கொரோனா, பருவ கால வைரசாக மாறும்- விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்


கொரோனா, பருவ கால வைரசாக மாறும்- விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 15 Sep 2020 11:15 PM GMT (Updated: 15 Sep 2020 7:01 PM GMT)

கொரோனா வைரஸ், பருவ கால வைரசாக மாறும் என்ற அதிர்ச்சி தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

துபாய், 

உலக நாடுகளையெல்லாம் இன்றளவும் நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசின் தன்மையை பற்றி லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து தங்கள் முடிவுகளை ‘பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் இவை:-

* கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து உலகத்தில் தங்கி இருக்கும். இது மந்தை எதிர்ப்புச்சக்தியை மனிதர்கள் அடைகிற வரையில் ஆண்டு முழுவதும் பருவ கால நோய்போல வலம் வரும். எனவே பொதுமக்கள் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் முக கவசங்களை அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது, கை சுத்தம் பின்பற்றுவது, கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்ட சிறந்த தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர வேண்டும்.

* மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகிற வரையில், கொரோனாவின் பல அலைகள் பொதுமக்களை வந்து தாக்கும்.

* இன்புளூவன்சா மற்றும் பொதுவான கொரோனா வைரஸ்கள் மிதமான வெப்ப பகுதிகளில் குளிர்காலத்தில் உச்சம் பெறுகின்றன. ஆனால் வெப்ப மண்டல பகுதிகளில் ஆண்டு முழுவதும் பரவுகின்றன.

* காற்றிலும், காற்றின் பரப்புகளிலும் வைரஸ் உயிர்வாழும்.

* காய்ச்சல் போன்ற பிற சுவாச நோய்களுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவும் தன்மையை கொண்டிருக்கிறது.

* மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான தொற்றுகளின் மூலமாகவோ அல்லது தடுப்பூசிகள் மூலமாகவோ அடைந்து விட்டால், கொரோனா வைரஸ் பரவல் விகிதம் கணிசமாக குறைய வேண்டும். இதனால் பருவ கால காரணிகளுக்கு வைரஸ் அதிகமாக பாதிக்கப்படும்.

* இன்புளூவன்சா போன்ற அதே சுழற்சி முறையைப் பின்பற்றுகிற என்.எல்.63 மற்றும் எச்கேயு 1 போன்ற மிக சமீபத்தில் வெளிவந்தவை உள்ளிட்ட பிற கொரோனா வைரஸ்களுக்கும் இது போன்ற பருவ நிலை பதிவாகி உள்ளது.

* கொரோனா வைரஸ் தனிநபர் பாதிப்புவிகிதம், வளைகுடா நாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் பருவ கால நோயாக ஆண்டு முழுவதும் வலம் வரும் என்கிற நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு சக்தியை (மந்தை எதிர்ப்பு சக்தியை) பெறுகிற வரையில், அதை தடுப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றுவதுதான், வைரஸ் தாக்குவதில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

Next Story