மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரம் இல்லை- ஊரடங்கால் உடைந்து போன பீங்கான் தொழிலாளர்கள் நிலைமை எப்போது சீரடையும்? என எதிர்பார்ப்பு


ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பீங்கான் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலாளி செந்தில் பெருமாள். (இடம் மயிலாப்பூர்)
x
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பீங்கான் பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலாளி செந்தில் பெருமாள். (இடம் மயிலாப்பூர்)
தினத்தந்தி 21 May 2020 1:00 AM GMT (Updated: 21 May 2020 1:00 AM GMT)

ஊரடங்கால் பீங்கான் தொழிலாளர்கள் உடைந்து போயிருக்கிறார்கள். மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரம் இல்லை என்றும், நிலைமை எப்போது சீரடையும்? என்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. சமீபத்தில் அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சாலையோர கடைகள் உட்பட பல கடைகள் உயிர்பெற்றுள்ளன. கடைகள் திறக்கப்பட்டாலும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடப்பதில்லை. இதனால் வியாபாரிகள் கவலை தோய்ந்த முகத்துடனேயே காணப்படுகின்றனர்.

இவ்வாறு வியாபாரம் நடக்கவில்லையே என வருத்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களில் பீங்கான் தொழிலாளர்களும் அடங்குவர். என்னதான் கண்ணாடியிலும், எவர் சில்வரிலும் பாத்திரங்கள் இருந்தாலும் அருமையான வேலைப்பாடுகளுடன் கண்ணை பறிக்கும் பீங்கான் பொருட்களும் கைகோர்க்கும் போதுதான் சமையலறை அழகு பெறுகிறது. இதனாலேயே ஒவ்வொரு வீட்டிலும் பீங்கானில் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருள் அலங்கரித்து கொண்டிருக்கும். அதன் காரணமாக பீங்கானில் செய்யப்படும் பொருட்கள் மீது மக்களுக்கு தனி ஆர்வம் நிச்சயம் உண்டு.

கடைக்காரர்களின் வருத்தம்

தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் பீங்கான் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் மாட வீதிகளில் ஏராளமான பீங்கான் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. அத்துடன் மண்பானைகள், மண்சட்டிகள் உள்பட மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும் விற்கப்படுகின்றன.

சிறிய டம்ளர், டீக்கப்புகள், தட்டுகள், ஜாடிகள், ஊறுகாய் பாட்டில்கள், அஞ்சறைப் பெட்டிகள், டிரேக்கள், பூ ஜாடிகள், உப்பு மற்றும் மசாலா பொருட்கள் வைக்கும் ஜாடிகள், தண்ணீர் ஜாடிகள் என விதவிதமான வடிவங்களில் பீங்கானில் செய்யப்பட்ட பொருட்கள் கண்ணை பறிக்கின்றன. ஆனால் இப்பொருட்களை விற்பனை செய்ய அமர்ந்திருக்கும் வியாபாரிகள் கண்களில் வருத்தமே காணப்படுகிறது. இதனால் தினமும் பொருட்களை எடுத்து அடுக்கி வைத்து சாலையை வெறித்து பார்த்து அமர்வதும், பின்னர் பொருட்களை மூட்டை கட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு செல்வதுமாகவே கடைக்காரர்களின் நிலைமை இருக்கிறது.

மோசமான சூழ்நிலை

இதுகுறித்து மயிலாப்பூர் மாட வீதியில் பீங்கான் பொருட்கள் கடை வைத்திருக்கும் செந்தில் பெருமாள் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். விநாயகர் சதுர்த்தி, கொலு என ஒவ்வொரு முறையும் பண்டிகை காலத்துக்கேற்ப விதவிதமான பீங்கான் பொருட்களை அறிமுகப்படுத்தும்போது, இங்குள்ள மக்கள் ஆர்வமாக வாங்குவார்கள். வெளியூரில் இருக்கும் தங்களது உறவினர்களுக்கு வாங்கி செல்வார்கள். தற்போது கொரோனா காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லை.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மோசமான சூழ்நிலையை அனுபவித்து வருகிறோம். முன்பு தினமும் ரூ.500 முதல் ரூ.600 வரை வருமானம் கிடைக்கும். ஊரடங்கு தொடங்கியதில் இருந்து ‘டீ’ குடிக்க கூட வியாபாரம் ஆவதில்லை. அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. எனது அனுபவத்தில் இப்படி ஒரு நிலைமையை நான் சந்தித்ததே இல்லை. என்னை போல மாட வீதிகளில் சாலையோர கடைகள் வைத்திருக்கும் அனைத்து வியாபாரிகளும் வருமானம் இன்றி தவிக்கிறோம். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மயிலாப்பூர் மாட வீதிகள் இப்போது பழைய மவுசு குறைந்தே காட்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story