சிறப்புக் கட்டுரைகள்

பெண்களின் உடைக்கும் உணர்வுக்கும் தடை தேவையில்லை.. + "||" + For women's dressing and feeling No ban ..

பெண்களின் உடைக்கும் உணர்வுக்கும் தடை தேவையில்லை..

பெண்களின் உடைக்கும் உணர்வுக்கும் தடை தேவையில்லை..
பெண்கள் இப்போது எந்திரமயமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் இப்போது எந்திரமயமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீடு, அலுவலகம், சமூகம் ஆகிய மூன்று தளங்களில் அவர்கள் செயல்படவேண்டியதிருக்கிறது. குடும்பத்தலைவியாகவும், அலுவலகத்தில் பணியாளராகவும் செயல்பட்டால் மட்டும்போதாது. சமூக பொறுப்புகளை வகித்து அதற்கு தக்கபடியும் அவர்கள் வாழ வேண்டியதிருக்கிறது. அதற்கு அவர் களது அறிவு, ஆற்றல் மட்டுமல்ல உடைகளும் பொருத்தமாக அமைந்து ஒத்துழைக்கவேண்டிய திருக்கிறது.

பழைய காலத்தில் பெண்கள் பஸ் பிடித்து வேலைக்கு செல்லும் நிலை குறைவாகவே இருந்தது. பஸ்சில் ஏறி நின்று கம்பியை பிடித்துக்கொண்டே ஒரு மணி நேர பயணத்தை அவர்கள் மேற்கொள்ள வேண்டியதிருந்ததில்லை. மக்கள் கூட்டம் அந்த காலத்தில் குறைவு. யாரும் பஸ் பயணத்தில் முதுகில் சரிந்து நிற்கும் சூழ்நிலையும் இருந்ததில்லை. இன்றைய பெண்கள் தினமும் பயணத்தையும், அதனால் ஏற்படும் பிரச்சினை களையும் சந்திக்க வேண்டியதிருக்கிறது.

அதற்காக அவர்களுக்கு பாதுகாப்பான உடை அவசியமாகிறது. அது சவுகரியமானதாகவும் இருக்கவேண்டியதிருக்கிறது. ஏன்என்றால் பெண்கள் ஓடிப்போய் பஸ்சில் ஏறவேண்டியதிருக்கிறது. நின்று கொண்டு பயணம் செய்தாலும் யாராவது முதுகில் ஒட்டிக்கொள்ளாமல் உஷாராக கண் காணிக்கவேண்டும்.

இதற்கெல்லாம் தனக்கு சுடிதார்தான் பொருத்தமானது என்று பெண் சொன்னால், ‘அது அலுவலகத்திற்கு மட்டுந்தான். நீ வீட்டுக்கு வந்ததும் சமர்த்தாக புடவைக்கு மாறிக்கொள். அதுதான் நம்ம குடும்பத்திற்கு அழகு’ என்று மாமியார் சொல்கிறார். திருமணமான பெண்கள் இந்த உடை பிரச்சினையையும் எதிர்கொள்ளவேண்டிய திருக்கிறது.

அலுவலகத்திற்கு பலர் வருவார்கள்.. போவார்கள். அங்கு இங்கிதமாக உடை அணிந்துதான் ஆகவேண்டும். வீட்டுக்கு வந்த பின்பாவது நைட்டிக்கு மாறி கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கலாம் என்றால் மாமியார் கத்துவார். மேலே இரண்டு, கீழே இரண்டு என்று நான்கு இணைப்போடு புடவை கட்டிக்கொள் என்பார். இது என்ன வம்பு? என்ன உடையை வீட்டில் உடுத்துவது என்பதில்கூட எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று அலுத்து, மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் குடும்பத்தலைவிகள்.

பெண்ணை பூமாதேவி என்று கூறி பொறுமைகாக்கச் சொல்வார்கள். ஆனால் வாழ்க்கையில் பொறுப்புகள் அதிகரிக்கும் போது பிரச்சினைகளும் அதிகமாகிறது. இதனால் உள்ளத்தில் பொறுமை குறைந்து, போராட்டம் தொடங்கிவிடுகிறது.

பண்பாடு, கலாசாரம், குடும்ப பாரம்பரியம் என்ற மூன்று அம்புகள் பெண்களை நோக்கி அவ்வப்போது வீசப்படுகின்றன. பெரும்பாலும் அவை பெண்களின் இதயங்களை காயப்படுத்துகின்றன. ஆனால் அந்த அம்புகள் தங்களை நோக்கி வீசப்படாத அளவுக்கு பெண்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.

பண்பாடு தவறி குடும்ப பாரம்பரியத்தை சிதைத்து வாழும் எண்ணம் எந்தப் பெண்ணுக்கும் இல்லை. ஆனால் இன்றைய சூழல் அவர்களுக்கு ஒத்துப் போவதில்லை. அதனால் அவதிப்படும் பெண்கள் இந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்.

குடும்ப பாரம்பரியம் என்ற ஆயுதம் பெரும்பாலும் பெண்களின் ஆடையை குறிவைத்துதான் வீசப் படுகிறது. அந்த காலத்து பெண்கள் வெகுநீள புடவையை சுற்றிக்கட்டிக்கொண்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு ‘டூ வீலர்’ ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. யோகா, உடற் பயிற்சி என்று அவர்கள் ஜிம்முக்கு போகவேண்டியிருந்ததில்லை. இந்த காலத்து பெண்கள் அதை எல்லாம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அதற்கேற்ற உடைக்கு அவர்கள் மாறித்தானே ஆகவேண்டும்.

சுடிதாரில் அலுவலகம் போய்விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து, புடவை கட்டிக் கொண்டு மூத்தோர் முன்பு சிரித்து, நடந்து பாரம்பரியத்தை பறைசாற்று வதற்குள் பெண்கள் அலுத்துப்போக வேண்டியதிருக்கிறது. அதோடில்லாமல் அடிக்கடி பயன்படுத்தாத காரணத்தால் புடவைக்கு தேவையாக உள்ளாடைகள், ஜாக்கெட் போன்றவை கடைசி நேரத்தில் காலைவாரிவிடுவதால் புடவை கட்டமுடியாமல் தவிக்கும் பெண்களுக்கு சுற்றியிருப்பவர்களின் திட்டு, முகச்சுளிப்புகள் பெரும்பாலும் கிடைக்கிறது.

இந்த மாதிரியான கடைப்பிடிக்க நெருக்கடியான சில பாரம்பரியங்கள் இன்றைய பெண்களை சோர்வுக்கு உள்ளாக்கிவிடுகிறது. வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பது பெண்களுக்கு பலம் தான். ஆனால் அந்த பலம் அவர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்க உதவுவதில்லை. பாரம்பரியத்தை கடைப்பிடிக்க நினைத்தாலும் அது அவர்களுக்கு வசப்படுவதில்லை. கணவர் சாப்பிடுவதற்கு முன்பு மனைவி சாப்பிடுவது பாரம்பரியம் அல்ல என்ற பேச்சு உண்டு. ஆனால் வேலைக்குச் சென்று உழைத்துவிட்டு அடித்துப் பிடித்து பசியோடு வீட்டுக்கு வரும் பெண்களால் அந்த பாரம்பரியத்தை கடைப்பிடிக்க முடிவதில்லையே!

சோர்வை போக்க அவள் அலுவலகம் முடிந்து வந்த உடன் சாப்பிட்டு விட்டால், சிலர் வீட்டிற்குள்ளே முணுமுணுப்பார்கள். தன் பசிக்கு தன் வீட்டில் உணவருந்த முடியாத நிலை ஏற்படும்போது அவள் மன அழுத்தம் மலை உச்சிக்கு உயர்ந்து விடுகிறது.

‘மற்றவர்களின் கருத்து தவறாக இருந்தாலும் அதை எதிர்த்து பேசுவது பெண்ணுக்கு ஏற்ற பாரம்பரியம் இல்லை’ என்றும், ‘கணவருக்கு முன்பே பெண் தூங்கச் செல்வது பாரம்பரியம் அல்ல’ என்றும், ‘வீட்டிற்கு வந்த விருந்தினர்களை வேலை வாங்குவது நமது பாரம்பரியம் அல்ல’ என்றும், இன்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

‘மாமியாரை வேலை செய்யவிட்டு விட்டு மரு மகள் ஓய்வெடுத்துக் கொள்வது சரி அல்ல’ என்பது ஒரு பழங்கருத்து. மருமகள் இரவு ஷிப்ட் வேலைபார்த்து இரவு முழுவதும் கண்விழித்து உழைத்துவிட்டு வந்தால், அவள் ஓய்வெடுத்தால்தானே மறுநாள் வேலைக்குப்போக முடியும். இதையும் விமர்சித்தால் அவள் எரிச்சல் எல்லைதான் மீறும்.

இது எல்லாவற்றையும் விட பெரிய டென்ஷனை ஏற்படுத்துவது பெண் சம்பாதிக்கும் பணம். திரு மணத்திற்கு பின்பு அவளுடைய சம்பாத்தியத்திற்கு மாமியார் வீட்டவர்கள் தான் அதிபதி. அதிலிருந்து கொஞ்சம் காசு கூட அவள் பிறந்த வீட்டிற்கு போய்விடக் கூடாது. அப்படி கொஞ்சம் பணம் போய்விட்டால் அதையும் பாரம்பரியத்தின் இழுக்காக சொல்வார்கள். அதை பெருந்தவறாக விமர்சிப்பார்கள்.

இந்த விமர்சனங்களுக்கு இன்றைய பெண் களால் கட்டுப்பட முடிவதில்லை. தன்னைப் பெற்று வளர்த்து வேலைவாங்கிக் கொடுத்து, திருமணமும் செய்து வைத்தவர்களுக்கு இல்லாத உரிமை புதிதாக வந்த இவர்களுக்கு எப்படி வந்தது என்று பெண்கள் நினைக்கிறார்கள். அதற்கு தக்கபடி செயல்பட விரும்புகிறார்கள். அப்படி செயல்படும்போது ‘படித்தவள். சம்பாதிக்கிறோம் என்ற திமிரில் இப்படி பேசுகிறாள்’ என்ற கூடுதல் விமர்சனம் எழுகிறது.

பெண்களுக்கு எதிரான இத்தைகய விமர்சனங்கள் தவிர்க்கப்படவேண்டும். அவர்களது உடை களுக்கும், உணர்வுகளுக்கும் சுதந்திரம் வீடுகளில் வழங்கப்படவேண்டும்.