சிறப்புக் கட்டுரைகள்

சீன அதிபரை கவர்ந்த தமிழகத்து மலர் மாலை + "||" + Impressed with Chinese President Flower garland in Tamil Nadu

சீன அதிபரை கவர்ந்த தமிழகத்து மலர் மாலை

சீன அதிபரை கவர்ந்த தமிழகத்து மலர் மாலை
`நமது பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் என் அருகிலே சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தார்கள்.
`நமது பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் என் அருகிலே சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் நான் கோர்த்துவைத்திருந்த மாணிக்க மாலையை ரசித்து பார்த்தார்கள். அப்போது பிரதமர் மோடி நமது பூக்களின் பெருமையையும், பூ அலங்காரத்தில் நமது நாட்டிற்கு இருக்கும் சிறப்பையும் விலாவாரியாக சீன அதிபருக்கு விளக்கினார். அவரும் ஆச்சரியத்தோடு அதை கேட்டுக்கொண்டிருந்தார். அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது’ என்று மெய் சிலிர்க்க கூறுகிறார், வனிதாஸ்ரீ.

இவர் குமரி மாவட்டத்தில் பூக்களுக்கு பெயர்பெற்ற தோவாளை கிருஷ்ணன்புதூர் கிராமத்தில் வசித்து வருகிறார். ஐந்தாவது தலைமுறையாக பூ கட்டும் தொழிலை செய்துகொண்டிருக்கும் இவர் பி.டெக்., எம்.பி.ஏ. படித்திருக்கிறார்.

‘நான் நிறைய படித்திருந்தாலும் பூக்களோடு எங்களுக்கு இருக்கும் பூர்வீக பெருமையை கட்டிக்காப்பதையே விரும்பு கிறேன். இரு நாட்டு தலைவர்களை நான் அருகிலே சந்தித்ததற்கும், எனக்கு இத்தனை பெருமை கிடைத்ததற்கும் இந்த பூக்களும், எனது மூதாதையர்களின் சிறப்புகளுமே காரணம். மாணிக்கமாலை என்ற பூ கட்டுவதில் எங்களுடைய குடும்பம் கைதேர்ந்தது. இந்த கைத்திறன் கலையில், நான் சிறந்து விளங்கியதால்தான் தமிழ்நாடு பூம்புகார் கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகத்தினர் என்னை இதற்காக தேர்ந் தெடுத்தனர். மாணிக்கமாலையை அலங்கரிப்பதில் என்னை போன்று எனது 2 சகோதரிகளும் மிகுந்த தேர்ச்சிபெற்றவர்கள். அதில் ஒருவர் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்’ என்றார், வனிதாஸ்ரீ.

‘இரு நாட்டு தலைவர்களும் உங்கள் அருகில் நின்று பேசுவதற்கு மாணிக்கமாலைதான் காரணம் என்றீர்கள். அந்த மாலையின் சிறப்பு என்ன?’ என்றபோது,

‘மாணிக்க கற்களை போன்று மின்னுவதால் அந்த பூக்களுக்கு மாணிக்கமாலை என்று பெயர். திருவிதாங்கூர் மகாராஜா, தோவாளைக்கு வந்தபோது இந்த பூக்களின் வடிவமைப்பை பார்த்து வியந்துள்ளார். மாணிக்க கற்களை போன்று ஜொலிக்கிறதே என்று அவர் கூறியதால், அந்த பெயரே காலங்காலமாக நிலைத்துவிட்டது. அரளி, ரோஜாப்பூ, நொச்சி இலையை கைதேர்ந்த கலையால் மாலையாக வடிவமைப்போம். அது தான் மாணிக்கமாலையாகிறது. அரளியில் வெள்ளை, சிவப்பு மலர்களும், ரோஜாவில் வெள்ளை, சிவப்பு மலர்களும் அதில் இடம் பெற்றிருக்கும். அவை வசீகரிக்கும் அழகுடன் திகழும். முத்துக்களை பதித்த நகை அலங்காரம்போல் காட்சி தரும். இயற்கை பூக்களாலே இதனை உருவாக்குவதால் மன்னர்களும் இந்த மாலையை விரும்பினார்கள். தற்போது அம்மன் அலங்காரம், சப்பர அலங்காரத்தில் மாணிக்கமாலை முக்கிய இடம் வகிக்கிறது.

மற்ற மாலைகளை உருவாக்குவதைவிட, மாணிக்க மாலையை கோர்ப்பது சிரமம். மனதை ஒருநிலைப்படுத்தி நுட்பமாக இதனை தயார்செய்யவேண்டும். கலைநுட்பமான வேலை. ஒரு மாலையை உருவாக்க பல மணி நேரம் ஆகும். அதனால் மாணிக்க மாலை தயார்செய்வது கைவினை கலையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மாணிக்கமாலையில் கைதேர்ந்து விளங்கிய எனது தாத்தா மாடசாமி பண்டாரம், முந்தைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனிடமிருந்து தேசிய விருது பெற்றார். எனது தந்தை முத்தம்பெருமாளும், தாயார் தமிழரசியும் இந்த கலையில் மிகுந்த தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள். இருவருமே ஏராளமான விருதுகளும் பெற்றிருக்கிறார்கள்’ என்றார்.

வனிதாஸ்ரீக்கு தாரணி (வயது 13), முத்தம்பெருமாள் (11) ஆகிய இரண்டு பிள்ளைகள். இருவரும் இப்போதே மாணிக்கமாலை உருவாக்கும் கலையில் ஆர்வமாக ஈடுபட்டுவருகிறார்கள். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் உற்சவருக்கு தினமும் மாணிக்கமாலை தயாரித்து இவரது குடும்பத்தினர் அனுப்பிவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘இருபெரும் தலைவர்களையும் சந்திப்பதற்கு முன்பு, பின்னணியில் என்னவெல்லாம் நடந்தது?’ என்று வனிதாஸ்ரீயிடம் கேட்டபோது..

‘பூ கட்டும் கலை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க போகிறீர்கள், என்று முதலில் பூம்புகார் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அன்றிலிருந்தே பல நாட்கள் நான் மகிழ்ச்சிக் கனவில் மிதந்தேன். பிரதமர் என் அருகில் வந்து, இந்த பூ கட்டும் கலையை பற்றி கேட்டால் அவருக்கு எப்படி எல்லாம் விளக்கவேண்டும் என்று நான் மனதளவில் தயாரானேன். அப்போது லேசான பதற்றம் ஏற்படத்தான் செய்தது. மேலும் எங்கள் வீட்டுக்கு போலீசார் வந்து தகவல்களை சேகரித்தார்கள். ஆதார் அட்டை உள்பட ஆவணங்களையும் சரிபார்த்தனர். அப்போதுதான் இருநாட்டு தலைவர்களையும் சந்திக்க இருப்பது தெரிந்தது. அக்கம்பக்கத்தினரும் அதை தெரிந்துகொண்டு என்னை பாராட்டினார்கள்.

இரு நாட்டு தலைவர்களையும் கோவளத்தில் சந்திப்பதற்கு முன்பு சென்னையில் ஒத்திகை நடத்தப்பட்டது. நானும் இதர கைவினைக் கலைஞர்களான ஆறு பேரும் அதில் இடம்பெற்றோம். பின்புதான் அபூர்வ சந்திப்பு நிகழ்ந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் பார்வையிட்டார். தொடர்ந்து பிரதமரும், சீன அதிபரும் வர போகிறார்கள் என்ற தகவல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சோதனை என அந்த பகுதி கறுப்பு ‘கோட்’ அணிந்த படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இருவரும் வந்தார்கள். அவர்கள் கடைசியாகத்தான் பூ கட்டுவதை பார்ப்பார்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர்.

பிரதமர் வருவதற்கு முன்பே நான் மாலைகளை கட்டி அலங்காரம் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்த மாலைகளை எல்லாம் கட்டும்படி சொன்னார்கள். கல்யாண மாலை, சம்பங்கி மாலை, ஏலக்காய் மாலை, ரோஜாப்பூமாலை மற்றும் ரோஜாப்பூவில் உருவாக்கிய மாணிக்கமாலை போன்றவைகளை தயார்செய்து வைத்திருந்தேன். எனது அருகில் இதர ஆறு கலைஞர்களும் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த பரபரப்புக்கு இடையே பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இருவரும் உள்ளே வந்தனர். கடைசியாகத்தானே பூ கட்டும் என் அருகில் வருவார்கள் என்று நினைத் திருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது பிரதமர், சீன அதிபரை பூ கட்டும் இடத்துக்கு முதலிலே அழைத்து வந்தார். நான் அந்த ஒரு நிமிடம் மெய்மறந்து போனேன்.

சுதாரித்து கொண்டு படபடவென பூ கட்டும் வேலையை தொடங்கினேன். அப்போது பிரதமர் மோடி, சீன அதிபருக்கு நமது பூக்களின் பெருமையை பற்றி விளக்கினார். ‘பூக்கள் எங்கள் நாட்டு கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்தது. பூக்கள் இல்லாமல் நாங்கள் எந்த விசேஷத்தையும் தொடங்குவது இல்லை’ என்று இந்தியில் சொன்னார். அது எனக்கும் புரிந்தது. பதிலுக்கு சீன அதிபர், ‘எங்கள் நாட்டிலும் பூக்களுக்கு மவுசு அதிகம்’ என்று சொன்னார்.

மோடியின் குரல் கம்பீரமாக இருந்தது. அவர் சாந்தமாக பேசினாலும் அவருடைய குரலில் வலிமை இருக்கும். அந்த குரல் என்னை ஈர்த்தது. சீன அதிபரும் உற்சாகமாக பேசியதால், அவரையும் மோடியின் குரல் ஈர்த்திருக்கும்’ என்று அந்த இனிமையான நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

வனிதாஸ்ரீ சில மாதங்களுக்கு முன்பு, தான் கற்ற கல்விக்கு ஏற்ற வேலையில் சேர்ந்துள்ளார். தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிகிறார். மாலை நேரங்களில் மாணிக்கமாலை தயார் செய்கிறார்.

‘இந்த கலையில் எங்களுக்கு வருமானம் குறைவு என்றாலும், மனநிறைவு அதிகம் கிடைக்கிறது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை எனது மகள் சந்தித்தது எங்கள் கலைக்குடும்பத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகும். தையல் கலை போன்று மாணிக்கமாலை தயாரிக்க பயிற்சி வழங்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். இது மிகசிறந்த கலை. இது நாடுகடந்தும் வளரவேண்டும்’ என்று வனிதாஸ்ரீயின் தந்தை முத்தம்பெருமாள் கூறினார்.முகேஷ் அம்பானி வீட்டில்..

இந்திய கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி மகன் திருமணத்திலும் மாணிக்கமாலை இடம்பெற்றிருக்கிறது. மணவிழாவின்போது தனது பிரமாண்டமான பூஜை அறை முழுவதையும் மாணிக்கமாலையால் அலங்கரிக்க முகேஷ் அம்பானி ஆசைப்பட்டிருக்கிறார். கோவையை சேர்ந்த ஒருவர் மூலம் அந்த வாய்ப்பு முத்தம்பெருமாள் குடும்பத்தினருக்கு கிடைத்திருக்கிறது. இதற்காக முத்தம்பெருமாளும், அவருடைய மனைவி தமிழரசியும் 4 நாட்கள் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டிலேயே தங்கி இருந்து, மாணிக்க மாலைகளை உருவாக்கி பூஜை அறையை அலங்கரித்துள்ளனர்.