சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் : கடனை சமாளித்து சேமிக்கும் வழிகள்...! + "||" + Day One Information: Dealing with Debt Ways to Save

தினம் ஒரு தகவல் : கடனை சமாளித்து சேமிக்கும் வழிகள்...!

தினம் ஒரு தகவல் : கடனை சமாளித்து சேமிக்கும் வழிகள்...!
நீங்கள் 30 வயதை கடந்தவர் என்றால், உங்களில் பலருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும். ஆனால் உங்களை சுற்றி கடன்களும் இருக்கும்.
வருமானம் எவ்வளவு வந்தாலும் செலவுகள் குறையாமல் இருக்கும். இருக்கும் கடன் மற்றும் இ.எம்.ஐ. பிரச்சினையில் எப்படி சேமிக்க முடியும் என்று பலரும் புலம்புவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அனைவராலும் சேமிக்க முடியும் என்பது உண்மை.

மாத சம்பளம் வாங்குபவர்களை குறிவைத்து வீசப்படும் மிகப்பெரிய வலை என்றால் அது கிரெடிட் கார்டு தான். மாதம் முழுவதும் செலவழியுங்கள், அதன்பிறகு அடுத்த மாதத்தின் 20-ந் தேதிக்குள் வட்டி இல்லாமல் பணத்தை கட்டுங்கள் என்று கைமாத்து கொடுப்பது போல் கடன் கொடுக்க பல வங்கிகள் காத்துக்கிடக்கின்றன. ஆனால் இதில் மூழ்கிவிடாமல் இருந்தாலே நிறைய சேமிக்கலாம். ஒரு வேளை கிரெடிட் கார்டு கடனில் இருந்தால் மற்ற எந்த கடமை இருந்தாலும் ஓரமாக வைத்துவிட்டு அதை முடிக்க வேண்டும். கடினமாக இருந்தாலும் முடித்துவிட்டால் நிறைய பணம் உங்களுக்கு மிச்சம் ஆகும். சிலர் வீடு ஒத்தி வாங்குவதற்காக பர்சனல் லோன் எடுத்திருப்பார்கள், சிலர் வீடு வாங்க கடன் வாங்கி இருப்பார்கள். சிலர் வாகன கடன் வைத்திருப்பார்கள். இது எல்லாம் நிச்சயம் நல்ல கடன் தான். இவற்றால் உங்களுக்கு பொருள் அல்லது வீடு நிச்சயம் கிடைக்கும். அதேநேரம் வீட்டில் ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்து கடனுக்கு மாத தவணை போட்டிருந்தால் நிச்சயம் தவறு தான்.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் உங்களால் சொத்து சேர்க்க முடியாமல் இருந்தால் கூட கவலைப்பட வேண்டாம். கட்டாயம் காப்பீடு செய்துவிடுங்கள். இது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்கும். இதற்காக பல காப்பீடுகள் இப்போது உள்ளன. மாத சம்பளதாரர்களுக்கு முக்கியமானது பி.எப். இதில் இப்போது புதிதாக தானாக முன்வந்து பணம் சேமிக்கும் வசதி உள்ளது. எனவே உங்களால் முடிந்த அளவு மாதம் மாதம் கூடுதல் தொகை அதில் போட்டு வந்தால் மிகப்பெரிய நன்மை கிடைக்கும். ஏனெனில் வங்கிகளை விட மிக அதிக வட்டியை 8 சதவீதற்கு மேல் பி.எப். வழங்குகிறது. வருமான வரிச்சலுகையும் உண்டு.

ஏதேனும் ஒரு கடமைக்கு பணத்தை செலுத்தும் வகையில் உங்களை எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வது, நிலம் வாங்குவது, நகைகள் வாங்குவது, போன்றவற்றுக்காக மாதம் மாதம் முதலீடு செய்யுங்கள். இப்படி செய்தால் வீண் செலவு என்ற கூண்டுக்குள் பெரும்பாலும் சிக்க மாட்டீர்கள்.

எல்லோருக்கும் சேமிக்கும் நீங்கள் உங்களை பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால் இன்றைக்கு தனியார் நிறுவனங்களில் வேலையில் நீடிப்பது பெரிய விஷயமாக உள்ளது. எனவே இப்போதே ஓய்வுக்கான முதலீட்டுக்கு திட்டமிடுங்கள். ஏராளமான பென்சன் திட்டங்கள் இப்போது உள்ளன. வாலன்டரி பிராவிடன்ட் பண்ட், பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் என அரசு உள்பட பல நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. உங்களுக்கு விருப்பம் உள்ளதை தேர்வு செய்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது அனுபவிப்பதற்கு தான். ஆனால் இளமையில் எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டு பின்னர் வயதான காலத்திலோ அல்லது வேலை இல்லாத காலத்திலோ பணம் இல்லாமல் அவஸ்தை பட வேண்டாம். பி.எப். பணத்தை எந்த சூழ்நிலையிலும் எடுக்காதீர்கள். உங்களுக்கு வேலை இல்லாத சூழல் வந்தாலோ அல்லது ஓய்வு பெறும் காலத்திலோ அது தான் உங்கள் உயிர் நாடியாக இருக்கும்.