காலத்தை கணித்து செயல்படும் தேனீக்கள்


காலத்தை கணித்து செயல்படும் தேனீக்கள்
x
தினத்தந்தி 4 Jun 2020 10:48 PM GMT (Updated: 4 Jun 2020 10:48 PM GMT)

குட்டீஸ்..! நீங்க எல்லோரும் தேன் சாப்பிட்டிருப்பீங்க இல்லையா..? அந்த தேனை சேகரிக்க தேனீக்கள் எவ்வளவு உழைக்கின்றன என்பதை நீங்க படிச்சா ஆச்சரியப்படுவீங்க..!

தேனீக்கள் பூக்களிலிருந்து எடுத்த தேனை அவற்றின் கூட்டில் சேமித்து வைக்கின்றன. அவற்றின் கூடுகள் கணித ரீதியான உள் கட்டமைப்பும், உறுதியும் கொண்டதாக இருக்கும். வெவ்வேறு மாடல்களில் இருக்கும் அந்த கூட்டுக்குள் இருக்கிற அறைகளில் ராணித்தேனீ, ஆண் தேனீ மற்றும் வேலைக்காரத் தேனீ என்ற மூன்று வகைகள் வசிக்கின்றன.

தேனீக்கள் கூட்டுக் குடும்பமாக வாழும் குணம் கொண்டவை. குடும்ப நலனுக்காக எப்பவுமே சுறுசுறுப்போடு உழைப்பதுடன், மற்ற தேனீக்களையும் காப்பாற்றும் குணமும் கொண்டவை. அவற்றின் கூட்டை அகற்றும் முயற்சியில் ஈடுபடும் மனிதர்களை கொட்டி, கூட்டை பாதுகாக்கின்றன. அந்த முயற்சியில் தனது உயிரையும் இழந்து விடுகின்றன.

பூக்களிலிருந்து தேனை உறிஞ்ச நீண்ட குழல் வடிவ நாக்கும், பூவின் வாசனையை அறிவதற்கு சிறப்பு உணர் கொம்புகளையும் தேனீக்களுக்கு இருக்கின்றன. அவை, காற்றில் ஒரு வித வாசனையை பரப்பி, மற்ற தேனீக்களுடன் தொடர்பு கொள்கின்றன. அதுமட்டும் இல்லாமல், தேன் உள்ள மலர்கள் இருக்கும் இடம், தூரம், அதில் உள்ள தேனின் தரம் மற்றும் அளவு போன்ற செய்திகளை நடன அசைவுகளின் மூலமாக மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன. அதை மற்ற தேனீக்களுக்கு அங்கே எப்படி போவது என்பதை ஒரு ஓவியம் போல காற்றில் வரைந்து காட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது. அந்தப் பாதை, மலரை அடைவதற்கான சுலபமான வழியாக இருக்கும். அதை அறிந்த பின்னர் தேனீக்கள் மலரை நோக்கி வேகமாக பறக்கின்றன. அப்படி வேகமாக பறக்கும்போது அவை தங்களோட இறக்கைகளை நொடிக்கு சுமார் 230 தடவை அசைப்பதாக கண்டுபிடிச்சிருக்காங்க..! தேனீக்களோட நடன அசைவுகள் பற்றிய ரகசியத்தை மனிதர்களால் இன்றளவும் முழுமையாக புரிந்து கொள்ள இயலவில்லை. ரொம்ப ஆச்சரியம் இல்லையா.

வேலைக்கார தேனீக்கள் கிட்டத்தட்ட 2000 அடி தூரத்தில் உள்ள பூக்களின் வாசனையைக் கூட நுகர்ந்து அறிந்து கொள்கின்றன. அவை, தொடர்ச்சியாக 10 கி.மீ தூரம் வரையிலும் நிற்காமல் பறக்க முடியும். ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட முப்பது பூக்களில் அமர்ந்து தேனை உறிஞ்சி எடுத்துக்கிட்டு, தன்னிடம் உள்ள ஒரு பை போன்ற அமைப்பில் சேர்த்து வைக்கின்றன. அது நிரம்பியவுடன் கூட்டிற்கு திரும்பி வந்து தேனைக் நிரப்பி விட்டு மறுபடியும் தேனை எடுக்க புறப்பட்டு விடுகின்றன. அடேங்கப்பா என்ன ஒரு சுறுசுறுப்பு..?

பூக்கள் தேனை வெவ்வேறு காலகட்டங்களில் சுரக்கின்றன. தேனீக்கள் அந்த நேர வித்தியாசத்தை ரொம்ப சரியாக கண்டறிந்து, சரியான காலத்தில் சென்று தேனை சேகரிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வகை மலரில் நிறைய தேன் கிடைத்து விட்டால், அந்த நேரத்தை தேனீ தனது மூளையில் பதிவு செய்து கொண்டு அதற்கேற்ப வரும் நாட்களில் செயல்படுகிறது.

அது மட்டுமல்லாமல், அருகில் உள்ள பகுதியில் இருக்கும் தோட்டங்களில் பூத்திருக்கும் மலர்கள் பற்றிய அட்டவணையையும் பதிவு செய்துகொள்கின்றன. அப்போது சூரியன் இருக்கும் நிலை, அதன் வெப்பம் ஆகியவற்றின் மூலம் காலத்தையும் கணக்கிட்டுக்கொள்கின்றன. அதற்கேற்ப தினமும் அந்த பூக்களுக்கு சென்று தேனை சேகரிக்கின்றன. சின்ன பூச்சியாக இருந்தாலும் அவற்றின் திறமையை பார்த்தீர்களா..? அதனால்தான் சுறுசுறுப்புக்கு தேனீயை உதாரணமாக நம்ம பெரியவங்க சொல்லி இருக்காங்க.

Next Story