சிறப்புக் கட்டுரைகள்

ஆரோக்கியம் தரும் அதிசய தோட்டம் + "||" + Wonderful garden of health

ஆரோக்கியம் தரும் அதிசய தோட்டம்

ஆரோக்கியம் தரும் அதிசய தோட்டம்
தாவரங்கள் மனிதனுக்கு சுவாசிக்க சுத்தமான காற்றையும், காய்கறி, பழங்கள், தானியங்கள் ஆகிய உணவு பொருட் களையும் தருகின்றன.
அதோடு மட்டுமின்றி அவை நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. இத்தகைய செடி, கொடி, மரங்களை மூலிகை என்றழைக்கிறோம். நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் தாவரங்களில் 40 சதவீதம் மூலிகைகள் என்பது குறிப் பிடத்தக்கது.

அத்தகைய இயற்கை தாவரங்களில் உள்ள மருத்துவ குணங்களை கண்டறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்தி நோய் களுக்கு தீர்வுகண்டனர், பழந்தமிழர்கள்.

சித்தர்கள் அதிக அளவு மூலிகை வைத்தியங்களை மேற்கொண்டதால் அது சித்த வைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சித்த மருத்துவ கல்லூரிகளை அரசு தொடங்கி சித்த மருத்துவத்தை கற்றுக் கொடுத்து வருகிறது.

இதில் புதிய முயற்சியில் ஈடுபட்டிருக் கிறார், சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு. இவர் மூலிகை மருத்துவம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மருத்துவ குணமிக்க மூலிகைகளை பொதுமக்களுக்கு அடையாளங்காட்டும் பணியிலும், எந்த மூலிகை எப்படி மருந்தாகிறது என்பதை விளக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் இளநிலை சித்த மருத்துவ படிப்பை நிறைவு செய்த இவர், அகஸ்திய முனிவர் வாழ்ந்த பொதிகை மலை அடிவாரத்தில் தனது வைத்தியசாலையை நிறுவி உள்ளார். உலக தமிழ் மருத்துவ கழகம் என்பதையும் உருவாக்கியுள்ளார். இவரது சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு மூலிகைகளை பற்றி நேரடி களப்பயிற்சி அளிக்கிறார். அதற்காக இவர் பாபநாசம் மலை அடிவாரப்பகுதியில் மூலிகைப் பண்ணை தோட்டமும், நாற்றங்காலும் அமைத்துள்ளார். அங்கு 200 வகையான நாற்றுகளையும், 700 வகையான மூலிகைகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந்தேதி அகஸ்தியருக்கு தங்களது திருமண காட்சி கொடுப்பதற்காக சிவனும்-பார்வதியும் பாபநாசத்துக்கு வருவதாக ஐதீகம். இங்குள்ள தெப்பக்குளத்தில் அவர்கள் வலம்வரும் நிகழ்ச்சி நடக்கும். புராண சிறப்பு வாய்ந்த அந்த தெப்பக்குளம் மாசு அடைந்திருந்தது. அதனை இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் சுத்தம் செய்து, சுற்றிலும் ஆயிரக்கணக்கான மூலிகை செடி, மரங்களை நட்டு பராமரித்து வருகிறார் மைக்கேல் செயராசு. மேலும் இங்குள்ள சுவாமி-அம்பாள் அமரும் மண்டபத்தை சுற்றி, கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் வளரக் கூடிய மரக்கன்றுகளை நடவு செய்து மரங் களாக வளர்த்தெடுத்திருக்கிறார். இவர் மூலிகை முற்றம் என்ற செயல்திட்டத்தை உருவாக்கி, வீடுகள் தோறும் மூலிகை வளர்க்கவும் ஆலோசனை வழங்கிவரு கிறார்.

இவரது செயல்பாடுகளால் பாபநாசம் அடிவாரப்பகுதி மூலிகை பண்ணைகளாகவும், சுகாதாரமான படித்துறைகளாகவும் மாற்றம் கண்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிய போது நிலவேம்பு குடிநீரை தெருத்தெருவாக சென்று அங்கேயே காய்ச்சி மக்களுக்கு வழங்கினார்கள். அதிலும் இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

மூலிகைகளை அடையாளங் காணுதல் மற்றும் பலன்களை அறியும் பயற்சி பற்றி சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு கூறியதாவது:

‘‘நோய் வராத அளவுக்கு நமது உடல் நலத்தைப்பேண நமக்கு தெரிந்திருக்கவேண்டும். நோய் வந்துவிட்டால் எப்படி குணப்படுத்துவது என்பதையும் நாம் அறிந்திருக்கவேண்டும். காலையில் இஞ்சியும், மதியம் சுக்கும், மாலையில் கடுக்காயும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். தற்போது நாம் இயற்கையான சாப்பாடு முறையையும், இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையையும் மறந்து விட்டோம். அதனால்தான் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறோம். அனைத்து வகையான காய்ச்சலையும் குணமாக்கும் சக்தி நிலவேம்பு குடிநீருக்கு இருக்கிறது.

மக்கள் நாட்டு மருந்து கடைக்கு சென்று நிலவேம்பு குடிநீரில் சேர்க்கக்கூடிய 9 மூலிகைகளையும் வாங்கி சம அளவு எடுத்து பொடியாக்கி, அவற்றை நீரில் கொதிக்கவைத்து இளஞ்சூட்டில் பருகினால் போதும். தமிழ் மருந்துகளை சற்று குறைவாகவோ, சற்று கூடுதலாகவோ பயன்படுத்திவிட்டாலும் எந்த பிரச்சினையும் ஏற்படாது.

மூலிகை மருந்துகளை மக்கள் பயன்படுத்தவேண்டும் என்றால், அவற்றின் மீது மக்களுக்கு இருக்கும் பயம் அகலவேண்டும். அந்த பணியை தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். மூலிகை செடிகள் என்பது நமது வீட்டை சுற்றியும், வயல்வெளி களிலும் சாதாரணமாக வளர்ந்து கிடக்கிறது. அதனை அடையாளங்கண்டு, பாதுகாத்து எல்லோரும் பயன்படுத்தவேண்டும். மக்கள் மூலிகைகளை அடையாளங்கண்டு கொண்டால் மட்டும் போதாது. அதில் இருந்து தைலம், சூரணம், மணப்பாகு, லேகியம் போன்றவைகளை எப்படி தயாரிக்க வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதையும் தெரிந்து வைத் திருக்க வேண்டும்.

எங்களிடம் களப் பயிற்சிக்கு வருகிறவர்களுக்கு பொதிகை மலை பகுதியில் உள்ள மூலிகை செடிகளை நேரடியாக அடையாளங்காட்டி 2 நாட்கள் பயிற்சி அளித்து வருகிறோம். எல்லா வீடுகளிலும் மூலிகைத் தோட்டங்கள் அமைக்கவேண்டும். மக்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம். கிராமங்களில் மளிகை கடை இருப்பது போல் நாட்டு மருந்து கடைகளும் செயல்பட வேண்டும் என்பதும், அந்த அளவுக்கு மக்கள் நாட்டு மருந்துகளை பயன்படுத்தும் நிலை உருவாகவேண்டும் என்பதும் எங்கள் விருப்பமாகும்’’ என்றார்.

நட்சத்திர தாவரங்கள்
‘‘ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தனியான தாவரங்களை பழந்தமிழர்கள் அடையாளங்கண்டு, வகைப்படுத்தியிருக்கிறார்கள். அவைகள் பாபநாசத்தில் உள்ள பரிகார படித்துறை கரையில் நடவு செய்யப்பட்டு உள்ளது. இந்த மரங்கள் வளர்ந்தால் பொதுமக்களின் நம்பிக்கைப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களுக்கு உரிய மரத்தை தேர்வு செய்து சுற்றிவரவும், அனைத்து மரங்களையும் சுற்றி வந்து தாமிரபரணி ஆற்றில் நீராடி தங்களது பரிகாரங்களை நிறைவு செய்யவும் முடியும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றங் கரையை சுத்தப்படுத்தி வேலி அமைத்து 150-க்கும் மேற்பட்ட மர வகைகளை நட்டு, 5 பூங்கா தொகுதிகளாக பராமரித்து வருகிறோம். இதில் பொதிகை மலையில் மட்டுமே காணப்படும் 82 வகையான மரங்களை ஒரு தொகுதியில் நடவு செய்து அதற்கு பொதிகை தோட்டம் என்றும் பெயரிட்டு உள்ளோம். இந்த 4 தொகுதிகளில் மரக்கன்றுகள் பெரிய அளவில் வளர்ந்த பிறகு சுற்றுலா பயணிகள் அமர்ந்து ரசிக்கும் வகையில் பூங்காவாக மாற்றவும் திட்டமிடப்பட்டு உள்ளது’’ என்கிறார், மருத்துவர் மைக்கேல் செயராசு.

கொடம்புளி
கொடம்புளி எனப்படும் பழம்புளியைதான் நாம் பண்டைய காலத்தில் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். தற்போது நாம் பயன்படுத்துவது அரேபிய நாட்டு புளி ஆகும். முஸ்லிம் சமூகத்தினரின் வருகைக்கு பின்னரே இந்த வகை புளிய மரங்களை நட்டு புளியை சேகரித்து பயன் படுத்தத் தொடங்கி உள்ளோம்.

இதற்கு பதில் கொடம்புளியை உணவில் சேர்த்துக் கொண்டால் கூடுதல் ஆரோக்கியத்துடன் திகழலாம். இந்த வகை புளிய மரங்கள் பொதிகை மலையில் ஒருசில இடங்களில் காணப்படுகிறது. இதனையும் வளர்த்து பயன்படுத்தலாம். இது விரைவாக காய்த்து பலன்கொடுக்கும் தன்மைகொண்டது.

வீட்டிற்கு முக்கியமான மூலிகைகள்
வீடுகள் அனைத்திலும் முக்கியமான 12 மூலிகைகள் இடம்பெறவேண்டும். அவை வீட்டு மருத்துவர் போல் செயல்படும். அந்த மூலிகைகளின் பெயர்கள்: ஆடாதொடை, ஓமவல்லி, முடக்கறுத்தான், சோற்றுக் கற்றாழை, நிலவேம்பு, நொச்சி, மஞ்சள் கரிசாலை, வல்லாரை, துளசி, கண்டங்கத்தரி, மருதோன்றி மற்றும் தூதுவளை.

கருப்பை நோய் தீர்க்கும் அசோக மரம்
‘‘நெட்டிலிங்க மரத்தை தவறாக நாம் அசோக மரம் என்று கூறுகிறோம். உண்மையான அசோக மரம் பாபநாசம் மலையில் உள்ளது. பெண்களின் கருப்பை நோய்களுக்கு இந்த மரத்தின் பட்டையை உரித்து பயன்படுத்தலாம். கேரளா அரசு அசோக மரத்தை அதிக அளவு வளர்க்க முயற்சி செய்துள்ளது.

வீழி கொடி மரம் திருச்செந்தூர் வள்ளி குகைக்கு செல்லும் பகுதியில் காணப்படும். இந்த மரத்தில் குழந்தை பேறு வேண்டி தொட்டில் கட்டுகின்றனர். இதன் இலையை அரைத்து மாதவிடாய் நாட்களில் குடித்து விரதம் மேற்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும். இந்த இலையை அரைத்து சாறு எடுத்தால் அது ரத்தம் போல் உறைந்து விடும். சிவகாசி, வெம்பகோட்டை, ஓடப்பட்டி பகுதிகளில் வீழி அல்லது விழுதி என்ற பெயரில் இவை காணப்படுகிறது. இது பாதுகாக்கப்பட வேண்டிய தாவரம்’’ என்கிறார், மருத்துவர் மைக்கேல் செயராசு.

ஆசிரியரின் தேர்வுகள்...