‘நீட்’ தேர்வும், விரல்ரேகை மகத்துவமும்


‘நீட்’ தேர்வும், விரல்ரேகை மகத்துவமும்
x
தினத்தந்தி 13 Nov 2019 5:19 AM GMT (Updated: 13 Nov 2019 5:19 AM GMT)

மருத்துவ படிப்பின் சேர்க்கையின் போதும் மற்றும் அனைத்து தேர்வுகளிலும் விண்ணப்பப் படிவம் பெறும்போது மாணவர்களின் விரல் ரேகையை எடுத்து பதிவு செய்தால், நூறு சதவீதம் ஆள் மாறாட்டத்தையும், குற்றம் நடப்பதையும் தடுக்கலாம்.

சமீப காலமாக நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக சென்னை மண்டலத்திலிருந்து 2 புகார்களும், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஒரு புகார் சி.பி.ஐ.க்கு வந்துள்ளதாகவும், இந்த புகார்களை மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. வக்கீல் நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.

சி.பி.சி.ஐ.டி சார்பில் ஆஜரான வக்கீல், பலமருத்துவக் கல்லூரிகளில் 16 மாணவர்களின் விரல் ரேகை பெறப்படவில்லை என்றும் மேலும், தேசிய தேர்வு முகமையிடம் இருந்து பெறப்பட்ட 7 ஆயிரம் மருத்துவ மாணவர்களின் விரல்ரேகையை ஒப்பிட்டு பார்க்க சுமார் 90 நாட்கள் ஆகும் என்றார்.

நீதிபதிகள் 90 நாட்கள் கால அவகாசம் வழங்க முடியாது. இரண்டு வார காலத்திற்குள் விரல் ரேகையை ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது போதுமான அவகாசம்தான். மேலும் நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்தை தடுக்க அடுத்த ஆண்டு முதல் மாணவர்களின் சேர்க்கையின்போது மாணவர்களின் விரல் ரேகையை பெறுவது குறித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.

நீதிபதிகளின் இந்த உத்தரவு வரலாற்று சிறப்பு மிக்கது. இது விரல்ரேகை விஞ்ஞானத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். மேலும் இது போன்று விரல் ரேகை எல்லா தேர்வுகளிலும், இந்தியா முழுவதும் எடுத்து ஒப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்தால் நூறு சதவீதம் தவறு நடக்க வாய்ப்பு கிடையாது. குற்றம் செய்தவர்கள் தப்பிக்கவும் முடியாது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு “நீட்“ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. உதித் சூர்யா என்ற மாணவர் “நீட்“ தேர்வு எழுதாமல், மும்பையில் மற்றொருவரை எழுத வைத்து, அவரை நல்ல மதிப்பெண் பெற வைத்து, அதன் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

முகமது இர்பான் என்ற மாணவர் 207 மதிப்பெண்கள் பெற்று அதை 407 என திருத்தி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார் என தெரியவந்தது. பிரவீண், ராகுல் டேவிஸ் ஆகிய மாணவர்கள் தங்களுக்கு பதிலாக மற்றவர்களை வட மாநிலங்களில் “நீட்” தேர்வு எழுத வைத்து அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

நீட் தேர்வு மற்றும் அனைத்து தேர்வுகளிலும் மாணவர்களிடம் விரல்ரேகை நிபுணர் மூலம் அதற்குரிய விரல்ரேகை படிவத்தில் விரல்ரேகை எடுக்க வேண்டும். இதற்கு தலைமை பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற விரல்ரேகை அதிகாரிகளை நியமிக்கலாம். இதற்கு சாதாரண உபகரணங்கள் போதுமானது. அரசாங்கத்திற்கு செலவு கிடையாது. கணினி தேவையற்றது.

100 சதவீதம் உண்மைத்தன்மை உள்ளது. ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. கண் கருவிழி பதிவு உபகரணம் விலை உயர்ந்தது. தேவையற்றது. தேர்வு அறையில் தேர்வு எழுதத் தொடங்கும்போதும், தேர்வு எழுதி முடித்துவிட்ட பின்னரும் என இருமுறை மாணவ மாணவிகளின் விரல்ரேகை பதிவு மட்டும் பெறப்பட வேண்டும். இந்தப்பணியில் ஓய்வுபெற்ற திறமை வாய்ந்த, அதிக ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய விரல்ரேகை அதிகாரிகளை நியமிப்பது சிறப்பானதாகும். 1. தடய அறிவியல் துறை இயக்குனர், 2. விரல்ரேகை இயக்குனர் என்கிற காவல் கண்காணிப்பாளர் (விரல்ரேகை) இரண்டும் வேறுபட்ட அலுவலகங்கள். இதற்கு டிஜிட்டல் ஆவணங்கள் தேவையில்லை. ஆனால் மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் இருக்கலாம். அது நூறு சதவீதம் நம்பகத்தன்மை இல்லாதது.

நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்ரேட்டு விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவர் இந்த வழக்கில் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்த்த நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உண்மைத்தன்மை கண்டறியப்பட்டதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் நீதிபதிகள் என். கிருபாகரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் கூறியிருப்பது முக்கியமானதாகும். நீட் தேர்வின் போது பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெருவிரல் ரேகை பதிவுகளை, கல்லூரியில் தற்போது சேர்ந்துள்ள 4250 பேரின் பெருவிரல் ரேகையுடன் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். அதே நேரம் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்களின் பெருவிரல் ரேகை இல்லை. எனவே தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு மாநில தேர்வு குழுவும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் நேரடியாக சென்று அந்த மாணவர்களின் பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இதை வீடியோ படம் பிடிக்க வேண்டும்.

மேலும் விரல்ரேகை பதிவுகளை ஆராயும் நிபுணர்களை, மாநில தடய அறிவியல் இயக்குனர்தான் நியமிக்க வேண்டும். எனவே இந்த இயக்குனரையும், வழக்கில் எதிர் மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெருவிரல்ரேகை பதிவை பயோமெட்ரிக் முறையில் பெறப்பட்டதா? அல்லது மை மூலம் பதிவு செய்யப்பட்டதா? என்ற விவரங்களை தேசிய முகமை தெரிவிக்க வேண்டுமென்று நீதிபதிகள் கூறியிருந்தனர். எதிர்காலத்தில் நீட் தேர்வு மற்றும் எல்லா தேர்வுகளும் நியாயமாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் எந்தவித தவறும் மோசடியும் நடைபெறா வண்ணம் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அகில இந்திய அளவில் நெட்வொர்க் அமைத்து இந்த முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் கை மாறியுள்ளது. பணம் கொடுத்த மாணவனுக்கு அதிகம் மார்க் எடுத்த மாணவனின் மார்க்கை கம்ப்யூட்டர் மூலம் திருத்தியிருக்கிறார்கள். கம்ப்யூட்டர்களும் நம்பகத்தன்மை இல்லாதவையே.

ஆதலால்தான் நேரடியாக திறமையான ஓய்வுபெற்ற விரல்ரேகை உயர் அதிகாரிகளை நியமித்து அவர்கள் திறமைகளை நீதிமன்றமும், அரசாங்கமும் பயன்படுத்திக்கொண்டு விரல்ரேகை விஞ்ஞானத்தையும் உயர்த்திப்பிடித்து உண்மை, நேர்மை, சத்தியம் என்னும் மூவர்ண கொடியை பறக்கவிடலாம்.

தமிழ்நாட்டில் விரல்ரேகை விஞ்ஞானத்தை சட்டமாக இயற்றி, மருத்துவமனை, தொழிற்சாலை, பயணம் செய்யும் போது மற்றும் காவல்துறை, நீதித்துறை மற்றும் ஏ.டி.எம்., பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வங்கிகள், பத்திரப்பதிவு அலுவலகம், ஆதார் அட்டை போன்ற அனைத்து அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியா உலகத்தின் உயர்ந்த நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் நிற்கும்.

மனிதனின் கையெழுத்துக்கள் மாறுபடும். புகைப்படங்கள் மாறுபடும். ஆனால் விரல்ரேகை விஞ்ஞானம் சத்தியமானது, உண்மையானது, மாற்ற முடியாதது, நிரந்தரமானது.

- சா. கிருஷ்ணமூர்த்தி, காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு), விரல் ரேகை நிபுணர், சென்னை.

Next Story