சிறப்புக் கட்டுரைகள்

இது.. அதிசயமான காதல்.. ஆச்சரியமான வாழ்க்கை.. + "||" + This is .. amazing love .. amazing life ..

இது.. அதிசயமான காதல்.. ஆச்சரியமான வாழ்க்கை..

இது.. அதிசயமான காதல்.. ஆச்சரியமான வாழ்க்கை..
லட்சுமி அம்மாளுக்கு 65 வயது. அவருக்கு 16 வயதில் திருமணம் நடந்திருக்கிறது.
ட்சுமி அம்மாளுக்கு 65 வயது. அவருக்கு 16 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. அப்போது கணவருக்கு 48 வயது. இத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் அவர்கள் தாம்பத்யம் இனிமையாகவே நடந்திருக்கிறது. 20 வருடங்களுக்கு முன்னால் கணவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில், கொச்சனியன் என்பவர் கையில் லட்சுமிஅம்மாளை ஒப்படைத்துவிட்டு, ‘இனி நீதான் இவளுக்கு எல்லாமுமாய் இருந்து இவளை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என்றுகூறிவிட்டு கண்மூடிவிட்டார்.

அதன்பின்பு 20 வருடங்களாக கொச்சனியனும்- லட்சுமி அம்மாளும் காதலித்திருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதால் மறுமணத்திற்கு லட்சுமி அம்மாள் உடன்படவில்லை. ஆனால் இருவரும் எல்லைமீறிய நேசம் பாராட்டியிருக்கிறார்கள். ஆதரவற்ற அவர்கள் இருவரும் கேரள அரசு பராமரித்து வரும் முதியோர் இல்லங்களில் தனித்தனியாக வசித்துவந்தார்கள். இப்போது அவர்கள் திருமணம் நடந்திருக்கிறது. கொச்சனியனுக்கு 67 வயது. இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். அந்த மாநில மந்திரி முன்னிலையிலே அவர்கள் திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நெகிழவைக்கும் இந்த அபூர்வ காதல் கதையை தொடர்ந்து படியுங்கள்! லட்சுமி அம்மாள் சொல்கிறார்:

“எனக்கு 16 வயதில் திருமணம் நடந்தது. அப்போது என் கணவர் கிருஷ்ணய்யருக்கு 48 வயது. அவர் தெய்வீக பணிகளை செய்துவந்தவர். அவரிடம் கொச்சனியன் உதவியாளராக வேலைபார்த்தார். நான் என் கணவரை சுவாமி என்றுதான் அழைப்பேன். என் கணவர் நோய்வாய்ப்பட்டு ஒரு மாதம் படுத்தபடுக்கையாக கிடந்தார். அவர் இறந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன.

இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் என் கைகளை பிடித்து கொச்சனியனிடம் கொடுத்து, என்னை இவரிடம் ஒப்படைத்தார். எங்கள் இருவருக்கும் நல்ல அறிமுகம் இருந்ததால் நான் மகிழ்ச்சியடைந்தேன். என் கணவர் இறந்த பின்பு கொச்சனியன் என்னிடம், ‘நாம் திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று கேட்டார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. நானும், இவரும் வெவ்வேறு சமூக பிரிவுகளை சேர்ந்தவர்கள். அதுமட்டுமின்றி நான் விதவை. கொச்சனியன் திருமணமே செய்துகொள்ளாதவர். அதனால்தான் நான் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

கணவர் இறந்த பின்பு நான் வீட்டில் தனிமரம்போல் ஆனேன். உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் என்னை கவனித்துக்கொண்டார்கள். இந்த நிலையில் கொச்சனியன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் சில மாதங்களிலே அந்த பெண் இறந்துவிட்டதால், மீண்டும் அவர் தனி ஆள் ஆகிவிட்டார். என்னை அடிக்கடி வந்து சந்திப்பார். எங்கள் பாசத்தை அக்கம்பக்கத்தினர் புரிந்துகொண்டார்கள். நான் திருமணத்திற்கு சம்மதிக்காவிட்டாலும் பல ஆண்டுகளாக எங்கள் காதல் தொடர்ந்துகொண்டிருந்தது.

என் கணவர் நோய்வாய்ப்பட்டிருந்ததால் மருத்துவத்திற்கு நிறைய பணம் செலவு செய்து நான் கடன்பட்டிருந்தேன். வீட்டையும், சொத்தையும் விற்று கடன்களை அடைத்தேன். அதனால் வாடகை வீட்டில் வசித்தேன். பின்பு உறவினர்கள் அழைத்ததால் அவர்களுடன் சென்றுவிட்டேன். கொச்சனியன் அங்கே என்னை தேடிவருவார். எங்கள் பந்தத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்கிறார், லட்சுமி அம்மாள்.

இவர் ஒருமுறை கீழே விழுந்து கால் விரல்களில் பலத்த அடிபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது கொச்சனியன்தான் உடனிருந்து கவனித்திருக்கிறார்.

“உடல்நிலை சரியானதும் எங்கு போவது என்று தெரியவில்லை. அதனால் ராமவர்மபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் போய் சேர்ந்தேன். என்னை பார்க்க இவர் அங்கும் வருவார். முதியோர் இல்லத்தில் எழுதிக்கொடுத்துவிட்டு நான் இவரோடு வெளியே வந்துவிடுவேன். உறவினர்களின் வீடுகளில் நாலைந்து நாட்கள் தங்குவோம். சினிமாவுக்கு செல்வோம். கோவிலுக்கும் போவோம். மீண்டும் என்னை கொண்டுவந்து முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவார்.

ஒருமுறை இவர் குருவாயூர் போவதாக என்னிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பின்பு இரண்டு மூன்று வாரங்களாக இவரை காணவில்லை. நான் பயந்துவிட்டேன். என்னவென்று விசாரித்தபோது, இவர் குருவாயூரில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது திடீரென்று நினைவிழந்து கீழே சரிந்திருக்கிறார். அங்கிருந்து அவரை வயநாட்டில் உள்ள அரசு முதியோர் இல்லத்தில் அனுமதித்து சிகிச்சையளித்திருக்கிறார்கள். அங்கே 15 நாட்கள் நினைவிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். நினைவு திரும்பியதும் என் பெயரை கூறி அழைத்திருக்கிறார்.

பின்பு அரசு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துவந்து நான் தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். நாங்கள் மனம் இணைந்துவிட்டோம். எனக்கு வேறுயாரும் இல்லை. நாங்கள்தான் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தோம். அப்போதுதான் நான் அவரிடம், ‘குருவாயூருக்கு போகவேண்டும்’ என்றேன். அதற்கு அவர், ‘அப்படியானால் நாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும்’ என்றார்.

என் மனது ஒன்றும் கல் இல்லை. நான் வேறு எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. திருமணத்திற்கு சம்மதித்தேன். திருமண நாளன்று என் மனது முழுக்க மகிழ்ச்சி உருவானது. இளம் வயது நினைவுகளில் மூழ்கிப்போனேன். இப்போது, இன்னும் கொஞ்ச காலம் நன்றாக வாழ்ந்துவிட்டு இறந்துபோகலாம் என்ற எண்ணம் வந்திருக்கிறது” என்று மகிழ்ச்சியாக சொல்கிறார்.

கேரளாவில் உள்ள அரசு முதியோர் இல்லங்களில் வாழும் முதிய ஜோடிகளுக்குள் நடந்த முதல் திருமணம் என்ற அந்தஸ்தை இவர்களது மணவிழா பெற்றிருக்கிறது. அந்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் பணம் வசூலித்து இவருக்கு தாலி வாங்கிகொடுத்திருக்கிறார்கள். அதை கொச்சனியன், லட்சுமி அம்மாள் கழுத்தில் கட்டி அவரை மனைவியாக ஏற்றிருக்கிறார். மந்திரி வி.எஸ்.அனில்குமார் இந்த மணவிழாவில் பங்கேற்றுள்ளார். ஏராளமான அதிகாரிகளும், அரசியல்கட்சிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்று வாழ்த்தியிருக்கிறார்கள்.

“எங்களை கடவுள்தான் ஒன்றாக்கியிருக்கிறார். எங்கள் ஜாதகத்தை கணித்தவர்களும் நாங்கள் ஒன்று சேருவோம் என்றார்கள். நாங்கள் நெருக்கமாக இருந்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும். வீட்டின் அருகில் உள்ள கோவிலில் இருந்து நாங்கள் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம்.

என்னை பற்றி அவருக்கும், அவரை பற்றி எனக்கும் நன்றாக தெரியும். நான் சுத்தசைவம். மோர்க்குழம்பும், சாம்பாரும்தான் சாப்பிடுவேன். அவருக்கு பிடித்த மாமிச உணவை அவர் இலையில் பொதிந்து வாங்கிவருவார். நான் கொடுக்கும் சாதத்தோடு கலந்து சாப்பிட்டுவிட்டு கைகளை நன்றாக கழுவிவிடுவார். இவருக்கு ஒரு கை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். இவர் நன்றாக பாடுவார். இவர் பாடினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார், லட்சுமி அம்மாள்.

“எனக்கு பெரிய ஆசைகள் ஒன்றும் இல்லை. நாதஸ்வரம் இசைப்பேன். வாய்ப்பாட்டும் பாடுவேன். அதில் ஏதோ வருமானம் வந்துகொண்டிருக்கிறது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக நகர்த்தவேண்டியதுதான்..” என்கிறார், கொச்சனியன்.

கேரள அரசின் திருச்சூர் பிரிவு முதியோர் நல அமைப்பின் கண்காணிப்பாளர் வி.ஜி.ஜெயகுமார் கூறுகையில், “முதியோர் இல்லங்களின் பராமரிப்பில் இருப்பவர்கள் பரஸ்பரம் விரும்பி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டால், அதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லாமல் இருந்தால், சமூக நீதி துறை அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும். அப்படி திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் தங்கிக்கொள்ள இட வசதியும் செய்துகொடுப்போம். அதற்கான முடிவுகளை அரசு துறை சார்பில் எடுத்திருக்கிறோம்” என்றார்.

முதுமையின் தனிமை நீங்கட்டும்.. வாழ்வில் இனிமை சேரட்டும்!

ஆசிரியரின் தேர்வுகள்...