து இரண்டு சொட்டுகள் மட்டும் போடப்படும் முறையை கண்டுபிடித்தார்.

இளம்பிள்ளை வாதநோயை ஏற்படுத்தும் போலியோ வைரஸ் சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேட்டால்தான் உருவாகிறது. சுகாதாரமற்ற உணவு, குடிநீர் மூலம் வாய்வழியாக உடலுக்குள் செல்லும் போலியோ வைரஸ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு பாராமல் முடக்குகிறது. இந்த நோய் வராமல் இரண்டு சொட்டு தடுப்பு மருந்து குழந்தைகளைக் காப்பாற்றும். தற்போது இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு ரூ.150 செலவாகிறது. போலியோ நோய்க்கு சொட்டு மருந்தை டாக்டர் ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின் கண்டுபிடித்த போதிலும் ஆண்டுக்கு 3,50,000 குழந்தைகளை முடக்கிப்போட்ட இக்கொடிய நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றி போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க சர்வதேச ரோட்டரி 1985-ல் முடிவெடுத்து இதுவரை அதற்காக கடந்த 33 ஆண்டு களாக ரூ.10 ஆயிரம் கோடி செலவழித்துள்ளது.

ரோட்டரிக்கு இதுவரை ரூ.20 ஆயிரம்கோடி போலியோ ஒழிப்பிற்காக பில்கேட்ஸ் நன்கொடையாக அளித்துள்ளார். சர்வதேச ரோட்டரி முயற்சியால் 124 நாடுகளில் தற்போது போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது. 2012-ல் இந்தியாவை போலியோ முழுவதுமாக ஒழிக்கப்பட்ட நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. உலக வரலாற்றில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் என்ற கடுமையான நோய்க்கு டாக்டர் யொனாசு சால்க், டாக்டர் ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின் ஆகிய இருவரும் மருந்து கண்டுபிடிக்காவிட்டால் இன்றைக்கு உலகம் முழுவதும் இளம்பிள்ளை வாதத்தினால் கோடிக்கணக்கானோர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.

உலகளவில் போலியோ நோய் முழுவதுமாக இதுவரை ஒழிக்கப்பட்டதற்கு முழு முதற்காரணம் சர்வதேச ரோட்டரி அமைப்பும் பில்கேட்சும் மட்டுமே. இன்னும் ஒருசில ஆண்டுகளில் உலக அளவில் போலியோநோய்; முழுவதுமாக அறவே ஒழியக்கூடிய வாய்ப்பு உள்ளதால் நாம் விரைவில் போலியோ இல்லாத புது யுகம்; படைப்பது உறுதி.

- கோ.அன்பரசன், வழக்கறிஞர், போலியோ ஒழிப்பு குழு ரோட்டரி மாவட்ட முன்னாள் தலைவர்.