சிறப்புக் கட்டுரைகள்

அந்தரங்க பேச்சுக்கு எல்லை இல்லாவிட்டால் ஆபத்து + "||" + For private talk Risk if there is no border

அந்தரங்க பேச்சுக்கு எல்லை இல்லாவிட்டால் ஆபத்து

அந்தரங்க பேச்சுக்கு எல்லை இல்லாவிட்டால் ஆபத்து
கணவர் மற்றும் அம்மாவிடம் பகிர்ந்துகொள்ள முடியாத விஷயங்களைக்கூட தோழிகளிடம் சொல்வது பெண் களின் வழக்கம்.
ணவர் மற்றும் அம்மாவிடம் பகிர்ந்துகொள்ள முடியாத விஷயங்களைக்கூட தோழிகளிடம் சொல்வது பெண் களின் வழக்கம். ஆனால் பாலியல்ரீதியான விஷயங்களை தோழிகளிடம் அதிகம் பகிர்வதாலும் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படுகின்றன. பெண்களின் அந்தரங்க விஷயங்களை அறிந்து கொள்ள தூண்டில்போடும் தோழிகள் எல்லோரை சுற்றிலும் இருந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண்பதும், அவர்களிடம் எல்லையோடு தகவல்தொடர்பு வைத்துக் கொள்வதும் பெண்களின் வாழ்க்கையை பாதுகாக்கும்.

பெண்கள், குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் அந்தரங்க வாழ்க்கை சார்ந்த தகவல்களை நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். கனிவாகப் பேசும் நம்பிக்கைக்குரிய தோழியாக இருந்தாலும், அவரிடம் ரகசியமாக பேசும் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறாரா என்பதையும் அறிந்து கொள்வது நல்லது.

சாதாரண விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, மூன்றாவதாக ஒரு நபர் அந்த விஷயம் பற்றி உங்களிடம் விவரம் கேட்ட நிகழ்வுகள் நடந்துள்ளதா? என்று யோசித்துப் பாருங்கள். சாதாரண விஷயங்களை வேடிக்கையாகவோ அல்லது பிரச்சினை இல்லாத விஷயம் என்று கருதியோ மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தால், உங்கள் அந்தரங்கம் சார்ந்த விஷயங்களையும் அவர் ஏதோ ஒரு வகையில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடும். எனவே நம்பிக்கையின் அளவை பரிசோதனை செய்துபார்த்துவிட்டு அந்தரங்க தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

தங்கள் இல்லற வாழ்க்கை பற்றி கூறி பேச்சை ஆரம்பிக்கும் தோழிகள் ஒரு ரகம். “இந்த ஆண்களே இப்படித்தான்” என்று பொதுவாக பேசி, அடுத்ததாக உங்கள் படுக்கை அறை விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்பும் உறவுகள் இன்னொரு ரகம்.

நீங்கள் படுக்கை அறையில் எப்படி ஆரம்பிப்பீர்கள்? அவராக பேச்சை எடுப்பாரா? திருப்தியாக வைத்திருக்கிறாரா? வித்தியாசமான ஆசை களுக்கு ஒத்துழைக்கிறாரா? என்று ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற பாணியில் பேச்சு கொடுத்து உங்கள் அந்தரங்கங்களை அவிழ்த்துவிட தூண்டுவார்கள். இப்படி அடுத்தவர்களின் படுக்கைஅறைக்குள் மூக்கை நுழைக்கும் பெண் களிடம் கவனமாக இருங்கள். அந்த பெண்கள் இதை ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காக கையாளுவார்கள். இப்படிப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர்களுக்கு ஒரு ‘நெட்ஒர்க்’ இருக்கும். உங்களுக்கு அவர்களை பார்த்தால் ஆபத்தானவர்களாக தெரியாது. அவர்களும் பெரும்பாலும் ஆபத்தானவர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால் பின்விளைவுகளை அறியாமல் உங்கள் அந்தரங்கங்களை அடுத்தவர்களிடம் பேசி அலசிக்கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள் யார் என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் இல்லாமல் இருக்கும். அதனால் எல்லோரிடமும் கவனமாக இருங்கள். உங்கள் அந்தரங்கத்திற்குள் நுழையப்பார்க்கும் பெண் களிடம் முகம் கொடுத்து பேசாமல், அதை சொல்வதில் உங்களுக்கு ஆர்வமே இல்லாததுபோல் நடந்துகொள்ளுங்கள். அதை மீறியும் அதுபற்றி பேசினால், பேச்சை திசைதிருப்புங்கள். அதற்கு மேலும் முயற்சி செய்தால், ‘அது எனது தனிப்பட்ட விஷயம்..’ என்றோ, ‘நமக்குள் அது பற்றி பேசிக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை’ என்றோ கறாராக மறுத்துவிடுங்கள்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர்கள் அதுபோல பேசத் தொடங்கினால் நீங்கள் கோபப்படுவதை வெளிப்படையாகவே காட்டுங்கள். இனி இதுபோல் தொடர்ந்தால் நம் நட்பு, உறவு நீடிக்காது என்பதை வெளிப் படையாகச் சொல்லிவிடுங்கள். அப்படி தோண்டித் துருவும் பெண்களின் நோக்கமே தவறாக இருப்பதால், அவருடனான தொடர்பை நீங்கள் துண்டித்துக்கொள்வதும் நல்லதுதான்.

சகோதரியோ, நெருங்கிய உறவுப் பெண்ணோ, தோழியோ யாராக இருந்தாலும் அந்தரங்க வாழ்க்கை பற்றிய ரகசியங்களை அளவோடுதான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான எல்லை வரையறையை உங்களுக்குள் வகுத்துக் கொள்ள வேண்டும். அது திருமணத்திற்கு முன் பிருந்தே உங்களிடம் இருந்தால் மிகவும் நல்லது.

“எப்போதுமே எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்வது வலுவான உறவுக்கு வழி வகுக்கும்” என்ற குருட்டு நம்பிக்கையை கைவிடுங்கள். கணவரிடம்கூட அந்தரங்கம் சார்ந்த எல்லாவற்றையும் சொல்ல முடியாதபோது, மற்றவர்களிடம் அதை ஏன் சொல்லவேண்டும். சில ரகசியங்களால்தான் உங்களுக்கு பாதுகாப்பும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்றால், அந்த ரகசியத்தை காக்கவேண்டிய பொறுப்பை நீங்கள் அலட்சியம் செய்யக்கூடாது.

ஒருவேளை பாலியல் சார்ந்த வாழ்க்கைக்கு உங்களுக்கு சில ஆலோசனைகள் தேவைப்படலாம். அதனை நீங்கள் விஞ்ஞானபூர்வமாகப் பெற செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்களை அணுகுங்கள். உடல்ரீதியான, மனோரீதியான பிரச்சினைகள் அனைத்திற்கும் அவர்கள் தீர்வு தருவார்கள். இப்போது வெளிப்படையாக அவர்களை சந்தித்து ஆலோசனை பெறும் அளவுக்கு அனைவரும் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். அதனால் இதில் தயக்கம் தேவையில்லை.

உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. திருப்திகரமாக அமையாவிட்டாலும், கணவர் அறியாமையில் இருந்தாலும், குறையுடன் இருந்தாலும் அதைப்பற்றி தோழிகளிடமும், மற்ற உறவுகளிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை.

இல்லற உறவு என்பது கணவன்-மனைவி இருவருக்குமானது மட்டுமே. மகிழ்ச்சியோ, திருப்தியோ, குறையோ உங்கள் இருவருக்குமானது மட்டுமே. அதில் மற்றவர்களுக்கு உரிமை என்பது நீங்கள் அனு மதிக்கும் அளவுக்கு மட்டுமே. அந்த எல்லையை நீங்கள்தான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

தோழிகள் என்றில்லை, கணவரிடமும் எச்சரிக்கை வேண்டும். கணவர், அவரது நண்பர்களிடம் உங்கள் அந்தரங்க வாழ்க்கை பற்றி கருத்து பகிர்ந்து கொள்கிறார் என்பது பற்றி நீங்கள் அறிந்தாலும், அதுபற்றி எச்சரிக்கை செய்யுங்கள். என் நண்பன் அந்த விஷயத்திற்கு இப்படி முயற்சிக்கச் சொன்னான் என்பதுபோல கணவர் எப்போதாவது பேசினால் எச்சரிக்கை அடையுங்கள். அப்போது உங்கள் கணவரிடம், “உங்களுக்கு உண்மையாக இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்வதற்காக, நான் சில ரகசியங்களை உங்களிடம் மனந்திறந்து சொன்னேன். அது நமக்குள் இருந்தால் மட்டுமே ரகசியமாக இருக்கும். உங்கள் நண்பரிடம் அதை சொல்லும்போது பொதுவான விஷயம் போல் ஆகிவிடும். அவர் தெரிந்தோ தெரியாமலோ யாரிடமாவது சொல்லிவிட்டால், நமது ரகசியம் சந்திக்கு வந்துவிடும். அதனால் நாம் இருவருக்கும் அவமானம் ஏற்படும். அதோடு நமக்குள் இருக்கும் நம்பிக்கையும் சிதைந்துவிடும்” என்று வெளிப்படையாக கூறிவிடுங்கள்.

கணவரிடம், தனது பழைய அந்தரங்கங்களை சொல்வது பல பெண்களின் வாழ்க்கையில் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் ரகசியங்களை பெண்கள் தங்கள் மனதோடு புதைத்துக்கொள் வதுதான் நல்லது. எல்லா பெண்களுக்குள்ளும் ரகசியங்கள் இருக்கின்றன. அதை புதைத்துவிட்டு நல்லமுறையில் வாழத் தெரிந்த பெண்களே புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.